பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு (மே 12)

திருத்தூதர் பணிகள் 13: 14, 43-52
II திருவெளிப்பாடு 7: 9, 14-17
III யோவான் 10: 27-30

நிலைவாழ்வளிக்கும் நல்லாயன் இயேசு

நிகழ்வு

ஓய்வுப்பெற்ற ஆசிரியர் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் திடீரென இறந்துபோனார். இறந்த அவர் விண்ணகத்திற்குச் சென்றார். அப்பொழுது விண்ணக வாசலில் அமர்ந்திருந்த பேதுரு அவரைத் தடுத்து நிறுத்தி, “கொஞ்சம் நில்லுங்கள். விண்ணகத்திற்குள் நுழையவேண்டும் என்றால், நீங்கள் நூறு புள்ளிகள் (100 points) பெற்றிருக்கவேண்டும். அப்பொழுதுதான் உங்களால் நுழையமுடியும். இப்பொழுது சொல்லுங்கள்… நீங்கள் மண்ணுலகில் வாழ்ந்தபோது என்னென்ன நல்ல காரியங்கள் செய்தீர்கள் என்று” என்றார்.

உடனே அந்த ஓய்வுபெற்ற ஆசிரியர், “நாற்பது ஆண்டுகள் தவறாமல் கோவிலுக்குச் சென்று திருப்பலி கண்டிருக்கிறேன்” என்றார். “நாற்பது ஆண்டுகள் தவறாமல் திருப்பலி கண்டிருக்கிறீர்களா… சரி அதற்கு ஒரு புள்ளி. அடுத்து என்ன நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள்?” என்றார். ‘நாற்பது ஆண்டுகள் தவறாமல் திருப்பலி கண்டதற்கு ஒரு புள்ளிதானா?’ என்று மனதிற்குள் நினைத்தவராய், ‘நான் வின்சென்ட் தே பவுல் சபையில் உறுப்பினராக இருந்து ஏராளமான ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் செய்திருக்கிறேன்” என்றார். “வின்சென்ட் பவுல் சபையில் உறுப்பினராக இருந்து உதவிகள் செய்ததற்காக இன்னொரு புள்ளி. தொடர்ந்து சொல்லுங்கள்” என்றார் பேதுரு.

பேதுரு இவ்வாறு சொன்னதைக் கேட்டுப் அதிர்ந்துபோன அந்த ஓய்வுபெற்ற ஆசிரியர், “இப்படியே தொடர்ந்தால் என்னால் நிச்சயமாக விண்ணகத்திற்குள் நுழையமுடியாது… இறையருள் இருந்தால்தான் என்னால் விண்ணகத்திற்குள் செல்ல முடியும்” என்றார். “நீங்கள் சொல்வதுதான் சரி, இறைவனின் அருளின்றி எவரால் விண்ணகத்திற்குள் நுழையமுடியாது… இதை நீங்கள் நம்புகிறீர்களா?” என்றார் பேதுரு. “ஆமாம். நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார் ஓய்வுபெற்ற ஆசிரியர். “நீங்கள் இறைவன்மீது நம்பிக்கை வைத்திருப்பதால் உங்களுக்கு நூறு புள்ளிகள். இப்போது நீங்கள் விண்ணகத்திற்குள் போகலாம்” என்று சொல்லி பேதுரு அந்த ஓய்வுபெற்ற ஆசிரியரை விண்ணகத்திற்குள் அனுப்பி வைத்தார்.

இறைவன்மீது/இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து வாழ்கிறவருக்கே விண்ணகம்/நிலைவாழ்வு உண்டு என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் ஜாக் ம்கார்டல் (Jack Mcardle) என்ற எழுத்தாளர் சொல்கின்ற இந்நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய நற்செய்தியில் இயேசு, “நான் என் ஆடுகளுக்கு நிலைவாழ்வை அளிக்கிறேன்” என்கிறார். இயேசு அளிக்கின்ற நிலைவாழ்வினைப் பெற நாம் என்ன செய்வது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

நம்பினோருக்கு நிலைவாழ்வை அளிக்கும் நல்லாயன் இயேசு

நல்லாயன் ஞாயிறான இன்று நாம் வாசிக்கின்ற நற்செய்தியில் இயேசு கூறுகின்ற, “நான் அவற்றுக்கு நிலைவாழ்வை அளிக்கின்றேன்” என்று வார்த்தைகளை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளவேண்டுமெனில், இதற்கு முந்தைய பகுதியில் இயேசு கூறுகின்ற வார்த்தைகளையும் இணைத்துப் பார்க்கவேண்டும்.

இதற்கு முந்தைய பகுதியில் யூதர்கள் இயேசுவிடம், “நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்” என்று சொல்கின்றபோது, இயேசு அவர்களிடம், “நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள்தான் நம்பவில்லை. ஏனெனில் நீங்கள் என் மந்தையைச் சேர்ந்தவர்கள் அல்ல” என்கிறார் (யோவா 10: 24-26). இயேசு இங்கு பேசுகின்ற வார்த்தைகளிலிருந்து இரண்டு உண்மைகளை அறிந்துகொள்ளலாம். ஒன்று, இயேசுவின் மந்தையைச் சேர்ந்தவர் அவரை நம்பவேண்டும். அப்போதுதான் அவருக்கு நிலைவாழ்வு கிடைக்கும். இரண்டு, இயேசுவை நம்பாதவர் அவருடைய மந்தையாக இருக்கமுடியாது, அவருக்கு நிலைவாழ்வும் கிடையாது. அப்படியானால், இன்றைய நற்செய்தியில் நல்லாயனாம் இயேசு தருவதாகச் சொன்ன நிலைவாழ்வைப் பெற, அவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்வது இன்றியமையாததாக இருக்கின்றது.

