பேராயரே எமது இரத்தக்கண்ணீர் உங்களின் இதயக் கதவுகளை திறக்கவில்லையா?

இன்று உலகத்திற்கே ஒரு முன்னுதாரணமாக மாறியிருக்கின்றார் கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள். இது ஒரு நல்ல காரியம்.

முஸ்லிம், தமிழர் என்ற இன பேதத்தை மறந்து மனிதம் ஒன்றை மட்டுமே நிலைநாட்ட அவர் எடுத்திருக்கும் பணிகள் வரலாற்றில் பேசப்பட வேண்டிய விடயம். இலங்கையர் என்ற வகையில் நாமும் எமது பேராயரை எண்ணி பெறுமை கொள்கின்றோம்.

2009 மே 18 என்ற இந்த நாள் அவ்வளவு சீக்கிரத்தில் உலக வாழ் மக்களின் மனங்களில் இருந்து அகற்ற முடியாத ஒன்றாய் போயிருக்கின்றது

அன்றிலிருந்து இன்று வரையான இந்த பத்து வருட ஆண்டு காலப்பகுதியில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் வாழும் மக்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இன்று துடிக்கும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையே அன்று கொத்து கொத்தாகக் கொல்லப்பட்ட மக்களுக்காக குரல் முன்வராதது ஏன் என்ற கேள்வியை தற்போது கேட்க விரும்புகின்றோம்.

அன்று இருந்த மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, சர்வதேச ஊடகவியலாளர் மேரி கொல்வின் மற்றும் பிரான்சிஸ் கரிசன் போன்றவர்கள் சரணடைதல் தொடர்பில் சகலரிடமும் மன்றாடியபோது நீங்கள் எங்கு சென்றீர்கள் ஐயா! அதுமட்டுமா உங்களது திரு அவையை சார்ந்த அருட்தந்தை பிரான்சிஸ் தலைமையில் நூற்றுக்கணக்கான மக்கள் துணிந்து சென்றார்களே. இன்று வரை அருட்தந்தையும் இல்லை மக்களும் இல்லை. ஒரு கணமாவது உமது குரலினை பதிவு செய்திருக்கின்றீர்களா?

ஏன் இந்த பாரபட்சத்தினை பேராயரே காட்டுகின்றீர்கள்? என தமிழர்களாகிய நாங்கள் மனம் வெதும்பி மன்றாட்டமாய் கேட்கின்றோம்.

இன்று உலகத்தவர்கள் மத்தியில் உங்களுக்கு நல்ல பெயர் உண்டு. உலகம் உங்களை போற்றி புகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் நீங்கள் அறிய நடந்த இந்த பேரவலம் குறித்து இதுவரையில் எந்த பதிலும் வழங்காததன் காரணம் என்னவோ? கருத்துக்கூற மறுப்பதன் சூட்சுமம் என்னவோ?

அது மட்டுமல்ல, கொத்து கொத்தாக இதே போன்றதொரு நாளில் கொன்றழிக்கப்பட்ட பேரவலத்தை நினைவுகூர்ந்து அவர்களின் நித்திய இளைப்பாற்றிக்காகவாவது இந்த மே 18ஆம் திகதிக்காக ஒரு திருப்பலி ஒப்புக்கொடுத்தீர்களா? உங்களால் அது முடியாமல் போயிற்றே…!

இலங்கையில் தற்போது அரங்கேறி வரும் பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் உங்களது மனிதாபிமான செயலால் உலகத்தவர் உங்களை கடவுளெனப் போற்றுகின்றனர்.

ஆனால் கடவுளின் நிலையில் நீங்கள் இருக்கின்றீர்களா என இயேசுவே, மாதாவே என உயிர்நீத்த ஆத்துமாக்கள் குரல் எழுப்புகின்றன.

ஏன் இந்த நிலை? நாம் தமிழர்கள்! ஆனால் தமிழர்கள் என்றால் அதன் பொருள் அனாதைகளா? நாமும் இந்த நாட்டு மக்கள்தான். நீங்கள் ஒரு மதத்தலைவராக எம் அவல குரல்களை கேட்கவில்லையே ஐயா!

எம்மை வாட்டி வதைத்த 30 வருட கால யுத்தத்தில் எத்தனை அருட்தந்தைகளை எமது தமிழர் தாயகம் இழந்து நிற்கின்றது. இதுவரை அவர்களுக்காக நீங்கள் எடுத்த நடவடிக்கைகள்தான் என்ன? நாங்கள் என்ன பாவம் செய்தோம்? அல்லது பாவப்பட்ட இனமா?

கடவுளே நாம் யாரிடம் செல்வோம்? உம்மை நோக்கி கூப்பிடும் எமது குரலுக்கு நீர் செவி சாய்த்தீரோ தெரியவில்லை. ஆனால் உம் தலைமை தூதுவர் எம்மை திரும்பிப் பார்க்கவில்லையே. நாம் யாரிடம் சென்று எம் அழுகைகளை கொட்டித் தீர்ப்பது.

