ஜூன் 10 : திங்கட்கிழமை. நற்செய்தி வாசகம்.
ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.
கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.
நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.
இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.
தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.
நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறு பெற்றவர்களே!
மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.”
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
மறையுரைச் சிந்தனை.
ஏன் இரக்கமுடையோர் பேறுபெற்றோர்?
ஒருசமயம் ஹாலிவுட் நடிகரான ஆண்ட்ரே (Andre) என்பவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள கிரநோபல் என்ற இடத்தின் வழியாக ஓடிக்கொண்டிருந்த ஓர் ஆறு வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது யாரோ ஒருவர், “என்னை காப்பாற்றுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள்” என்று அலறுவது போன்று இருந்தது. உடனே அவர் சத்தம் கேட்ட திசையை நோக்கிப் பார்த்தார். அங்கு ஒரு பெண்மணி ஆற்றில் இழுத்துச் செல்லப்படுவது தெரிந்தது.
ஆண்ட்ரே ஒருகணம் யோசிக்கத் தொடங்கினார். ‘நமக்குத்தான் சரியாக நீச்சல் தெரியாதே… அப்படி இருக்கும்போது ஆற்றில் இழுத்துச் செல்லப்படும் இந்தப் பெண்மணியை நாம் காப்பாற்றப்போய், அதுவே நமக்கு வினையாகிவிட்டால் என்ன செய்வது?’ பின்னர் அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. வேகமாக ஓடிச்சென்று ஆற்றுக்குள் குதித்து, உயிர்க்குப் போராடிக்கொண்டிருந்த அந்தப் பெண்மணியைக் காப்பாற்றி, கரையில் கொண்டுவந்து போட்டு, அவர் தன்னுணர்வு பெற்றதும், அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார். ஆண்ட்ரேவால் காப்பாற்றப்பட்ட அந்தப் பெண்மணியின் கணவர் அரசாங்கத்தில் மிக முக்கியமான பொறுப்பினை வகித்து வந்தார். அவரிடம் அந்தப் பெண்மணி நடந்தது அனைத்தையும் கூற, அவர், ‘என் மனைவியின் உயிரைக் காப்பாற்றிய ஆண்ட்ரேவிற்கு ஏதாவது ஒன்றைச் சிறப்பாகச் செய்யவேண்டும்’ என்று முடிவுசெய்தார். அதன்படி ஒருகுறிப்பிட்ட நாளில் ஆண்ட்ரேவிற்கு ‘சாதனை மனிதர்’ என்ற விருது கிடைக்கச் செய்தார்.
இதன்பிறகு ஆண்ட்ரேவைப் பற்றி பலர்க்கும் தெரியவந்தது. அதுவே அவர்க்கு வினையாகவும் அமைந்தது. ஆண்ட்ரே ஏதோவொரு வழக்கில் காவல்துறையால் தேடப்படும் ஒரு குற்றவாளியாக இருந்தார். விருது பெறும் நிகழ்ச்சியின் மூலமாக ஆண்ட்ரே யாரென்று காவல்துறைக்குத் தெரியவர, காவல்தறை அதிகாரிகள் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி, தக்க தண்டனை வாங்கிக்கொடுக்க முடிவுசெய்தனர். குறிப்பிட்ட நாளில் ஆண்ட்ரேவின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அவருடைய வழக்கை விசாரித்த நீதிபதி அவரிடம், “உன்மீது தொடக்கப்பட்ட வழக்கின்படி உனக்கு ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுத்திருக்கவேண்டும். ஆனால், நீ ஆபத்தில் இருந்த ஒரு பெண்ணைக் காப்பாற்றியதால், உன்னை இத்தண்டனையிலிருந்து விடுவித்து, விடுதலை செய்கிறேன்” என்றார்.