ஆடுகளை அழிவிலிருந்து காப்பாற்றும் நல்லாயன் இயேசு

நல்லாயன் இயேசு ஆடுகளை அழிவிலிருந்து காப்பாற்றுபவராக இருக்கின்றார். அது எப்படியெனில், ஆடுகளுக்கு வாயிலாக இருக்கும் இயேசு (யோவா 10: 9) திருடரோ கொள்ளையரோ ஆடுகளை நெருங்கவிடாமல் பாதுகாக்கின்றார். மட்டுமல்லாமல், அரணும் கோட்டையும் கேடயமும் மீட்புமாக இருக்கின்ற அவர் (திபா 18:2) எதிரிகள் ஆடுகளை எந்தவிதத்திலும் தாக்காத வண்ணம் காக்கின்றார். இவ்வாறு இயேசு தன் மக்களை – தன் ஆடுகளை- எல்லாவிதமான அழிவிலிருந்தும் காப்பாற்றிப் பாதுகாக்கின்றார்.

இஸ்ரயேல் சமூகத்தில் போலி ஆயர்கள் ஏராளமான பேர் இருந்தார்கள். அவர்கள் மக்களை அடித்துத் தின்று கொழுத்துப் போனார்கள். அதுமட்டுமல்லாமல், அவர்கள் நலிந்தவற்றைத் தேற்றவும் இல்லை, திடப்படுத்தவும் இல்லை (எசே 34: 3-4) இப்படிப்பட்டவர்கள்தான் இயேசுவின் காலத்திற்கு முன்பு இருந்தார்கள். இவர்களே போலி ஆயர்கள். ஆனால், இயேசு அப்படிக் கிடையாது. அவர் ஆடுகள் அழிந்துபோகக்கூடாது என்பதற்காக தன்னுடைய வாழ்வைக் கொடுத்தார் (யோவா 10:10). அதனால்தான் அவர் நல்ல ஆயனாக இருக்கின்றார்.

ஆடுகளைத் தெரிந்து/அறிந்து வைத்திருக்கும் நல்லாயன் இயேசு

இயேசு தன்னுடைய ஆடுகளுக்கு நிலைவாழ்வு அளிக்கின்றார்; அவற்றை அழிவிலிருந்து காப்பாற்றுகின்றார். அவற்றோடு அவர் தன்னுடைய ஆடுகளை தெரிந்தும்/அறிந்தும் வைத்திருக்கின்றார் என்று இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துரைக்கின்றது. அவர் எப்படி தன்னுடைய ஆடுகளை தெரிந்து/அறிந்து வைத்திருக்கின்றார் என்பதை இப்போது பார்ப்போம்.

திருப்பாடல் ஆசிரியர் இவ்வாறு கூறுவார்: “நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலைவிலிருந்தே உய்த்துணர்கிறீர்.” (திபா 139: 2) இவ்வார்த்தைகளை நாம் இயேசுவின் வாழ்வோடு ஒப்பிடும்போது அவை அப்படியே பொருந்திப் போகின்றன. இயேசு தன்னுடைய பணிவாழ்வில் ஏராளமான மக்களைக் குணப்படுத்தினார். அதில், மக்கள் அவர்மீது நம்பிக்கையோடு வந்து குணம்பெற்றுச் சென்றபோக, ஏராளமான மக்களை அவராகவே குணப்படுத்தினார். குறிப்பாக அவர் பெருந்திரளான மக்களைக் கண்டபோது, அவர்கள்மீது பரிவுகொண்டு அவர்களிடமிருந்த நோயாளிகளைக் குணப்படுத்தியதையும் (மத் 14: 14) உணவளித்ததையும் முப்பதெட்டு ஆண்டுகளாக உடல் நலமாற்றிருந்தவரைக் குணப்படுத்தியதையும் ( யோவா 5: 1-4) எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம். இயேசு இம்மனிதர்களை எல்லாம் அவர்கள் கேட்கும்முன்பாக, தாமாகவே முன்வந்து குணப்படுத்தியது, அவர் தன் ஆடுகளைத் தெரிந்துவைத்திருக்கின்றார் என்பதையே காட்டுகின்றது. மட்டுமல்லாமல், இயேசு தன்னுடைய சீடர்களையும் மற்ற மனிதர்களையும் பெயர் சொல்லி அழைத்ததுகூட, அவர் தன் ஆடுகளை முழுமையாக அறிந்துவைத்திருக்கின்றார் என்பதையே காட்டுகின்றது.

இப்படி ஆடுகளை முழுவதும் அறிந்து, அழிவிலிருந்து காப்பாற்றி, நிலைவாழ்வு தருகின்ற நல்லாயனின் மந்தையாக இருக்க ஒவ்வொருவரும் என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்பது தேவையான ஒன்றாக இருக்கின்றது. நல்லாயனின் மந்தையாக இருக்க நாம் செய்யவேண்டியதெல்லாம், இன்றைய நற்செய்தியில் நாம் வாசிப்பதுபோல, 1.நல்லாயனின்மீது நம்பிக்கை வைத்து வாழ்வதும் 2. அவருடைய குரலுக்குச் செவிசாய்ப்பதும் 3.அவரைப் பின்தொடர்ந்து செய்வதுமாகும். இம்மூன்று காரியங்களையும் கடைப்பிடித்து வாழ்ந்தால் அவருடைய மந்தையாக மாறுவோம் என்பது உறுதி

Comments are closed.