எமது வழிகாட்டிகளாக இருப்பது இன்று சமய தலைவர்களே. ஆனால் சமய தலைவர்கள்கூட பாரபட்சம் காட்டுவார்கள் என்றால் எமது மனக்குறையை நாம் யாரிடம் சென்று கொட்டித் தீர்ப்பது?

மரியாதைக்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களே உங்கள் மீது எமக்கு கோபமும் இல்லை. மனஸ்தாபமும் இல்லை. மாறாக நீங்கள் எங்களை திரும்பி பார்க்கவில்லையே என்ற ஏக்கம்தான் இதயத்தில் வலியாய் வலிக்கிறது.

நேற்றைய தினம் இலங்கை இராணுவத்தினருக்காக நீங்கள் திருப்பலி ஒப்புக்கொடுத்தீர்கள். நீங்கள் ஒரு சமய தலைவர் ஆதலால் கேட்கின்றோம். கொத்து கொத்தாய் கொன்று குவிக்கப்பட்ட எமது தமிழ் உறவுகளுக்காக ஒரு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்திக்க உங்களது மனம் இடம்கொடுக்கவில்லையா?

ஏன் எங்களுக்கு மட்டும் இந்த நிலை? நாங்கள் எல்லா விதத்திலும் ஒதுக்கப்படுகின்றோம். அதனை நாங்கள் முழுமையாக உணர்கின்றோம். யாரிடம் சென்று எமது மனக்குறைகளை கொட்டித் தீர்ப்பதென்று தெரியவில்லை.

வடக்கு, கிழக்கில் யுத்த காலத்தில் இறந்து போன எத்தனையோ அருட்தந்தையர்கள் தொடர்பில் இன்றுவரை நீங்கள் வாய்திறக்கவில்லையே? ஏன் இவ்வாறான ஒரு நிலை?

மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையுடன் எமது உரிமைக்கான முழக்கம் ஓய்ந்து விட்டதா?

வடக்கு கிழக்கில் உங்களது சேவைகளுக்கு உயர்ந்த மதிப்பு உள்ளது. உங்களது வழியை பின்பற்றி சேவை செய்யும் அருட்தந்தையர்கள் எமக்கு ஆறுதலாக இருக்கின்றனர். ஆனால் உங்களின் வேகம் என்பது மனதுக்கு கவலை அளிக்கின்றது.

கருத்து கூறுதல், பொது வெளிகளில் மக்கள் சந்திப்புக்களில் கலந்து கொள்ளுதல் என்பன கடந்த காலங்களோடு ஒப்பிடும்போது மிக குறைவானதாகவே இருக்கின்றது. வடக்கு கிழக்கு ஆயர்களே எம்மை மன்னியுங்கள்.

எமது உரிமை போராட்டத்தில் கடந்த 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த ஆயர்கள் கைகொடுத்தது போல நீங்கள் எங்களுக்கு கைகொடுக்க மாட்டீர்களா எமது உரிமை போராட்டத்தில் எமக்கு கைகொடுக்க எம் அருகில் வரமாட்டீர்களா? இதனை நாங்கள் உம்மிடம் கேட்பதற்கு காரணம் எங்களுக்கு யாரும் இல்லையே என்ற வெறுமையான உணர்வுதான்.

நீங்களும் இல்லை என்று சொன்னால் எமது பாதுகாப்புக்கு யாரும் இல்லை! வடக்கு கிழக்கில் பல வெளிநாட்டு அருட்தந்தையர்களை கூட கொடிய யுத்தம் கொன்றொழித்திருக்கின்றது. குறிப்பாக இதற்கு கூட இன்று பதில் இல்லை.

வணக்கத்திற்குரிய கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களே! நீங்கள் எம் அருகில் இருந்தால் எவ்வளவு ஆறுதல். ரொமைரோ நகர பேராயர் மக்களின் வாழ்வுக்காக குண்டுகளைத் தாங்கி உயிரிழந்தார். தென்னாப்பிரிக்க பேராயர் டெஸ்மன் டூட்டோ இன்று தோளோடு தோள் கொடுத்து மக்களுக்காக இருக்கின்றார்.

ஆனால் உங்களது வழிவந்த அருட்தந்தையர்கள் எம்மோடு அருகிலும் எமது இன்ப துன்பங்களிலும் எம் அருகில் இருக்கின்றார்கள். தலைமை ஆயர்களே இன்னும் அதிகமாக நீங்கள் எங்கள் அருகில் நெருங்கி வரமாட்டீர்களா?

இவை அனைத்தும் நாங்கள் உங்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களோ குறைகளோ அல்ல! மாறாக இவை அனைத்தும் எமது ஆதங்கம். தவறாக நினைக்க வேண்டாம். நாங்களும் உங்களது பிள்ளைகள். எமக்காக பிரார்த்தியுங்கள். நாம் கூறியதில் தவிறிருந்தால் எம்மை மன்னித்து விடுங்கள்.

நாங்கள் உங்களை நோகடிக்கவில்லை. ஆனால் எங்கள் தாய் மொழியில் உங்களிடம் பாவ மன்னிப்பு அல்ல மாறாக உரிமையுடன் கேட்டிருக்கின்றோம். அந்த ஆதங்கம்தான் ஐயா எமக்கிருக்கின்றது.

Comments are closed.