நற்செய்தி வாசக மறையுரை (மே 21)

பாஸ்கா காலம் ஐந்தாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
யோவான் 14: 27-31

நீங்கள் என்மீது அன்புகொண்டிருந்தால்
நான் தந்தையிடம் செல்வதுபற்றி மகிழ்ச்சி அடைவீர்கள்

நிகழ்வு

பிரபல எழுத்தாளராகிய வில்லியம் ஒயிட் எழுதிய ‘Stories of Journey’ என்ற நூலில் இடம்பெறும் நிகழ்வு இது.

இங்கிலாந்தில் வாழ்ந்த வந்த ஹான்ஸ் – எனிட் தம்பதியர் இரண்டாம் உலகப்போரில் தங்களுடைய பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டு, தப்பித்தோம், பிழைத்தோம் என்று அமெரிக்காவில் வந்து குடியேறினர். ஹான்ஸ் இங்கிலாந்தில் இருந்தபோது ஒரு கல்லூரில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்ததால், அமெரிக்காவிற்கு வந்தபிறகு, ஒரு குருமடத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் வாய்ப்புப் பெற்றார். மேலும் ஹான்ஸ் தன்னுடைய மனைவி எனிட்மீது அளவுகடந்த அன்பு கொண்டிருந்தார். சில சமயங்களில் அவர் தன்னுடைய மனைவியைக் குருமடத்திற்கு அழைத்து வரும்போது, அங்கிருந்த எல்லாருமே அவர் தன்னுடைய மனைவியின்மீது கொண்டிருந்த அன்பைக் கண்டு மெச்சினார்கள். அந்தளவுக்கு ஹான்ஸ் தன் மனைவியின்மீது அளவில்லாத அன்புகொண்டிருந்தார் .

இப்படி ஹான்ஸ்-எனிட் தம்பதியர் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாகப் போய்க்கொண்டிருந்த சமயத்தில் எனிட் திடீரென்று நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். ஏற்கனவே தன்னுடைய பிள்ளைகளைப் போரில் இழந்திருந்த ஹான்ஸிற்கு தன்னுடைய மனைவியின் திடீர் இறப்பு பேரிடியாய் அமைந்தது. இதனால் அவர் குருமடத்திற்கு வகுப்பெடுக்கவும் செல்லாமல், வேறெங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளே முடங்கிக்கொண்டிருந்தார். சேதி கேள்விப்பட்ட குருமட அதிபர், குருமடத்தில் இருந்த ஒருசில அருத்தந்தையர்களைத் தன்னோடு கூட்டிக்கொண்டு ஹான்ஸின் வீட்டிற்குச் சென்றார். ஹான்ஸோ அவர்களிடம், “இறைவனிடம் நான் வேண்டாத நாளில்லை. ஆனாலும் அவர் என்னுடைய பிள்ளைகளையும் என்னுடைய மனைவியையும் என்னிடமிருந்து பிரித்துவிட்டார்! இனிமேல் நான் இறைவனிடம் வேண்டப்போவதில்லை” என்று சொல்லிக் கண்ணீர்விட்டு அழுதார்.

இதைக் கேட்டு குருமட அதிபர் அவரிடம், “ஹான்ஸ்! நீ இறைவனிடம் வேண்ட வேண்டாம். உனக்காக நானும் என்னோடு வந்திருக்கின்ற அருட்தந்தையர்களும் வேண்டுகிறோம்” என்றார். இவ்வாறு சொல்லிவிட்டு குருமட அதிபரும் குருமடத்தில் பணியாற்றிவந்த சக குருக்களும் ஒவ்வொருநாளும் ஹான்ஸிற்காக இயேசுவிடம் மன்றாடி வந்தார்கள். ஏறக்குறைய ஒரு மாதம் கழித்து ஹான்ஸ் குருமட அதிபரிடமும் ஏனைய குருக்களிடமும், “இதுவரை நீங்கள் எனக்காக வேண்டியதுபோதும். உங்களுடைய வேண்டுதலால் நான் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டேன்… என்னுடைய மனதில் இருந்த சுமையெல்லாம் அப்படியே குறைந்துவிட்டது. இனிமேல் நான் உங்களுக்காக இறைவனிடம் வேண்டப்போகிறேன்” என்றார். இதைக் கேட்டு குருமட அதிபதிரும் ஏனைய குருக்களும் இறைவனுக்கு நன்றிசெலுத்தினார்கள்.

ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுவது அல்லது பரிந்து பேசுவது எவ்வளவு இன்றியமையாதது, அதனால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றன என்பதை இந்த நிகழ்வானது மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் பரிந்துபேசுவதன் முக்கியத்துவத்தைக் குறித்துப் பேசுகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

தந்தையிடம் செல்வதாகச் சொல்லும் இயேசு

இயேசு இவ்வுலகை விட்டுப் பிரிவதற்கு முன்பாக தன்னுடைய சீடர்களுக்குப் பல சேதிகளைச் சொல்கின்றார். அதில் முக்கியமான ஒருசெய்திதான், இயேசு தந்தையிடம் செல்வதாகும். இயேசு தன்னுடைய சீடர்களிடம் இவ்வாறு சொன்னதைக் கேட்டு அவருடைய சீடர்கள் நிச்சயம் கலங்கியிருக்கக் கூடும். அப்படிப்பட்ட சமயத்தில்தான் இயேசு, “நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வதுபற்றி மகிழ்ச்சி அடைவீர்கள்” என்கிறார். இயேசு தந்தையிடம் செல்வது நமக்கு/ சீடர்களுக்கு எந்தவிதத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய காரியம் என்பதைத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

தந்தையின் வலப்பக்கம் வீற்றிருந்து நமக்காகப் பரிந்துபேசும் இயேசு

இயேசு தந்தையிடம் செல்வது நமக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கக் காரணம், அவர் தந்தையின் வலப்பக்கம் வீற்றிருந்து நமக்காகப் பரிந்துபேசுவதால்தான். இதை எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் கூறுகின்ற, “அவர்களுக்காகப் பரிந்துபேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கின்றார்” (எபி 7:25) என்ற வார்த்தைகளும், தூய பவுலின், “கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராக யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டு, கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ” (உரோ 8:34) என்ற வார்த்தைகளும் உறுதிசெய்வதாக இருக்கின்றன. ஆகவே, இயேசு தந்தையிடம் செல்வது நமக்காகப் பரிந்து பேசுவதற்காகத்தான் என்ற உண்மையை உணர்ந்து, நாம் உள்ளம் கலங்காமல், மருளாமல் இருப்பது நல்லது.

சிந்தனை

‘ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்; கொடியோர்க்காகப் பரிந்து பேசினார்’ (எசா 53: 12) என்று துன்புறும் ஊழியனாம் இயேசுவைக் குறித்துப் பேசுவார் இறைவாக்கினர் எசாயா. ஆகவே, நமக்காகப் பரிந்துபேச இயேசு இருக்கின்றார் என்ற நம்பிக்கையுடன், கலக்கம் நீக்கி, மகிழ்ச்சியோடு இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாய்ப் பெறுவோம்.

Comments are closed.