இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். ஜுன் 10

இயேசுவின் திருஇருதயம் விசுவாச வாழ்விற்கு ஆசிரியர்.

பிதாவாகிய இயேசுகிறிஸ்து நாதர் இவ்வுலகத்துக்கு அனுப்பப்பட்டது தமது சத்திய வேதத்தின் உண்மையை மனிதர்களுக்கு அறிவித்து, சுபாவத்துக்கு மேலான வாழ்வையும், ஆத்தும மீட்பின் அவசியத்தையும் கற்பித்து இவ்வுலக காரியங்களிலிருந்து நமது இருதயப் பற்றுதல்களை நீக்கி நித்திய மோட்சானந்த பாக்கியத்தின் பற்றுதல்களை பலப்படும் படி செய்து விசுவாசமும் அன்பும் நிறைந்த புது வாழ்வை கற்றுக்கொடுக்கவே இவ்வுலகத்துக்கு வந்தார்.

விசுவாசத்தால்தான் நாம் இறைவனையும் இயேசுக் கிறிஸ்துவையும் கடைசி நிலையையும் பரிசுத்த திருச்சபையையும், நமது திவ்விய வேதத்தையும், அதன் சத்தியங்கள் முழுமையையும் அறிகிறோம். உண்மையான விசுவாசத்துக்கும், அந்த விசுவாசத்தை அனுபவத்திற்கு கொண்டு வருகிறதற்கும் பெரிய தடையாயிருப்பது அறியாமைதான். மறைக்கல்வி தெரியாதவர்களுக்கு இயேசுவின் திரு இருதயப் பக்தர்கள் அதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். கத்தோலிக்கப் புத்தகங்கள், பத்திரிகைகளை வாசிக்கக் கொடுக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு வாசித்துக் காட்ட வேண்டும். இப்படிச் செய்தால் அறியாமை நீங்கி புதுத் தெளிவு உண்டாகும். இயேசுவின் திருஇருதயத்துக்கு இதைவிட பிடித்தமானது வேறொன்றுமில்லை.

நல்ல கிறிஸ்தவர்களென்று அழைக்கப்படுகிறவர்கள் முதலாய் வேதப் படிப்பினையில் பின் தங்கிய நிலையிலிருக்கிறார்கள். ஆனால் குருக்களின் மறையுரைகளுக்கு காது கொடுத்து, நாளுக்கு நாள் கத்தோலிக்க மறையின் உண்மையை அதிகமதிகமாய் அறிந்து கிறிஸ்தவர்களுடைய கடமைகளைச் செய்து தாங்கள் நன்முறையில் நடந்து மற்றவர்களிடத்தில் உற்சாகமும், பிரகாசமும் வளரப் பண்ணுவது சிறந்த முறையாகும். சில கிறிஸ்தவர்கள் அறியாமையினால் இறைவனுக்குகந்த கடமைகளை நிறைவேற்றாமல் விட்டு விடுகிறார்கள். அவர்களுக்கு நன்மையும் தீமையும் நன்றே. ஏதோ மறு உலக வாழ்வு இல்லாதது போலவும், நம் வாழ்வின் முடிவில் கணக்குக் கொடுக்க தேவையில்லையென்றும் வாழ்வார்கள். நித்திய வாழ்வுக்கடுத்த உண்மைகளைப் பற்றி அவர்களுக்கு தெளிந்த அறிவு இல்லை.

புண்ணிய பயிற்சியினாலும், நன்மாதிரிகையினாலும், தங்களுக்கும் பிறருக்கும் ஆத்தும் மீட்பைத் தேடுவதற்குப் பதிலாய் சில பக்தி முயற்சிகளை கடமைக்கு அனுசரிப்பார்கள். திருஇருதய அன்பர்களோவென்றால் தங்களுடைய விசுவாசத்தை உயிர்ப்பித்து, இயேசுவின் திருஇருதய வாழ்வைத் தங்களிடத்தில் பிறப்பிப்பார்கள்.

நசரேத்தூரில் திவ்விய இயேசு வெளிப் பார்வைக்கு மற்ற சாதாரண குழந்தைகளைப்போல் தான் இருந்தார். ஆனால் உண்மையில் அவருடைய வாழ்வு முற்றிலும் வித்தியாசமான தெய்வீக வாழ்வு. தேவ குமாரனுடைய அளவில்லாத பரிசுத்தத்தனத்தால் நிறையப் பெற்ற வாழ்வு. நம்மிடத்தில் உயிருள்ள விசுவாசமிருந்தால் விசுவாசத்துக்குத் தகுந்தது போல் நம்முடைய வாழ்விருக்கும். இயேசுவின் திருஇருதய செயல்களோடு நம்முடைய செயல்களும் ஐக்கியப்படும். உலக நாட்டமும், தீய கிறிஸ்தவர்களுடைய தன்மையும் வேத விரோதிகளது எதிர் போக்கும் நம்மிடம் உண்டாகாமல் இயேசுவின் திருஇருதய நோக்கமும் புனிதர்களின் தன்மையும் நம்மிடம் குடிகொள்ளும்.

