மே 5 : ஞாயிற்றுக்கிழமை. நற்செய்தி வாசகம்

இயேசு அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-19

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர்.

அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், “நான் மீன்பிடிக்கப் போகிறேன்” என்றார்.

அவர்கள், “நாங்களும் உம்மோடு வருகிறோம்” என்று கூறி, போய்ப் படகில் ஏறினார்கள்.

அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.

ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது.

இயேசு கரையில் நின்றார்.

ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை.

இயேசு அவர்களிடம், “பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?” என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், “இல்லை” என்றார்கள்.

அவர், “படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்” என்று அவர்களிடம் கூறினார்.

அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.

இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், “அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்” என்றார்.

அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். மற்ற சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.

படகை விட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது.

இயேசு அவர்களிடம், “நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்” என்றார்.

சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.

இயேசு அவர்களிடம், “உணவருந்த வாருங்கள்” என்றார்.

சீடர்களுள் எவரும், “நீர் யார்?” என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள்.

இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.

இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.

அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார்.

அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார்.

இயேசு அவரிடம், “என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்” என்றார்.

இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார்.

அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார்.

இயேசு அவரிடம், “என் ஆடுகளை மேய்” என்றார்.

மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?” என்று கேட்டார்.

`உனக்கு என்னிடம் அன்பு உண்டா?’ என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், “ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?” என்றார்.

இயேசு அவரிடம், “என் ஆடுகளைப் பேணி வளர். நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார்.

பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்னபின் பேதுருவிடம், “என்னைப் பின்தொடர்” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மையசிந்தனை.

என்மீது அன்பு செலுத்துகிறாயா?

மறையுரை.

நகரில் இருந்த ஒரு தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்புப் படித்துவந்த மகிழினி, கோடை விடுமுறைக்காகத் தன்னுடைய பெற்றோரோடு ஊரில் இருந்த உறவினரின் வீட்டிற்கு நான்கு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாள். இடையில் ஒரு திருப்பத்தில் எதிரே வந்த லாரி, மகிழினியும் அவருடைய பெற்றோரும் சென்றுகொண்டிருந்த வாகனத்தின்மீது மோத, அவளுடைய பெற்றோர் அந்த இடத்திலேயே இறந்துபோனார்கள். மகிழினி மட்டும் எப்படியோ சிறு காயங்களோடு உயிர் தப்பினாள். இந்தக் கோர சம்பவத்திற்குப் பிறகு மகிழினி, ஊரில் இருந்த அவளுடைய உறவினரின் வீட்டில் வளர்ந்துவந்தாள். நாட்கள் செல்லச் செல்ல, அவளுடைய உறவினர் அவளை வளர்ப்பது மிகவும் கடினம் என்று நினைத்து அவளை ஓர் அனாதை இல்லத்தில் கொண்டுபோய்ச் சேர்ந்தனர். ஏற்கனவே பெற்றோரை இழந்த துயரத்திலிருந்து மீளமுடியாமல் இருந்த மகிழினிக்கு, அவளுடைய உறவினர் அவளை அனாதை இல்லத்தில் கொண்டுவந்து விட்டது, அவளுக்கு தாங்கிக்கொள்ள முடியாத துயரத்தைத் தந்தது. இதனால் அவள் அனாதை இல்லத்தில் இருந்த யாரிடமும் பேசாமல், பழகாமல் அமைதியாகவே இருந்தாள்.

அனாதை இல்லத்தில் மகிழினி இப்படி இருந்ததால், அந்த அனாதை இல்லத்தில் பொறுப்பாளராக இருந்தவர் அவளுடைய நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார். ஒருநாள் அதிகாலை வேளையில், அனாதை இல்லத்தின் பொறுப்பாளராக இருந்தவர், தான் இருந்த அறையின் சாளரத்தின் வழியாகப் பார்த்தபோது, மகிழினி தன்னுடைய கையில் ஏதோவொரு வெள்ளைத் தாளை எடுத்துக்கொண்டு, அதை அனாதை இல்லத்திற்குப் பின்னால் இருந்த வேப்பமரத்தின் அடிவாரத்தில் வைத்துவிட்டு வந்தாள். அவள் அங்கிருந்து போனபிறகு, இல்லப் பொறுப்பாளர் மகிழினி வைத்துவிட்டு வந்த அவ்வெள்ளைத் தாளில் என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்று பார்க்கத் சென்றார். அவர் அந்த வெள்ளைத் தாளை எடுத்து வாசித்தபோது, அதில், “உங்களை நான் அன்புசெய்கிறேன்” என்று எழுதப்பட்டிருந்தது. இதை வாசித்தபிறகு இல்லப் பொறுப்பாளர் மகிழினியை அதிகமாக அன்பு செய்யத் தொடங்கினார். அவர் மட்டுமல்ல அந்த வெள்ளைத் தாளைப் படித்த எல்லாரும் மகிழினியை அன்பு செய்யத் தொடங்கினார்கள்.

இந்நிகழ்வில் வரும் மகிழினி எப்படித் தன்னுடைய சோகத்தை மறந்து இல்லத்தில் இருந்த எல்லாரையும் அன்பு செய்யத் தொடங்கினாளோ, அதுபோன்று, இன்றைய நற்செய்தியில் வரும் பேதுரு மற்ற எல்லாரையும் விட இயேசுவை மிகுதியாக அன்பு செய்யத் தொடங்குகின்றார். பேதுரு இயேசுவின்மீதுகொண்ட அன்பு எத்தகையது? அந்த அன்பின் வெளிப்பாடாக, அவர் இயேசுவுக்கு என்ன செய்தார்? நாம் இயேசுவின்மீது கொண்டிருக்கும் அன்பு எத்தகையது? அதற்காக நாம் என்ன செய்யப்போகிறோம்? என்று இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

மனம்வருந்திய பேதுரு.

