நற்செய்தி வாசக மறையுரை (ஜூன் 10)

பாஸ்கா காலம் ஏழாம் வாரம்
சனிக்கிழமை
யோவான் 21: 20-25

“நீ என்னைப் பின்தொடர்ந்து வா”

நிகழ்வு

ஒருசமயம் ஒரு குருவானவரிடம் வந்த பெரியவர் ஒருவர், “தந்தையே! திருநிலைப்படுத்துதல் (Consecration) என்றால் என்ன என்று எனக்குச் சொல்ல முடியுமா?” என்று கேட்டார். அதற்குக் குருவானவர் சிறிதும் தாமதியாமல், “நீங்கள் ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்துக்கொண்டு, அதன் அடியில் உங்களுடைய கையொப்பத்தை மட்டும் போட்டுவிட்டு, மேலே உள்ள பகுதியில் கடவுளை என்னவேண்டுமானாலும் எழுத அனுமதிப்பது” என்றார்.

“தந்தையே! நீங்கள் சொன்னதை இன்னும் விளக்கிச் சொன்னால் நன்றாக இருக்கும்” என்று பெரியவர் சொன்னதும், குருவானார் சொன்னார்: “திருநிலைப்படுத்துதல் என்பது வோன்றுமில்லை. கடவுளின் விரும்பத்தை உணர்ந்து, அவர் விரும்பியதைச் செய்ய, அவரைப் பின்தொடர்ந்து செல்வது.”

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் குருவானவர், திருநிலைப்படுத்துதலுக்குக் குறித்துச் சொன்ன வார்த்தைகள் அப்படியே சீடத்துவம் என்றால் என்ன என்பதற்குப் பொருந்தி வருகின்றது. உண்மைத்தான். கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அவரைப் பின்தொடர்ந்து செல்வதே உண்மையான சீடத்துவமாகும். இன்றைய நற்செய்தி வாசகமும் சீடத்துவ வாழ்வு என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு மிகச் சிறப்பான விளக்கத்தைத் தருகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

சீடத்துவ வாழ்வு என்பது துன்பங்களை ஏற்கத் துணிவது

இயேசு தாம் இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த பின்பு, தம் சீடர்கட்கு மூன்றாம் முறையாகத் திபேரியக் கடலருகே தோன்றும்போது, பேதுருவிடம் அவர் எவ்வாறு இறப்பார் என்பதைச் சொல்வார். இதைச் சொல்லிவிட்டு இயேசு பேதுருவிடம், “என்னைப் பின்தொடர்” என்பார். இதையடுத்து பேதுரு இயேசுவைப் பின்தொடர்ந்து செல்வார்.

இந்நிகழ்வை, இயேசு தன்னுடைய பாடுகளை முதன்முறை எடுத்துரைத்த நிகழ்வோடு ஒப்பிட்டுப் பார்ப்பது இன்னும் சிறப்பாக இருக்கும். இயேசு தன்னுடைய பாடுகளை முதன்முறையாகத் தன்னுடைய சீடர்களிடம் எடுத்துச் சொன்னபோது, பேதுரு, “ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது” (மத் 16:21- 22) என்று அவரைத் தடுக்கப் பார்ப்பார். இயேசுவைப் படைவீரர்கள் கைது செய்யவரும்போதும் படைவீரர்களுள் ஒருவருடைய வலக்காதைத் துண்டிப்பார். இவ்வாறு அவர் துன்பமே வேண்டாம் என்று இருப்பார். இப்படிப்பட்ட பேதுரு, இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவர் எப்படி இறப்பார் என்று சொன்னதை மிகவும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கின்றார். இறுதியில் இயேசுவுக்காக சிலுவையில் தலைகீழாக அறைந்து கொல்லப்படுகின்றார். இது பேதுருவின் வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் என்றுதான் சொல்லவேண்டும். துன்பமே வேண்டாம் என்று இருந்தவர், துன்பத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வது என்பது மிகப்பெரிய மாற்றம்தானே!.

இயேசுவின் முதன்மைச் சீடராக இருந்த பேதுரு, இயேசுவின் பொருட்டுத் துன்பங்களை ஏற்கத் துணிந்தார் எனில், அவருடைய எடுத்துக்காட்டைப் பின்பற்றி நடக்கும் நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் பொருட்டுத் துன்பங்களை ஏற்பது தேவையான ஒன்று.

சீடத்துவ வாழ்வு என்பது இயேசுவின்மீது மட்டுமே பார்வையைப் பதிய வைத்து வாழ்வது

சீடத்துவ வாழ்வு என்பது இயேசுவின் பொருட்டுத் துன்பங்களை ஏற்றுக்கொள்வது மட்டும் கிடையாது. இயேசுவின்மீது (மட்டுமே) நம்முடைய கண்களைப் பதிய வைத்தும் வாழ்வது.

இன்றைய நற்செய்தியில் பேதுரு இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென்று திரும்பிப் பார்க்க, அங்கு யோவானும் பின்தொடர்ந்து வருகின்றார். இது அவருடைய கவனத்தைத் திசை திருப்புவதாக இருக்கின்றது. அதனால்தான் அவர், “ஆண்டவரே இவர்க்கு என்ன ஆகும்?” என்று கேட்கின்றார். இயேசுவின் சீடர் என்பவர் அவர்மீது மட்டுமே கண்களைப் பதியவைத்து அவருடைய வழியில் நடக்கவேண்டும். அதற்கு மாறாக, அவரிடமிர்ந்து ர்வையை எடுத்துவிட்டு, வேறோர் ஆள்மேல்மீது கண்களை அல்லது கவனத்தைப் பதிவைத்தால், அவரால் இயேசுவின் சீடராக இருக்கவே முடியாது. இதைத்தான் இயேசு தன்னைப் பின்தொடர்ந்து வந்த ஒருவரிடம், “கலப்பையில் கைவைத்த பின் திரும்பிப் பார்ப்பவர் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” (லூக் 9: 62) என்கின்றார்.

ஆதலால், இயேசுவைப் பின்பற்றி நடக்கின்ற அவருடைய சீடர்கள் யாவரும் வேறு எதன்மீதும் அல்ல, இயேசுவின் மட்டும் கண்களைப் பதியவைத்து வாழ்வது மிகவும் முக்கியமானது.

சிந்தனை

‘நம்பிக்கைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவுசெய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம்’ (எபி 12: 2) என்பார் எபிரேயர்த் திருமுகத்தின் ஆசிரியர். ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம், அவர்மீது நம்முடைய கண்களைப் பதிய வைத்து, சீடத்துவ வாழ்வில் வரும் துன்பங்களைத் துணிவோடு ஏற்க அணியமாகுவோம் (தயாராகுவோம்). அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.