தங்களுடைய புண்ணிய மாதிரிகைகளால் மற்றக் கிறிஸ்தவர்களுக்கு மேலாய் தேவ ஊழியத்தில் விளங்கி வாழ்கிற சில கிறிஸ்தவர்கள் நமது பங்குகளிலிருப்பது மிகவும் அவசியமும் பயனுமுள்ளது. உயிருள்ள விசுவாசமும் அன்பும் நிறைந்த இருதயமுடைய இத்தகைய கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு பங்கிலும் இருப்பார்களேயாகில் நம் இந்திய நாட்டில் மாற்றம் உண்டாகும். எத்தனையோ பிற மதத்தினர் மனந்திரும்பி விண்ணரசு செல்ல உதவியாயிருக்கும். இறைவனை அன்புச் செய்து வணங்கவும், அதனால் தங்கள் ஆத்துமத்தை இரட்சிக்கவுமே அவர்கள் நன்றாய் அறிந்திருக்கிறார்கள். “ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” (மத்தேயு 6:33)

என்று கூறிய இயேசுக்கிறிஸ்துவின் கற்பனைக்கும் போதனைக்கும் ஒத்தபடி அவர்கள் வாழ்கிறார்கள். தவிர மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? (மத் 16 : 26) என்ற கிறிஸ்துவின் அருள்வாக்கு அவர்கள் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

லொயோலா பட்டணத்தில் தூய இஞ்ஞாசியார் இயேசுசபையை நிறுவி மேலான குணங்கள் உள்ள இளைஞனை தன் வசம் சேர்க்க முற்பட்டார். அந்த இளைஞன் உலக ஆசாபாசங்களில் மூழ்கியிருந்தான்.

தூய இஞ்ஞாசியர் அந்த இளைஞனைக் கண்டு மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தன் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குப் பயன் என்ன? என்னும் கிறிஸ்துவின் வார்த்தையை அடிக்கடி நினைப்பூட்டுவார். அதனால் அவ்விளைஞன் அதை உணர்ந்து உலகத்தைத் துறந்து தன்னை முழுதும் இயேசுகிறிஸ்துவுக்குக் கையளித்து இயேசு சபையில் நுழைந்து குருவானார். இவர்தான் நாட்டுக்கு மீட்புக் கொண்டு வந்த புனித பிரான்சிஸ் சவேரியாராவார்.

இஸ்பான்ய தேசத்தில் சிறந்த பிரபு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஓர் இளைஞர் இருந்தார். இவருக்கு அரச அரண்மனையில் பொறுப்பான வேலை கிடைத்தது. இச்சமயம் இஸபெல்லா இராணி இறந்து போனார். அரச வம்சத்தாரோடு அடக்கஞ் செய்ய வேண்டியிருந்ததால் இராணியின் சடலத்தோடு இந்த இளைஞனும் போகவேண்டியிருந்தது. குறிக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யுமுன் இது இராணியின் சடலந்தானென்று இந்தப் பிரபுவானவர் உறுதி மொழி கூறவேண்டியிருந்ததினால் அந்த சடலப் பெட்டியைத் திறந்தார்கள். அந்த இளைஞர் இராணியின் முகத்தைப் பார்த்தார். சாவானது அழகு முகத்தை எவ்வளவு சீர்குலைத்துவிட்டது என்று அந்த இளைஞர் பிரமித்து நின்றார். திவ்விய இயேசுவின் அருட்கொடை அதே நிமிடத்தில் அவரிருதயத்தில் இறங்கி அவருடைய புத்திக்கு பிரகாசத்தையும் மனதுக்குத் திடனையும் கொடுத்தது. அழிவுக்குரிய உலக மகிமையைப் பெரிதாக எண்ணிப் பின்பற்றுவது என்ன அறியாமை. ஒரு போதும் இறவாத அந்த ஏக இறைவனுக்கு இதே நிமிடம் என்னை முழுதும் கையளித்து ஒப்புக் கொடுக்கிறேன் என்று கூறி எல்லாவற்றாயும் துறந்து இயேசு சபையில் நுழைந்து மூன்றாவது தலைவராக நியமிக்கப்பட்டு பெரும் புனிதனானார். அவர்தான் புனித பிரான்சிஸ்கு போர்ஜியார். இறைவனின் அருள்கொடையும் உறுதியுள்ள விசுவாசமும் ஆத்துமங்களில் எவ்வளவு நன்மையை விளைவிக்கிறதென்று மேற்கூறிய சம்பவங்களால் அறிந்து கொள்ளலாம்.

புனித மார்கரீத் மரியம்மாளின் சுகிர்த வாக்கியம்.

சதையிலான இருதயத்தின் சாயலாய் வணக்கம் செலுத்துவது தமக்கு விசேஷ சந்தோசம் வருவிக்கிறதென்று இயேசுவின் திரு இருதயம் எனக்கு தீர்மானமாய்ச் சொன்னது. ஆதலால் மனிதர்களுடைய கல்லான இருதயத்தை இளக்க தமது இருதயப் படங்களை பகிங்கரமாய் ஸ்தாபிக்க வேண்டுமென்று விரும்பியதும் தவிர தமது திரு இருதயத்துக்கு இவ்வகை மரியாதை செய்கிறவர்களுக்கு தமது இருதயத்திலுள்ள ஏராளமான அருட்கொடைகளைப் பொழிவதாகவும் எனக்கு வாக்குக் கொடுத்தார்.

Comments are closed.