மே 17 : நற்செய்தி வாசகம்

வழியும் உண்மையும் வாழ்வும் நானே.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-6

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், `உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன்’ என்று சொல்லியிருப்பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்.

நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்.” தோமா அவரிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?” என்றார்.

இயேசு அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————
மறையுரைச் சிந்தனை

“கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்”

தன்மீதே நம்பிக்கை இல்லாத ஒருவன் இருந்தான். ஒருமுறை அவனுக்கு சென்னையிலிருந்து விழுப்புரம் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே அவன் முன்கூட்டியே சென்னையிலிருந்து விழுப்புரம் செல்லக்கூடிய இரயில் ஒன்றில் பயணச் சீட்டை முன்பதிவு செய்துகொண்டு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் அதாவது இரவு 9 மணிக்கு பயணத்திற்குத் தயாரானான்.

இரயில் சென்னை எக்மோர் இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. அவனுக்கோ மேலே உள்ள சீட்டில் (Upper Birth) இடம் கிடைத்திருந்தது. அவன் கீழே இருந்த ஒருவரிடம், “ஐயா நீங்கள் எந்த ஊர் போகிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா? என்று கேட்டான். அதற்கு அந்த நபர், “நான் தஞ்சாவூர் போய்க்கொண்டிருக்கின்றேன்” என்றார். “அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்வீர்களா…. நான் இங்கிருந்து விழுப்புரத்திற்குப் போய்க்கொண்டிருக்கின்றேன்… எனக்கு ஒரு பிரச்சனை இருக்கின்றது. எது என்னவெனில், இரவில் நான் தூங்கிவிட்டால், எழுந்திருப்பது அவ்வளவு கடினம். அதனால் நீங்கள் விழுப்புரம் இரயில் நிலையம் வந்ததும் என்னைத் தட்டி எழுப்பி விடுங்கள், அப்படியும் நான் எழுந்திருக்காவிடில் என்னை மேலிருந்து கீழே இறக்கி, விழுப்புரம் நிலையத்தின் பிராட்பாரத்தில் உருட்டி விட்டுவிடுங்கள்” என்றார். அந்த நபரும் அதற்குச் சரியென்று சொல்ல, இவர் தூங்கத் தொடங்கினார்.

அதிகாலை ஆறுமணிக்கு இரயில் தஞ்சாவூர் இரயில் நிலையத்தில் வந்து நின்றது. தஞ்சாவூர்க்காரர் தன்னுடைய மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு பிளாட்பாரத்தில் நடக்கத் தொடங்கினார். அப்போது அவருடைய கையை யாரோ பிடித்து இழுப்பதுபோல் இருக்க, அவர் திரும்பிப் பார்த்தார். எதிரே ஒருவர் நின்றார். அவர் தஞ்சாவூர்காரரிடம், “என்னய்யா நீர், நான் உம்மிடத்தில் என்ன சொன்னேன், என்னை விழுப்புரம் இரயில் நிலையத்தில் இறக்கிவிடும் என்று சொன்னேன் அல்லவா, ஏன் என்னை அங்கு இறக்கிவிடாமல் இப்படிச் செய்தீர்?” என்றான். அதற்கு அந்த தஞ்சாவூர்க்காரர் எதுவும் பேசாமல், எதையோ யோசித்துக் கொண்டிருந்தார். இது விழுப்புரத்தில் இறங்கவேண்டிய ஆளுக்கு பயங்கரக் கோபத்தை வருவித்தது. “என்னய்யா நான் பாட்டுக்கு கத்திக்கொண்டிருக்கிறேன்… நீர் என்னடாவென்றால் எதையோ யோசித்துக்கொண்டிருக்கிறீரே, உமக்கு என்ன பிரச்சனை?” என்று கத்தினான் விழுப்புரத்து ஆசாமி.

அதற்கு தஞ்சாவூர்காரர் மிகவும் பொறுமையாகப் பதில் சொன்னார், “அது ஒன்றுமில்லை, விழுப்புரத்தில் இறங்கிவேண்டிய நீர் தஞ்சாவூரில் இறங்கியதற்காக இவ்வளவு கத்துகிறீரே, அடையாளம் தெரியாமல் உமக்குப் பதிலாக எங்கோ செல்லவேண்டிய ஒரு ஆளை நான் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இறக்கிப் போட்டேனே, அவர் இந்நேரம் என்ன கத்துக் கத்துவோரோ. அதைப் பற்றித்தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்” என்றார். இதைக் கேட்ட அந்த விழுப்புர ஆசாமி, தஞ்சாவூர் ஆசாமியின்மீது கொலைவெறியோடு பாயத் தொடங்கினார்.

தன்னை நம்பாமல் அடுத்தவரை நம்பி வாழ்வோருடைய கதி எப்படி இருக்கும் என்பதைத்தான் இந்த நிகழ்வு மிக வேடிக்கையாக எடுத்துச் சொல்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, “கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்” என்ற அற்புதமான வார்த்தைகளை உதிர்க்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளில் நிறைய அர்த்தங்கள் இருக்கின்றன. அவை என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

முதலில் இயேசு கடவுளிடத்திலும் தன்னிடத்திலும் ஏன் நம்பிக்கை கொள்ளச் சொல்கின்றார் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இதற்காக பதிலை நாம் திருப்பாடல் 118:8 ல் காணலாம். அங்கு வாசிக்கின்றோம், “மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்” என்று. மனிதர் மீது நம்பிக்கை வைப்பதனால் எவ்வளவு பெரிய ஆபத்தைச் சந்திக்கின்றோம் என்பதற்கு மேலே சொல்லப்பட்ட நிகழ்வு ஒரு சான்று. மனிதர்கள் மீது நம்பிக்கை வைப்பதனால் இழப்புதான் அதிகமாக ஏற்படும், ஆனால், ஆண்டவரிடம் நம்பிக்கை வைத்தால் ஆசிர் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லியிருக்கலாம் என்று புரிந்துகொள்ளலாம்.

அடுத்ததாக இயேசு தன்னிடத்திலும் தந்தைக் கடவுளிடத்திலும் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்று சொல்வதற்குக் காரணம், எதற்கும் உள்ளம் கலங்கத் தேவையில்லை என்பதற்கே ஆகும். ஆம். இயேசுவிடமும் தந்தைக் கடவுளிடமும் நம்பிக்கை கொள்வோர் எதற்கும் கலங்கத் தேவையில்லை என்பதே உண்மை. காரணம் நம் இறைவன் நம்மை அருகிலிருந்து காப்பாற்றக் கூடியவர்.

ஆகவே, நம்மை எல்லா ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றக்கூடிய, நமக்கு நிறைவானக ஆசிரைத் தரக்கூடிய இறைவனிடம் நம்பிக்கை கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.