நற்செய்தி வாசக மறையுரை (மே 08)

பாஸ்கா காலம் மூன்றாம் வாரம்
புதன்கிழமை
யோவான் 6: 35-40

“என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்”

நிகழ்வு

மாவீரன் நெப்போலியனுடைய படையில் படைவீரன் ஒருவன் இருந்தான். அவனுக்கு நெப்போலியன்மீது அளவுகடந்த பாசமும் அவனால் எதையும் செய்யமுடியும் நம்பிக்கையும் இருந்தது. ஒருநாள் அந்தப் படைவீரன் எதிரிநாட்டோடு நடந்த போரில் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான். அப்பொழுது அவன் மற்ற படைவீரர்களிடம், “எனக்காக இப்போது நெப்போலியனை இங்கு அழைத்து வரமுடியுமா? அவர் மட்டும் இங்கு வந்தால், என்னைச் சாவிலிருந்து காப்பாற்றி விடுவார்” என்றான். அந்தப் படைவீரன் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாவீரன் நெப்போலியன் அவனிடம் அழைத்துவரப்பட்டான்.

நெப்போலியனைப் பார்த்ததும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்தப் படைவீரனுக்கு, ‘நெப்போலியனால் எப்படியும் தன்னைக் காப்பற்றிவிட முடியும்’ என்ற நம்பிக்கை பிறந்தது. நெப்போலியன் அந்தப் படைவீரனுடைய அருகில் வந்து, அவனுடைய கையைப் பிடித்துப் பார்த்தான். அப்போது அவன் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதுபோல் தலையாட்டினான். இதைப் பார்த்து அந்தப் படைவீரன், “அரசே! உங்களால் என்னைச் சாவிலிருந்து காப்பாற்ற முடியும் என்றல்லவா நம்பிக்கொண்டிருந்தேன்… இப்படி ஒன்றுமே செய்யமுடியாது என்பதுபோல் தலையாட்டுகிறீர்களே! இன்னும் சிறிதுநேரத்திற்குள் நான் இறந்துவிடுவேன். அதற்குள் என்னைக் காப்பாற்றுங்கள்!” என்று கத்தினான்

ஒருகட்டத்தில் நெப்போலியனால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்தவனாய் அந்தப் படைவீரன் கத்தாமல், அசைவுற்று இருந்து, அப்படியே இறந்துபோனான்.

மாவீரன் நெப்போலியன் மிகப்பெரிய அரசனாக, வீரனாக இருந்தாலும், அவனால் ஒருவரைச் சாவிலிருந்து காப்பாற்ற முடியவில்லை என்பது துரதிர்ஷ்டவசம் அல்லது வேதனை கலந்த உண்மை. மாவீரன் நெப்போலியனால் மட்டுமல்ல, இந்த உலகத்தில் இருக்கின்ற யாராலும் ஒருவரைச் சாவிலிருந்து, அழிவிலிருந்து காப்பாற்ற முடியாது. ஆனால், இயேசுவால் முடியும். அது எப்படி என்று இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

மானிடரை அழிய விடாமல் இறுதிநாளில் உயிர்த்தெழச் செய்யும் இயேசு

நற்செய்தியில் இயேசு யூதர்களிடம், “என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்; அவர் (தந்தை) என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழியவிடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்யவேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம்” என்கின்றார்.

எவரும் அழிந்துபோய்விடக்கூடாது அல்லது அனைவரும் உயிர்த்தெழ வேண்டும் இதுதான் தந்தையின் விரும்பமும் இயேசுவின் விருப்பமும் ஆகும். இதைத்தான் தூய பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்தில், “எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார்” (1திமொ 2:4) என்று கூறுவார். தூய பேதுருவோ, “யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார்” (2பேது 3:9) என்று கூறுவார். இறைவனின் இவ்விரும்பம் அதாவது எல்லாரும் மீட்புப் பெறவேண்டும் என்பது நிறைவேறவேண்டும் என்றால், அதற்கு மானிடர் யாவரும் ஒன்றைச் செய்தாக வேண்டும். அது என்ன என்று இப்போது பாப்போம்.

இறுதிநாளில் உயிர்த்தெழ அல்லது நிலைவாழ்வு பெற இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளவேண்டும்

எல்லாரும் மீட்புப் பெறுவது அல்லது உயிர்த்தெழுவது இறைவனின் திருவுளம் என்றால், அதற்கு மானிடர் யாவரும் ஒன்றைச் செய்யவேண்டும். அதுதான் இயேசுவின்மீது ஒவ்வொருவரும் கொள்ளக்கூடிய நம்பிக்கை. நற்செய்தியில் அதைத்தான் இயேசு, “மகனைக் கண்டு, அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறவேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம்” என்று கூறுகின்றார்.

இங்குதான் பிரச்சினையே இருக்கின்றது. இயேசு சொன்ன வார்த்தைகளைக் கேட்டும் அவர் செய்த செயல்களைக் கண்டும் யூதர்கள் அவர்மீது நம்பிக்கை கொண்டிருக்கலாம். ஆனால், அவர்கள் அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல், ‘இவர் தச்சர் மகன்தானே’ ‘இவரைப் பற்றி நமக்குத் தெரியாதா?’ என்று புறக்கணித்தார்கள். நாமும் பலநேரங்களில் இறைவனின் வார்த்தையைக் கேட்டும் அவர் நம் நடுவில் செயலாற்றுவதைக் கண்டும் அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இப்படி இறைவன்மீதும் அவர் மகன் இயேசுவின்மீதும் நம்பிக்கை கொள்ளாமல் வாழ்ந்தோமெனில், இறுதிநாளில் உயிர்த்தெழ முடியாது என்பது உண்மை.

சிந்தனை

‘உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் இறப்பினும் வாழ்வார்’ (யோவா 11:25) என்பார் இயேசு. ஆகவே, நம்மை உயிர்த்தெழவும் அழியவிடாமல் காக்கவும் செய்யும் இறைமகன் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, அவர் காட்டிய வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

Comments are closed.