மே 21 : செவ்வாய்க்கிழமை. நற்செய்தி வாசகம்

நற்செய்தி வாசகம்.

என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 27-31b

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல.

நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். `நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்’ என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வதுபற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர். இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லிவிட்டேன்.

இனி நான் உங்களோடு மிகுதியாகப் பேசப் போவதில்லை; ஏனெனில் இவ்வுலகின் தலைவன் வந்துகொண்டிருக்கிறான். அவனுக்கு என்மேல் அதிகாரம் இல்லை. ஆனால் நான் தந்தைமீது அன்புகொண்டுள்ளேன் என்பதையும் அவர் எனக்குக் கட்டளையிட்டபடி செயல்படுகிறேன் என்பதையும் உலகு தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சிந்தனை.

இயேசு தரும் அமைதி.

மறையுரை.

அமெரிக்காவில் உள்ள வெஸ்ட் கோஸ்ட் (West Coast) என்னும் இடத்தில் இருந்த மருத்துவர் ஒருவர், தான் நடத்தி வந்த மருத்துவமனையில் இருந்த நோயாளிகளிடம் வித்தியாசமான ஒரு ஆய்வினைச் செய்து பார்த்தார். அந்த ஆய்வு இதுதான். ‘கடவுளிடம் நீங்கள் கேட்டவரம் கிடைக்கும் என்றால், என்ன வரம் கேட்பீர்கள்? என்ற கேள்வியானது அங்கிருந்த எல்லா நோயாளிகளிடமும் கேட்கப்பட்டது.

அதற்கு அந்த மருத்துவமனையில் இருந்த 87 சதவீதம் நோயாளிகள் ‘எங்களுக்கு மன அமைதி வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் எவ்வளவோ வளர்ந்துவிட்டோம் என்று நாம் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தவேளையில், வசதியான வாழ்க்கையல்ல, மன நிம்மதி போதும் என்கிறது ஆய்வின் முடிவுகள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடம், “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன். நான் தரும் அமைதி இந்த உலகம் தரும் அமைதி போன்றது அல்ல” என்கிறார். அமைதியின் அரசராக இந்த உலகத்திற்கு வந்த ஆண்டவர் இயேசு, தன்னுடைய சீடர்களுக்கு அமைதியைத் தருவது நமக்கு ஆறுதலிக்கும் செய்தியாக இருக்கின்றது. இயேசு தரும் அமைதி எத்தகையது என்பதுதான் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

இந்த உலகம் சத்தங்கள் அற்ற, வன்முறைகளற்ற, போர்களும், குழப்பங்களும் அற்ற ஒரு நிலையைத்தான் அமைதியென நினைத்துக்கொண்டிருக்கிறது. இது உண்மையான் அமைதியாகாது. அதற்குப் பெயர் மயான அமைதி. ஆனால் ஆண்டவர் இயேசு தரும் அமைதி இதைவிட உயர்ந்து, அது உள்ளத்தில் ஏற்படும் அமைதி, சத்தங்களுக்கும், சந்தடிகளுக்கும் மத்தியிலும் நிகழும் அமைதி. இத்தகைய அமைதி நாம் இயேசுவோடு ஒன்றாகும்போது, இயேசுவோடு சங்கமமாகும்போது ஏற்படக்கூடிய அமைதி.

இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த நிக்கோலஸ் ரிட்லி (Nicholas Ridley) என்னும் ஆயர் 1555 ஆம் ஆண்டு கிறிஸ்துவுக்காக தன்னுடைய இன்னுயிரைத் துறந்தவர். இவர் கிறிஸ்துவைப் பற்றிப் போதித்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைத்துவைக்கப்பட்டார்.

ஆயர் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு, கொல்லப்படுவதற்கு முந்தின நாள், ஆயருடைய சகோதரர் ஒருவர் ஆயருக்கு ஆறுதலாகவும், ஒத்தாசையாகவும் இருக்கும் என்பதற்காக, அவர் இருந்த சிறைக்கூடத்திற்கு முன்பாக தூங்காமல் நின்றுகொண்டிருந்தார். இதைப் பார்த்த ஆயர் அவரிடம், “எதற்காக இப்படி தூங்காமல் விழித்துக்கொண்டிருக்கிறாய், வழக்கம்போல நீ தூங்கச் செல்” என்றார். அதற்கு அவருடைய சகோதரர், “நான் உங்களோடு நின்றுகொண்டிருந்தால் உங்களுக்கு ஆறுதலாக இருக்குமே, அதற்காகத்தான் இங்கே இப்படி நின்றுகொண்டிருக்கிறேன்” என்றார்.

உடனே ஆயர் அவரிடம், ”உண்மையான அமைதியை வழங்கும் இறைவன் என்னோடு இருக்கிறார். அவர் தன்னுடைய ஆறுதலிக்கும் தோள்களில் என்னைச் சுமந்துகொண்டிருக்கிறார். அதனால் எனக்கு எந்த பயமும் இல்லை” என்றார்.

ஆம், இயேசு தரும் அமைதி துன்பத்திலும், இடரிலும் நமக்கு ஆறுதலையும், வல்லமையையும் தருவதாக இருக்கிறது என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகிறது. ஆகவே, நாம் இறைவனோடு இணைந்து வாழும்போது, அவர் அளிக்கும் அமைதி நமக்குத் தேற்றரவாக இருக்கும் என்பது யாராலும் மறுக்கப்படமுடியாத உண்மை.

அடுத்ததாக, இயேசு அளிக்கும் அமைதியைப் பெற்றுக்கொள்ளும் நாம், நம்முடைய சமுதாயத்திலும் நாம் அமைதியை ஏற்படுத்தும் கருவிகளாக இருக்கவேண்டும். தூய பிரான்சிஸ் அசிசியார் இறைவனைப் பார்த்து, “அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே’ என்று மன்றாடுவதுபோல, நாமும் இறைவனைப் பார்த்து மன்றாட வேண்டும்; நாமும் அமைதியின் தூதுவர்களாக மாறவேண்டும். காரணம் இந்த உலகம் பணத்திற்கோ, பதவிக்கோ ஏங்கித் தவிக்கவில்லை. உண்மையான அமைதிக்குத்தான் ஏங்கித் தவிக்கிறது என்பது தொடக்கத்தில் சொல்லப்பட்ட நிகழ்விலிருந்து வெளிப்படும் உண்மை.

ஆகவே, நாம் இறைவன் அளிக்கும் உண்மையான அமைதியை பெற்றுக்கொள்வோம். அந்த அமைதியை உலகத்தவருக்கு அளிப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

Comments are closed.