தேவமாதாவின் வணக்கமாதம் – மே 07- ஏழாம் நாள்

சம்மனசானவர் தேவமாதாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதின் பேரில்

1-வது இந்தப் பரம இரகசியத்தில் சர்வேசுரனுடைய நேசம் விளங்குகிறது.

2-வது தேவ சுதனுடைய மனத்தாழ்ச்சி விளங்குகிறது.

3-வது தேவமாதா பெற்ற மகிமை விளங்குகிறது.

1-வது , சர்வேசுரன் உலகத்தை மீட்பதற்காக நமக்குச் சரிசமானமாய் இருக்கிற தம்முடைய ஏக குமாரன் மனித அவதாரம் எடுக்க சித்தமாகி கன்னிமரியாயிடத்தில் ஓர் சம்மனசை அனுப்பித் தமது சித்தத்தை வெளிப்படுத்தினார். இந்தக் கன்னிகை தமக்குச் சொன்ன மங்கள் வார்த்தைகளை மிகுந்த தாழ்ச்சியோடு கேட்டு தேவசித்தத்துக்கு உட்பட்டுச் சுதனாகிய சர்வேசுரனைத் தமது திரு உதரத்தில் பிள்ளையாகத் தரித்தார்கள் என்பது சத்தியம். இந்தப் பரம இரகசியத்தில் சர்வேசுரன் தமது அளவில்லாத நேசமும், மிகுதியான தயாளமும், அளவறுக்கப்படாத ஞானமும் விளங்கச் செய்தார். ஆகையால் பாவ விமோசனம் செய்வதற்குச் சுதனாகிய சர்வேசுரன் மனித அவதாரம் எடுத்து தமது இரத்தமெல்லாம் சிந்த வேண்டியதிருந்ததால் பாவமானது சகல பொல்லாப்பு களிலும் மிகப்பெரிய பொல்லாப்பாய் இருக்கிறதென்று அறியக்கடவோம். அத்துடன் நமது மீட்பருக்கு தாயாக சர்வேசுரன் கன்னிமரியாயைத் தெரிந்து கொண்டதினால் அவருடைய தயாளத்துக்காக தோத்திரம் சொல்லி தேவமாதாவுக்கு மங்கள வார்த்தை சொன்ன வானதூதருடன் சேர்ந்து அன்னையை நாம் வணங்குவோமாக.

2-வது, தேவமாதாவின் திரு உதரத்தில் மனித அவதாரம் எடுத்த சுதனாகிய சர்வேசுரன் நம்மை மிகவும் தாழ்த்திக்கொண்டார். எப்படியெனில் நோவுக்கும் சாவுக்கும் எட்டாதவருமாய்ச் சர்வத்துக்கும் வல்லவருமாய் அளவில்லாதவருமாய் இருக்கிறவர் மனித அவதாரத்தின் வழியாக சாவு நோவு வேதனை முதலான நிர்ப்பந்தங்களுக்குட்பட்டு பாவத்தினால் தமது பிதாவாகிய சர்வேசுரனுக்கு வந்த அவமானங்களைப் பரிகரிக்க வேண்டுமென்று தம்மை அளவின்றித் தாழ்த்திக் கொண்டார். தாழ்ச்சியாகிற புண்ணியத்தை நமக்குக் கற்றுக்கொடுக்கும்படியாக அளவின்றித் தம்மை தாழ்த்திக்கொண்ட சர்வேசுரன் சமூகத்தில் நீசப்புழுவாகிய மனிதன் அகங்காரங்கொள்ளுகிறது எவ்வளவு அநியாயமும் அக்கிரமுமாயிருக்கிறது. ஆனால் தாழ்ச்சியில்லாதவன் கரையேறக் கூடாது என்பதினால் மிகவும் அவசியமான இந்தப் – புண்ணியத்தை உங்கள் ஆத்துமத்தில் விளைவிக்க வேண்டுமென்று தேவமாதாவையும் அவர்களுடைய திரு மைந்தனையும் நோக்கி மன்றாடுவீர்களாக.

3-வது, இந்தப் பரம இரகசியத்தில் கன்னி மாமரியாள் அடைந்த உன்னத மகிமையைப்பற்றி தியானிப்போம். சுதனாகிய சர்வேசுரன் அவர்களிடத்தில் மனிதவதாரம் எடுத்த வேளையில் அந்தப் பரிசுத்த கன்னிகை ஒருக்காலும் கன்னி மகிமை கெடாமல் சர்வேசுரனுடைய மெய்யான தாயாகி மனிதர்களுக்கும் சகல சம்மனசுகளுக்கும் மேலானார்கள். சர்வேசுரன் அளவில்லாத வல்லமையுள்ளவராய் இருந்தாலும், இந்த மேன்மையைவிட அதிகமான மேன்மை வேறு எவருக்கும் அவரால் கொடுக்க முடியாது. வேதபாரகர் சொல்லியுள்ளபடி சர்வேசுரன் இந்த உலகத்தைக் காட்டிலும் மேன்மையான வேறு உலகை உண்டு பண்ணலாம். ஆனால் தேவமாதாவைப் பார்க்க அதிக உத்தமமான மாதாவை உண்டு பண்ண முடியாது. ஆகையால் அத்தகைய மேலான மகிமையைப் பெற்ற கன்னிமாமரியாள் திருப்பாதம் பற்றி அவர்களை உற்சாகத்தோடு வணங்கி அன்னையின் அடைக்கலத்தை தேடிச் செல்வோமாக.

செபம்

சர்வேசுரன் மேன்மையான மகிமைப் பிரதாபத்துக்குத் தெரிந்து கொண்ட நிகரில்லாத பரிசுத்த கன்னிகையே! பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் இராக்கினியே, தாழ்ச்சியுள்ள மாமரியே! என் அகங்கார கர்வத்தோடு உமது அண்டையில் நிற்க வெட்கப்பட்டு நான் உம்மிடத்தில் பேச அஞ்சி நடுங்குகிறேன். ஆகிலும் பாவியாயிருந்தாலும் வானதூதரோடு உமக்கு மங்கள வார்த்தை சொல்ல ஆசையா யிருக்கிறேன். ஆகையால் அருள் நிறைந்த மரியாயே வாழ்க! நீர் பூரணமாய் அடைந்த இஷ்டப் பிரசாதத்தில், ஏதாகிலும் எனக்குக் கொடுத்தருளும். சர்வேசுரன் உம்மிடத்தில் இருக்கிறாரே அவர் என்னிடத்தில் இருக்கவும் நான் அவருடன் மோட்சத்தில் வீற்றிருக்கவும் எனக்கு தயை செய்தருளும்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே, வாழ்க.

ஏழாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :

ஒவ்வொருவரும் தான் பாவசங்கீர்த்தனம் எப்போது செய்ததென்றும், தன் குடும்பத்திலுள்ளவர்கள் எப்போது செய்தார்களென்றும் விசாரிக்கிறது.

Comments are closed.