உதவி புரிய தயாராக இருப்பதே ஒரு சாட்சிய வாழ்வுதான்

வானம் தொடர்புடையனவற்றில் பணியாற்றுவோருக்கும், விமானத்தளங்களில் பணிபுரிவோர், மற்றும், பயணிகளுக்கும், ஆன்மீகப் பணிகளை ஆற்றிவரும், அருள்பணியாளர்களை, இத்திங்களன்று, வத்திக்கானில் சந்தித்து, அவர்களுக்கு தன் பாராட்டுக்களையும் ஊக்கத்தையும் வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்துறைகளில் பணியாற்றும் அருள்பணியாளர்களுக்கென ஒன்றிணைந்த மனிதகுல முன்னேற்றம் என்ற தலைப்பில் இடம்பெற்ற உலகக் கருத்தரங்கில் கலந்துகொண்ட அருள்பணியாளர்களை, இத்திங்கள் காலை வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  தான் திருப்பயணங்களை மேற்கொண்ட வேளைகளில், விமான நிலையங்களில், ஆன்மீக அருள்பணியாளர்கள் ஆற்றும் மேய்ப்புப்பணி சேவைகளை ஆர்வமுடன் கவனித்துள்ளதாகவும், பல்வேறு மக்கள் பணிபுரியும், மற்றும், பயணம் செய்யும் இத்தகைய இடங்களில் அவர்களுக்குப் பணிபுரிய எப்போதும் தயாராக இருக்கும் அருள்பணியாளர்களின் நிலை பாராட்டுக்குரியது எனவும் கூறினார்.

பிறருக்கு உதவி புரிய எப்போதும் தயாராக இருப்பதே ஒரு சாட்சிய வாழ்வுதான் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை, பணியாளர்களுக்கும் பயணிகளுக்கும் உரிய நேரத்தில் வழங்கப்படும் உதவிகள், அவர்கள் வாழ்வில், நீண்ட கால நல்லெண்ணத்தைக் கொடுக்கும் என்பதை, மனதில் கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

விமான நிலையங்கள் வழியே பயணம் செய்யும் அனைவரும் இறைவனின் இருப்பை உணர்ந்துகொள்ள உதவும் நோக்கத்தில், அவர்களின் ஒன்றிணைந்த வளர்ச்சி, பணிகள் மீது அக்கறை, குடும்ப வாழ்வும் கலாச்சாரமும்,  மதம், பொருளாதாரம், அரசியல் வாழ்வு ஆகியவற்றின் மீது அக்கறை ஆகியவற்றுடன் ஆன்மீக அருள்பணியாளர்கள் செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

விமான நிலையங்களில் பணிபுரிவோர், விமான ஓட்டிகள் மற்றும் விமானப் பணியாளர்களுடன் நட்புணர்வுடன் பழகி, அவர்களுக்கென நேரத்தை ஒதுக்கும்போது, அது, அவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஆற்றும் சிறந்த சேவையாக இருக்கமுடியும் என, மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.