ஆண்ட்ரே என்ற அந்த ஹாலிவுட் நடிகர் ஆபத்திலிருந்த ஒரு பெண்மணிக்கு இறங்கினார் அல்லது இரக்கம் காட்டினார். அதனால்தான் என்னவோ அவருடைய வழக்கை விசாரித்த நீதிபதி அவர்மீது இரக்கம்காட்டி அவரை விடுதலை செய்தார். ஒருவர் அடுத்தவர்மீது கொள்கின்ற இரக்கம் அவர்க்கு எத்தகைய ஆசியைப் பெற்றுத்தருகின்றது என்பதை இந்த நிகழ்வானது மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தியில், இயேசு கிறிஸ்து எட்டுவிதமான பேறுபெற்றவர்களைப் பட்டியலிடுகின்றார். இவர்களுள் ஒருவகையினர்தான் இரக்கமுடையவராக இருந்து பேறுபெற்றவர் பட்டியலில் இடம்பெறுபவர்கள். இன்றைய நாளில், ஒருவர் இரக்கமுடையவராக இருப்பதால் எப்படி இரக்கத்தைப் பெறமுடிகின்றது என்பதை மட்டும் சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
ஏன் இரக்கமுடையோர் பேறுபெற்றோர் என அழைக்கப்படுகின்றனர்?
இரக்கமுடையோர் பேறுபெற்றோர் என ஏன் அழைக்கப்படுகின்றனர் என்ற சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னம், முதலில் இரக்கம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வது நல்லது. இரக்கம் என்பது சாதாரண ஓர் உணர்வு கிடையாது. அது ஒருவருடைய துன்பத்தைத் தன்னுடைய துன்பமாகப் பார்த்து, அதைப் போக்க விரைவது. அதுதான் இரக்கம் என அழைக்கப்படுகின்றது. பவுல் இதைத்தான், “மகிழ்வாரோடு மகிழுங்கள். அழுவாரோடு அழுங்கள்” (உரோ 12: 15) என்கின்றார்.
இதில் இன்னொரு முக்கியமான விடயத்தையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில், ஒருவருடைய துன்பத்தை நம்முடைய துன்பமாகப் பார்த்து, அவர்மீது இரக்கம்கொள்வதற்கு நம்மால் மட்டும் முடியாது. இறைவனின் அருளும் இரக்கமும் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீராம் தூய ஆவியாரின் துணையும் (யோவான் 7: 38) அதற்குத் தேவைப்படுக்கின்றது. அப்போதுதான் நம்மால் அடுத்தவர்மீது இரக்கம்கொள்ளமுடியும். இல்லையென்றால், நம்முடைய இரக்கம் மேம்போக்கானதாக மட்டுமே இருக்கும். இவ்வளவு விடயங்கள் இருப்பதால்தான் இரக்கமுடையோர் பேறுபெற்றோர் என அழைக்கப்படுகின்றனர்.
இரக்கமுடையோர் இரக்கம்பெறுவர்.
இரக்கமுடையோர் பேறுபெற்றோர் எனச் சொன்ன இயேசு, அடுத்ததாக அவர்கள் இரக்கம் பெறுவர் என்கின்றார். இரக்கமுடையோர் எவ்வாறு இரக்கம் பெறுவார் என்பதை மத்தேயு நற்செய்தி 25-ம் அதிகாரத்தில் இடம்பெறுகின்ற இறுதித் தீர்ப்பு உவமை இதற்கு மிகப்பெரிய சான்றாக இருக்கின்றது. அதே நேரத்தில் இரக்கம் கொள்ளாதவர் அதற்கான தண்டனையையும் நிச்சயமாகப் பெறுவர் என்பதும் உண்மை. ஆதலால், இந்த இருவகையினரில் நாம் யாராக இருக்கின்றோம் என்பதை சிந்தித்துப் பார்த்துக் கொள்வோம்.
சிந்தனை.
‘இறைவனுடைய குணங்கள்/ஆற்றல்கள் யாவும் ஒன்றுபோல் சமமாக இருப்பினும், அவருடைய நீதியைவிட, இரக்கம் அதிகப் பிரகாசமாக விளங்குகின்றது’ என்பார் செர்வாண்டிஸ் என்ற எழுத்தாளர். ஆகவே, இரக்கமே வடிவாக இருக்கும் இறைவனைப் போன்று நாமும் இரக்கத்தோடு இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.