2021ல் உரோம் நகரில் உலக குடும்பங்கள் மாநாடு
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2021ம் ஆண்டில் நடைபெறும், உலக குடும்பங்கள் மாநாட்டிற்கென, “குடும்ப அன்பு: தூயவாழ்வுக்கு ஓர் அழைப்பு மற்றும் ஒரு வழி” என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வெள்ளியன்று இவ்வாறு அறிவித்துள்ள, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவை, அடுத்த உலக குடும்பங்கள் மாநாடு, உரோம் நகரில், 2021ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி முதல், 27ம் தேதி வரை நடைபெறும் எனக் கூறியுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ‘அன்பின் மகிழ்வு (Amoris Laetitia)’ என்ற திருத்தூது அறிவுரை மடல் வெளியிடப்பட்டு ஐந்து ஆண்டுகளும், ‘அகமகிழ்ந்து களிகூருங்கள் (Gaudete et Exsultate)’ என்ற திருத்தூது அறிவுரை மடல் வெளியிடப்பட்டு மூன்று ஆண்டுகளும் நிறைவடையும்வேளை, குடும்ப அன்பு, தூயவாழ்வுக்கு, ஓர் அழைப்பாகவும், ஒரு வழியாகவும் அமைந்துள்ளது என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில், இந்த தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாள் வாழ்விலும், குடும்ப உறவுகளின் ஆழமான மற்றும் மீட்பளிக்கும் தன்மையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளவும், அதனைப் பகிரவும் வேண்டுமென்ற நோக்கத்திலும், இந்த தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று, பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவை கூறியுள்ளது.
ஒவ்வொரு நாள் வாழ்வில் நேரிடும் மகிழ்வு மற்றும் போராட்டங்களை எதிர்கொள்வதற்கு, மனித உறவுகள் மிகவும் முக்கியமானவை என்பதை, திருமணமும், குடும்பமும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன என்றும், அத்திருப்பீட அவை கூறியுள்ளது.
Comments are closed.