தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா

பியானோ வாசிப்பதில் அற்புதத் திறமை கொண்ட Ignacy Jan Paderewski அவர்களின் இசை நிகழ்ச்சிக்கு, ஒரு தாய், தன் ஐந்து வயது மகனை அழைத்துச்சென்றார். மேடைக்கு அருகிலேயே தாய்க்கும், மகனுக்கும் இடம் கிடைத்தது. தன்னருகே அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணுடன் அந்தத் தாய் பேசிக்கொண்டிருந்தபோது, சிறுவன் அங்கிருந்து நழுவி, மேடைக்குப் பின்புறமாகச் சென்றான். சற்று நேரத்தில், அரங்கத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டன. அப்போதுதான், அந்தத் தாய், தன் மகன் அருகில் இல்லை என்பதை உணர்ந்தார்.

அந்நேரம், திரை விலக, அங்கு, மேடையில், பியானோவுக்கு முன் தன் மகன் அமர்ந்திருந்ததைக் கண்டு தாய் அதிர்ச்சியடைந்தார். அச்சிறுவனோ, “Twinkle, twinkle little star” என்ற மழலையர் பாடலை, பியானோவில் வாசிக்கத் துவங்கினான். அவனை, அங்கிருந்து கீழே அழைத்துவர தாய் எழுந்தபோது, பியானோ மேதை Paderewski அவர்கள் மேடையில் தோன்றினார். அவர், அச்சிறுவனிடம் சென்று, “நீ நிறுத்தாமல், தொடர்ந்து வாசி” என்று கூறினார். சிறுவன், தொடர்ந்து “Twinkle, twinkle” பாடலை வாசித்தபோது, Paderewski அவர்கள், சிறுவனோடு அமர்ந்து, அச்சிறுவனுக்கு இருபுறமும் தன் கரங்களை நீட்டி, அச்சிறுவன் வாசித்த பாடலுக்கு இன்னும் அழகூட்டும் வண்ணம், அவர் பின்னணி இசையை இணைத்தார். அச்சிறுவனும், Paderewski அவர்களும் இணைந்து, அடுத்த சில நிமிடங்கள், அரங்கத்தில் இருந்தவர்களுக்கு “Twinkle, twinkle little star” பாடலை, அழகியதோர் இசை விருந்தாகப் படைத்தனர்.

இன்று நாம் கொண்டாடும் தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு, இந்நிகழ்வு, அழகியதோர் உவமையாக உதவுகின்றது. 5 வயது சிறுவன், தட்டுத் தடுமாறி, வாசித்த மழலையர் பாடலை, தொடர்ந்து வாசிக்கும்படி தூண்டயதோடு, அவனுடன் சேர்ந்து, அப்பாடலை, அழகியதோர் இசை விருந்தாக, Paderewski அவர்கள் மாற்றினார். உலகைச் சந்திக்கப் பயந்து, தங்களையே ஒரு வீட்டில் அடைத்துக்கொண்ட சீடர்கள் நடுவே இறங்கிவந்த தூய ஆவியார், “தொடர்ந்து வாசியுங்கள்” என்று சீடர்களைத் தூண்டினார். அத்துடன், அவர்கள், அவ்வீட்டைவிட்டு துணிவுடன் வெளியேறவும், நற்செய்தியைப் பறைசாற்றவும் உதவினார். நற்செய்தியின் முதல் அரங்கேற்றம், எருசலேமில் நடைபெற்ற அந்நிகழ்வை, நாம் ‘பெந்தக்கோஸ்து’ என்ற திருநாளாக, இன்று கொண்டாடுகிறோம்.

