புனித ஜான் வியானி
இவர் பிரான்ஸ் நாட்டிலுள்ள டார்டிலி என்ற இடத்தில் 1786ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் நாள் பிறந்தார். பிறந்த அன்றே திருமுழுக்கு பெற்றார். இவரது பெற்றோர் பெயர் மாத்யு வியானி, மரியா இவர்களுக்கு ஆறு குழந்தைகள் இவர்களுள் நம் புனிதர் நான்காவது குழந்தை ஆவார். இவர்களுடைய குடும்பம் கத்தோலிக்கக் குடும்பம். உரோமிற்குப் புனிதப் பயணம் செய்த புனித பெனடிக்ட் ஜோசப் லப்ரே இவர்கள் வீட்டில் தங்கியிருந்தார்.
1790 ஆண்டில் நடந்த பிரஞ்சிப்புரட்சியினால் கிறிஸ்தவர்கள் மறைவான வாழ்க்கை வாழ்ந்தனர். அப்போது குருக்களின் பணி சவாலாக இருந்தது. குருக்கள் நம் புனிதருக்கு ஹீரோக்களாக தெரிந்தனர். கத்தோலிக்கர்கள் மறைவாக வாழ்ந்தபோதே இவர் இரு துறவர கன்னியர்களால் மறைக்கல்வி கற்றார். தன் 13ஆம் வயதில் புதுநன்மை வாங்கினார். 20வது வயதில் குருக்கள் நடத்தும் விடுதிப்பள்ளியில் கல்வி பயின்றார். பிரெஞ்சுப் புரட்சியினால் இவரது கல்வி தடைப்பட்டது. இவருக்குப் படிப்பு வரவில்லை. ஆனாலும் இலத்தீன் கற்க மிகுந்த முயற்சி எடுத்தார்.
1809ஆம் ஆண்டு நெப்போலியனின் படைக்கு ஆட்கள் தேவையிருந்ததால், நம் புனிதரும் கட்டாயமாக படையில் சேர்க்கப்பட்டார். இராணுவத்தில் சேர்ந்த இரண்டு நாளில் இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஜெரோம் வின்சென்ட் என்பவர் இவரை இராணுவத்திலிருந்து தப்பியவர்கள் கூட்டத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு ஒரு வருடம் இருந்தார். அருகிலுள்ள லெஸ் நோயஸ் என்ற இடத்தில் ஒரு பள்ளி தொடங்கினார். நம் புனிதர் 1810ஆம் ஆண்டு வரை அங்கேயே தங்கி இருந்தார். இராணுவத்திலிருந்து தப்பியவர்களுக்கு பொது மன்னிப்பு கிடைத்தது. அதனால் அவர் மறுபடியும் குருமடத்தில் சேர்ந்து படித்தார். 1812- ல் திருத்தொண்டராக திருநிலைப்படுத்தப்பட்டார். 1815ஆம் ஆண்டு ஆகஸ்டு 12-ல் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு எக்குலி என்ற இடத்தில் உதவிப் பங்குத் தந்தையாக பணிபுரிந்தார். மூன்று ஆண்டுகள் கழித்து அர்ஸ் என்ற இடத்தின் பங்குத் தந்தையானார். நம் புனிதர் ஞாயிறு மறையுரைகளில் குடிப்பதையும், ஆடுவதையும் நிறுத்தச்சொல்வார். ஆனால் மக்கள் கேட்காததால், அத்தீய பழக்கங்களை நிறுத்தாதவரை அவர்களுக்கு பாவசங்கீர்த்தனம் தருவதில்லை என்று அறிவித்தார்.
தினமும் 11-12 மணி நேரம் மக்களை மனம் திருப்புவதிலேயே தன் நேரத்தை செலவிட்டார். ஒய்வை மறந்துவிடுவார். இவரது புகழ் எங்கும் பரவிற்று. 1827-ல் மக்கள் பல ஊர்களிலிருந்தும் இவரைப் பார்க்கவும், இவரிடம் பாவசங்கீர்த்தனம் செய்யவும், இவரின் பரிந்துரைக்காகவும் வந்தனர். வருடத்திற்கு சுமார் 20,000 மக்களுக்கு மேலானவர்கள் இவரைத் தரிசிக்க திரியாத்திரையாக வந்தனர். மக்கள் ஆன்மா தூய்மை அடைய கடினமாக உழைத்தார். இவரது ஆயர் குருக்கள் செய்யும் தியானத்தில் பங்கு பெறவேண்டாம் என்று கூறி மக்களின் ஆன்ம காரியத்தைப் பார்க்கச் சொல்வார். மிகவும் எளிய வார்த்தைகளைப் பயன்படுத்தித்தான் மறையுரை நிகழ்த்துவார். இவரின் மறையுரையை எளிதாகப் புரிந்து கொள்வர். இயேசு எதற்காக இந்த உலகிற்கு வந்து பொல்லாதவர்களுக்காத் தன்னுயிரையே கொடுத்து அவர்களை மீட்டார் என்றும் எளிய முறையில் மறையுரை நிகழ்த்துவார். எளிய. வார்த்தை, ஆனால் நெருப்பாக எரியும். மறக்க முடியாத வார்த்தைகள் என கேட்ட மக்கள் மகிழ்ந்தனர்.
தாய் மரியாவிடம் அதிக பக்தி கொண்டிருந்தார். இவருடைய. பங்கில் எல்லோருடைய வீட்டிலும் அன்னை மரியாளின் படம் இருக்கும்படிச் செய்து, அன்னையின் பக்தியை வளர்த்தார். நெஞ்சிலே கைவைத்து, முழங்தாள்படியிட்டு செபிப்பார். கடுமையான தவ வாழ்வை மேற்கொண்டார். இவரிடம் அருள்சாதனம் பெறுவதற்காக அநேக மக்கள் ஐரோப்பாவிலிருந்து வருவார்கள். புனித பிலோமினம்மாளிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். தனது பாதுகாவலராக பிலோமினம்மாளையே நினைத்து செபித்துக் கொண்டிருப்பார். புனித பிலோமினம்மாளுக்காக ஆலயம் ஒன்றைக் கட்டி, அதைத் திருத்தலமாக்கினார். 1843-ல் மே மாதம் நோய்வாய்ப்பட்டார். புனித பிலோமினம்மாளிடம் வேண்டிக்கொண்டு நலம் பெற்றார். இவர் கடின தவ வாழ்வையே விரும்பினார். இதனால் நான்கு முறை பங்குத்தளத்திலிருந்து ஓடிவிட நினைத்தார். ஆனால் இறைவனின் திருவுளத்திற்குத் தன்னையே கையளித்து, சிறந்த பங்குத் தந்தையாகவே திகழ்ந்தார்.
1859ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4ஆம் தேதி தன் 73வது வயதில் நோய்வாய்ப்பட்டு விண்ணக வாழ்வை அடைந்தார். இவரது அடக்கத் திருப்பலியில் ஆயர், 300 குருக்கள், 6000 மக்கள் கலந்துகொண்டனர். திருத்தந்தை 9ஆம் பத்திநாதர் 1874ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி அன்று அருளாளர் பட்டம் கொடுத்தார். திருத்தந்தை 11ஆம் பத்திநாதர் 1925ஆம் ஆண்டு புனிதராக உயர்த்தினார். 1929ஆம் ஆண்டு பங்குக் குருக்களின் பாதுகாவலராக ஆக்கினார். நம் புனிதரின் திருவிழா ஆகஸ்டு மாதம் 4ஆம் தேதி நடைபெறுகிறது
Comments are closed.