நற்செய்தி வாசக மறையுரை (மே 15)

பாஸ்கா காலம் நான்காம் வாரம்
புதன்கிழமை
யோவான் 12: 44-50

இயேசுவின்மீது நம்பிக்கை கொள்பவர் இறைவன்மீதும் நம்பிக்கை கொள்கிறார்

நிகழ்வு

ஒரு கல்லூரியில் உயிரியல் (Biology) பேராசிரியர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு நாத்திகவாதி. அவரிடம் வித்தியாசமான ஒரு வழக்கம் இருந்தது. அது என்னவெனில், கல்வியாண்டின் தொடக்கத்தில், புதிதாக வந்திருக்கும் மாணவர்களிடம் யார் யாருக்கெல்லாம் கடவுள்மீது நம்பிக்கை இருக்கிறது என்று கேட்பார். மாணவர்களில் ஒருசிலர் தங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருப்பதாகச் சொல்வார்கள். அப்பொழுது அவர்கள் அவரிடம், இந்தப் பருவம் (Semester) முடிவதற்குள் உங்களை என்னைப் போல் நாத்திகவாதியாக்கிக் காட்டுகிறேன் என்று சவால்விடுவார். அந்தப் பருவம் முடிவதற்குள் அவர் சொன்னதுபோன்றே கடவுள்மீது நம்பிக்கை கொண்டிருந்த மாணவர்களையெல்லாம் நாத்திகவாதியாக மாற்றிவிடுவார். இது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருந்தது.

இப்படிப்பட்ட சமயத்தில் ஒருநாள் அவர் மலங்காட்டிற்குள் இருந்த தன்னுடைய பண்ணை வீட்டிற்குத் தனியாகச் சென்றுகொண்டிருந்தார். அதுவோ ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத காடு. அப்பொழுது வித்தியாசமான ஒரு சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். அங்கே ஒரு பெரிய கரடியானது நின்றுகொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அவருடைய இதயம் ஒருகணம் நின்றுதுடித்தது. பின்னர் அவர் தன்னுடைய உயிரைக் காத்துக்கொள்ள, வேகமாக ஓடினார். கரடியோ அவரைவிட வேகமாக ஓடிவந்து அவருக்குப் பக்கத்தில் வந்தது. ‘இதற்கு மேலும் ஓடி எந்தவொரு பயனுமில்லை’ என்பதை உணர்ந்த அவர், வானத்தை அண்ணார்ந்து பார்த்து, “கடவுளே என்னைக் காப்பாற்றும்” என்று உரக்கக் கத்தினார்.

அப்பொழுது வானத்திலிருந்து மின்னலைப் போன்ற ஓர் ஒளியானது அவர்மீது இறங்கியது. அதிலிருந்து கடவுள், “இத்தனை நாளும் நான் கிடையவே கிடையாது என்று உன்னிடம் பாடம்பயின்ற மாணவர்களுக்குக் கற்பித்து வந்தாயே! இப்பொழுது எங்கிருந்து வந்தது என்மீது நம்பிக்கை! சரி இனிமேலானது என்மீது நம்பிக்கை வைத்து வாழ்வாயானால், உன்னை இந்தக் கரடியிடமிருந்து காப்பாற்றுகிறேன்” என்றார்.. ஒருநொடி யோசித்த அந்த உயிரியல் பேராசிரியர், “அப்படியெல்லாம் என்னால் உன்மீது நம்பிக்கை வைத்து வாழமுடியாது. வேண்டுமானால், என்னைத் துரத்திக்கொண்டு வரும் இந்தக் கரடியை ஒரு கிறிஸ்தவராக்கிவிடு” என்றார். கடவுளும், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு மறைந்துபோனார்.

மறுகணம் பேராசிரியரை வேகமாகத் துரத்திக்கொண்டு வந்த கரடி சாந்தி சொருபியனது. அவருக்கோ ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. ‘உண்மையில் இந்தக் கரடி கிறிஸ்தவராகிவிட்டதா’ என்று அதையோ உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கும்போது, அது முழந்தாள் படியிட்டு, “இறைவா! இன்றைய உணவை எனக்குத் தந்ததற்காக உமக்கு நன்றி” என்று இறைவனை வணங்கிவிட்டு, பேராசிரியர்மீது பாய்ந்து, அவரைத் தனக்கு இரையாக்கிக் கொண்டது.

இறைவன்மீது நம்பிக்கை இல்லாமல் வாழ்பவர் எப்படி அழிவைச் சந்திக்கின்றார் என்பதை வேடிக்கையாகப் பதிவுசெய்யும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய நற்செய்தி வாசகமும் இறைவன்மீது நம்பிக்கை வாழ்வதால் ஒருவர் பெறுகின்ற ஆசியையும் இறைவன்மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பதால் ஒருவர் பெறுகின்ற தண்டனையையும் எடுத்துக் கூறுகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவின்மீது நம்பிக்கை கொள்பவர் ஒளியில் இருப்பார்

யோவான் நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தியில் இயேசு, “என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டும் அல்ல, என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கிறார்” என்று சொல்லிவிட்டு, “என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்” என்கின்றார். இயேசுவே இவ்வுலகின் ஒளி (யோவா 8:12). அப்படிப்பட்டவரிடம் ஒருவர் நம்பிக்கை கொண்டு வாழ்கின்றபோது, அவர் எத்தகைய சூழ்நிலையிலும் இருளில்/ அழிவில் விழமாட்டார் என்பது உண்மை. இன்றைக்குப் பலர் அழிந்து போவதற்கு காரணம் ஒளியாம் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளவில்லை, அவரை ஏற்றுக்கொள்ளவும் இல்லை என்பதுதான் காரணம்.

இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாதவர் தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்

தன்மீது நம்பிக்கை கொள்ளும் ஒருவர் எத்தகைய ஆசியைப் பெறுவார் என்று எடுத்துச் சொல்லும் இயேசு, தொடர்ந்து தன்மீது நம்பிக்கை கொள்ளாமல் இருப்பவர் தண்டனைத் தீர்ப்புப் பெறுவார் என்கின்றார்.

இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளக்கூடியவர் அவரது வார்த்தையை நம்பவேண்டும். ஏனெனில், அவர் வார்த்தையானவர் (யோவா 1:14). யூதர்கள் இயேசுவின் வார்த்தைகளை நம்பாமல், அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல் போனார்கள். அதனால்தான் கிபி. 70 ஆம் ஆண்டு உரோமையர்களிடமிருந்து தண்டனையைப் பெற்றார்கள். யூதர்கள் மட்டுமில்லை, இயேசுவின் வார்த்தைகளைக் கேளாமலும் அவர்மீது நம்பிக்கை கொள்ளாமலும் இருந்தால், நாமும் தண்டனைத் தீர்ப்பைப் பெறுவோம் என்பது உறுதி.

சிந்தனை

‘கடவுள் நமக்கு கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோம். இதுவே அவரது கட்டளை’ என்பார் யோவான் (1 யோவா 3:23) என்பார் யோவான். ஆகவே, நாம் இயேசுவின் நம்பிக்கை வைத்து, அவருடைய அன்புக் கட்டளையைக் கடைப்பிடித்து நிலைவாழ்வையும் இறையருளையும் நிறைவாய்ப் பெறுவோம்

Comments are closed.