‘பெந்தக்கோஸ்து’ என்ற சொல்லுக்கு, ‘ஐம்பதாம் நாள்’ என்று பொருள். இந்த ஐம்பது நாட்களில், தொடர்ந்து பல விழாக்களை நாம் கொண்டாடியுள்ளோம். உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து, இறை இரக்கத்தின் ஞாயிறு, அதற்குப் பின் நல்லாயன் ஞாயிறு, சென்ற வாரம், விண்ணேற்றப் பெருவிழா, இந்த ஞாயிறு, தூய அவியாரின் வருகைப் பெருவிழா என்று, நாம் கொண்டாடி மகிழ, பல ஞாயிறுகள் தொடர்ந்து வந்தன. இனிவரும் நாட்களிலும் மூவொரு இறைவன் திருவிழா, கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழா, என்று விழாக்களும், கொண்டாட்டங்களும் தொடரும். ஒவ்வொரு விழாவையும் கொண்டாடுகிறோம் என்று சொல்லும்போது, எதைக் கொண்டாடுகிறோம், எப்படி கொண்டாடுகிறோம் என்பதைச் சிந்திப்பது நல்லது.

இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ மறையின் அடித்தள உண்மைகள். இம்மறையுண்மைகள் அனைத்துமே, உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல் நடைபெற்ற நிகழ்வுகள். விழா கொண்டாடுவது எப்படி என்று, இவ்வுலகம் வகுத்துள்ள இலக்கணத்திற்கு முற்றிலும் மாறுபட்டதோர் இலக்கணத்தை இவ்விழாக்கள் வகுத்துள்ளன.

உலக விழாக்களில், கொண்டாட்டம் எதற்காக என்பதைவிட, கொண்டாட்டம் எப்படி இருக்கவேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பதைப்பொருத்தே விழாக்களின் முக்கியத்துவம் பறைசாற்றப்படும். பகட்டும், பிரம்மாண்டமும் இவ்விழாக்களின் உயிர்நாடிகளாய் விளங்கும்.

கொண்டாட்டம் என்ற சொல்லுக்கே புது இலக்கணம் தந்து, நமக்குப் பாடங்களையும் சொல்லித்தருகின்றனர், இயேசுவும், அவரது சீடர்களும். பிறரது கவனத்தை ஈர்க்குமளவு கொண்டாட்டங்கள் அமையவேண்டும் என்பதற்குப் பதிலாக, நாம் கொண்டாடும் விழாவின் உள்பொருள் எவ்வளவு தூரம் நம் வாழ்வை மாற்றுகிறது என்பதில் நம் கவனம் இருக்கவேண்டும். இவ்விதம் கொண்டாடப்படும் விழாக்கள், ஒருநாள் கேளிக்கைகளாகக் கடந்துபோகாமல், வாழ்வில் மாற்றங்களை உருவாக்கும். உலகின் கவனத்தை ஈர்க்காமல், சீடர்களின் உள்ளங்களில், அவர்கள் வழியே, நம் உள்ளங்களில், நிறைவையும், மகிழ்வையும் கொணரும் விழாக்கள் – இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை ஆகிய விழாக்கள்.

தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா நமக்குச் சொல்லித்தரும் மற்றொரு முக்கிய பாடம் – அவர் வானிலிருந்து இறங்கிவந்து சிறிது காலம் நம்மோடு தங்கிவிட்டு, மீண்டும் விண்ணகம் சென்றுவிடும் இறைவன் அல்ல, மாறாக, அவர் நமக்குள் எப்போதும் உறைந்திருக்கும் இறைவன் என்ற உண்மை. ஒரு கணமும் நம்மைவிட்டு விலகாமல் வாழும் இறை ஆவியாரை உணராமல் நாம் தேடிக்கொண்டிருப்பது, மீன் ஒன்று, கடல் நீரில் நீந்திக்கொண்டே, கடலைத் தேடியதைப் போன்ற ஒரு நிலை.

