அன்னையர் தினத்திற்கு திருத்தந்தை வாழ்த்து
உலகின் பல்வேறு நாடுகளில் அன்னை தினம் இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, அனைத்து அன்னையர்களுக்கும் ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலியுரையின்போது தன் வாழ்த்துக்களை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையை வழங்கி செபித்தபின், அன்னை தினம் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தைகளை வளர்த்தெடுப்பதில், விலைமதிப்பிட முடியாதவகையில் சேவையாற்றும், மற்றும், குடும்ப மதிப்பீடுகளை பாதுகாக்கும் அன்னையருக்கு நாம் கரவொலி எழுப்பி, நன்றியையும் பாராட்டுக்களையும் வெளியிடுவோம் என்று கூறியதுடன், விண்ணகத்திலிருந்தும் நம்மை கண்காணித்துக்கொண்டு நமக்காக செபித்துக் கொண்டிருக்கும் அன்னையரையும் மறவாதிருப்போம், என்றார்.
வானகத்திலிருக்கும் நம் அன்னை மரியாவை நோக்கியும் நம் என்ணங்கள் செல்கின்றன, என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று, மே மாதம் 13ம் தேதி சிறப்பிக்கப்படும் பாத்திமா அன்னை மரியா பற்றியும் நினைவூட்டினார்.
நம் பாதையில் நாம் மகிழ்வுடனும் தராளமனதுடனும் தொடர்ந்து நடைபோட, அன்னை மரியாவின் கரங்களில் நம்மை முற்றிலுமாக ஒப்படைப்போம் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Comments are closed.