போன் தொலைந்தால் வாங்கலாம், ஆன்மா தொலைந்து போனால் ?

என்னோட மொபைல் போனைக் காணல என மாலையில் சொன்னார் அலுவலக நண்பர் ஒருவர். ‘ஐயையோ என்னாச்சு ? எப்போ ?’ என்று பதட்டத்துடன் கேட்டேன்.

காலைல ஆபீஸ்ல வந்ததும் வீட்டுக்கு போன் பண்ணினேன், சாயங்காலம் கிளம்பும்போ பாத்தா காணோம், என்றார்.

என்னது காலைல போனை பாத்தீங்க? அப்புறம் சாயங்காலம் வரை பாக்கவே இல்லையா ? என்றேன் ஆச்சரியமாய் !

ஆமா.. ஈவ்னிங் வீட்டுக்கு கிளம்பறேன்னு போன் பண்ண நினைச்சேன் அதான் தேடினேன். பட் காணல… என்றார்.

‘ஓ.. வாட்ஸப், டுவிட்டர், ஃபேஸ்புக்.. ‘ நோட்டிபிகேஷன்ஸ் எல்லாம் வராதா உங்களுக்கு ? என்றேன்.

அதெல்லாம் நான் வெச்சுக்கல, என வெகு இயல்பாய் சொன்னார்.

சரி, எதுக்கும் செக்யூரிடி கிட்டே சொல்லிடுங்க என சொல்லி விட்டு திரும்பினேன் !

மனதுக்குள் கேள்விகள் எழுந்தன.

நிமிடத்துக்கு ஒருமுறை வாட்ஸர், மணிக்கொரு முறை டுவிட்டர் என போனை நோண்டிக்கொண்டிருக்கும் என்னுடைய நிலை பரிதாபமாய் எனக்கே தெரிந்தது ! போன் தொலைந்து போனால் ஐந்தே நிமிடத்தில் எனக்குத் தெரிந்து விடும். காரணம் அதனோடு எனக்குள்ள நெருக்கம் அப்படி !

யோசித்தேன் !

இறைவனோடு எனக்குள்ள தொடர்பு அறுந்து போனால் ஐந்து நிமிடத்தில் கண்டு பிடிப்பேனா ? ஐந்து மணி நேரத்தில் ? ஐந்து வாரங்களில் ? ஐந்து மாதங்களில் ? கேள்விகள் நீண்டு கொண்டே இருந்தன. பல ஆண்டுகளாக தொடர்பில் இல்லாவிட்டால் கூட உணரமாட்டேனோ எனும் பயம் எழுந்தது !

வாட்ஸப்பை ஒதுக்கிவைத்து விட்டு, இறை வார்த்தைகளை வாசிக்க ஆரம்பித்தேன் ! போன் தொலைந்தால் வாங்கலாம், ஆன்மா தொலைந்து போனால் ?

Comments are closed.