நம்முள் இருக்கும் கருவூலங்களை உணர்வது அவசியம் என்பதை உணர்த்த சொல்லப்படும் ஒரு சிறுகதை இது. “Value What You Have” – அதாவது, “உன்னிடம் உள்ளதை மதித்து வாழ்வாயாக” என்ற தலைப்புடன் சொல்லப்பட்டுள்ள கதை…

Olavo Bilac என்பவர், பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு கவிஞர், பத்திரிக்கையாளர். ஒரு நாள் அவரது நண்பர் அவரைத் தேடிவந்தார். தன்னுடைய சிறு பண்ணை வீட்டை தான் விற்க விரும்புவதாகக் கூறிய நண்பர், அதை விற்பதற்கு நல்லதொரு விளம்பரத்தை எழுதித் தரும்படி Bilacஅவர்களிடம் கேட்டுக்கொண்டார். Bilac அவர்கள், பின்வரும் விளம்பர வரிகளை எழுதினார்:

“ஓர் அழகிய பண்ணை வீடு விற்பனைக்கு வருகிறது. இங்கு பறவைகளின் கானம் அதிகாலை முதல் ஒலிக்கும். பண்ணையின் நடுவில் அழகிய, தெளிந்ததொரு நீரோடை செல்கிறது. காலை இளஞ்சூரியனின் ஒளியில் வீட்டின் முகப்பு, தினமும் குளிக்கும். மாலையில் பண்ணையில் பரவும் நிழல் நிம்மதி தரும்.” என்ற இவ்வரிகளை எழுதி நண்பரிடம் கொடுத்தார் Bilac.

ஒரு சில வாரங்கள் சென்று அவர் தன் நண்பரைச் சந்தித்தார். “என்ன? அந்த பண்ணை வீட்டை விற்றுவிட்டாயா?” என்று கேட்டார். அதற்கு நண்பர், “இல்லை நண்பா! நீ அந்தப் பண்ணை வீட்டைப்பற்றி எழுதிய விளம்பரத்தை வாசித்தபின், என் பண்ணை வீடு எவ்வளவு அழகானதென்று அறிந்துகொண்டேன். அதை நான் விற்கப்போவதில்லை.” என்று புன்னகையுடன் பதில் சொன்னார்.

நம்மைப் பற்றி, நம்மிடம் உள்ளவற்றைப் பற்றி எவ்வளவு தூரம் நாம் அறிந்துள்ளோம்; நம்மை நாமே எவ்வளவு ஆழமாய் புரிந்து வைத்திருக்கிறோம் என்பதைப் பொருத்து, நமது நல் வாழ்வு, நமது நல வாழ்வு அமையும்.

நம்மைச் சூழ்ந்துள்ள எத்தனையோ நன்மைகளை உணராமல், நமக்குள் ஊற்றெடுக்கும் கருவூலங்களைக் கண்டுகொள்ளாமல், தொடுவானங்களை, தூரத்துக் கானல்நீரை, விலகி ஓடும் நிழல்களை நாம் துரத்திச்செல்வதால், வாழ்வின் பெரும் பகுதியை, நேரத்தை நாம் வீணாக்குகிறோம். பல நேரங்களில், இந்தப் பொய்யான மாயைகளை அடைவதற்கு, நம்மிடம் உண்மையாய் இருப்பனவற்றை விலை பேசுகிறோம். நம் குடும்பம், தொழில், நண்பர்கள் என்று, நம்மைச் சூழ்ந்துள்ள நல்லவற்றை இழந்துவிட்டு, பின்னர் வருந்துகிறோம். நம்முள் உறையும் தூய ஆவியாரின் வழிநடத்துதலை ஒவ்வொரு நாள் வாழ்விலும் உணரும் வரத்தை ஒவ்வொருவருக்காகவும் வேண்டுவோம்.

இன்று நாம் ஒரு பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். ஆம்… தூய ஆவியாரின் பெருவிழா, திருஅவையின் பிறந்தநாள். குழந்தை ஒன்று நம் குடும்பத்தில் பிறந்ததும், அக்குழந்தை யாருடைய சாயலில் உள்ளது என்பதையும், குழந்தையின் தனிப்பட்ட குணங்களையும் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஆரம்பமாகும். திருஅவை என்ற குழந்தை பிறந்த விதம், பிறந்ததும், அக்குழந்தையிடம் வெளிப்பட்ட குணம் ஆகியவை, இன்றைய உலகிற்குத் தேவையானப் பாடங்களை, நமக்குச் சொல்லித் தருகின்றன.

Comments are closed.