யோவான் நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகம், உயிர்த்த ஆண்டவர் இயேசு, சீடர்களுக்குத் திபேரியக் கடலருகே தோன்றுவதையும் தொடர்ந்து இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே நடக்கும் உரையாடலையும் குறித்துப் பேசுகின்றது.

இயேசு கிறிஸ்து உயிர்த்தபிறகு தன் சீடர்களுக்கு அதிலும் குறிப்பாக பேதுருவுக்கு ஓரிருமுறை தோன்றினாலும், திபேரியக் கடலருகே தோன்றியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், ‘இயேசுவை மும்முறை மறுதலித்துவிட்டோமே’ என்ற குற்றஉணர்வோடு இருந்த பேதுரு, அதிலிருந்து வெளிவரவும் இயேசுவின்மீது தனக்கிருக்கும் அன்பை வெளிக்காட்டவும் பேதுருவுக்கு இந்நிகழ்வு ஒருவாய்ப்பாக இருக்கின்றது. இதில் கவனிக்கவேண்டிய விடயம் என்னவெனில், தான் செய்த குற்றத்தை பேதுரு இயேசுவிடம் அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்கும் முன்னமே, இயேசு அவரை மன்னிக்கின்றார். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், “நொறுங்கிய, குற்றத்தை உணர்ந்த நெஞ்சத்தோடு (திபா 51: 17) இருந்த பேதுருவை, அவர் தன்னுடைய குற்றத்தை அறிக்கையிடும் முன்னமே அல்லது அறிக்கையிடாமலே மன்னித்து ஏற்றுக்கொள்கின்றார் இயேசு.

மிகுதியாக அன்புசெய்த பேதுரு.

பேதுரு தன்னுடைய குற்றத்தை உணர்ந்து நிற்கிறார் என்பதை அறிந்த இயேசு, அவரைத் தான் மன்னித்துவிட்டேன் என்பதையும் அவர் தன்னிடம் மிகுதியாக அன்புகொண்டிருக்கின்றார் என்பதையும் மற்ற சீடர்களுக்குக் காட்டும்பொருட்டு, ”யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்கின்றார். இக்கேள்வியை இயேசு பேதுருவிடம் மூன்றுமுறை கேட்கின்றார். பேதுருவும், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே” என்று மூன்றுமுறை சொல்கின்றார். இதன்மூலம் இயேசு தன்னை மும்முறை மறுதலித்திருந்த பேதுருவை, மற்ற எல்லாரையும்விட அன்புசெய்வதை மற்ற சீடர்களுக்கு வெளிப்படுத்துகின்றார்.

இயேசு பேதுருவிடம் கேட்கக்கூடிய கேள்வியை, “பேதுருவே! நீ இந்தப் படகு, வலை, உன்னுடைய உறவுகள் இவற்றுக்கெல்லாம் மேலாக என்னை அன்பு செய்கிறாயா?” என்று இயேசு கேட்பதாகக் கூட எடுத்துக்கொள்ளலாம். பேதுருவும் மற்ற எல்லாவற்றையும்விட எல்லாரையும்விட இயேசுவை மிகுதியாகக் அன்புசெய்கின்றார். அந்த அன்பிற்கு ஈடாக அவர் இயேசுவுக்காக எதையும் செய்யத் துணிகின்றார்.

இயேசுவின் மந்தையைப் பேணிகாத்த, அதற்காக உயிர்தந்த பேதுரு .

உயிர்த்த ஆண்டவர் இயேசு பேதுருவிடம், நீ என்னை அன்புசெய்கிறாயா? என்பதும் பதிலுக்குப் பேதுரு, ஆம் ஆண்டவரே என்று சொல்வதையும் தொடர்ந்து இயேசு, “என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர், ஆடுகளை மேய்’ என்று சொல்கின்றார். இயேசு பேதுருவிடம் இவ்வாறு சொல்வது, அவர் திருஅவையின் தலைவராகவும் மேய்ப்பராகவும் இருந்து தன்னிடம் ஒப்படைப்பட்ட மக்களை பேணி வளர்க்க இருப்பதை எடுத்துக்கூறுகின்றது. பேதுருவும் இயேசு தன்னிடம் சொன்னதற்கு ஏற்ப, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட இறைமக்கள் சமூகத்தைப் பேணி வளர்க்கின்றார்; மேற்பார்வை செய்கின்றார்; எல்லாவற்றையும் மன உவப்போடு செய்கின்றார் (1 பேது 5:2); இறுதியில் நல்ல ஆயானாம் இயேசுவைப் போன்று (எபி 13: 20-21; 1 பேது 5:4) ஆடுகளுக்காகத் தன் உயிரையும் தருகின்றார்.

ஆடுகளைப் பேணி வளரவேண்டிய பொறுப்பு அல்லது இறைமக்கள் சமூகத்தைப் பேணிவளர்க்க வேண்டிய பொறுப்பு எப்படி பேதுருவிடம் கொடுக்கப்பட்டதோ, அதுபோன்று நம்மிடமும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே, நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பினை உணர்ந்து, மந்தையை நல்ல முறையில் பேணி வளர்ப்பதும் மேற்பார்வை செய்வதும் இவற்றையெல்லாம் கட்டாயத்தின் பேரில் அல்ல, மன உவப்புடன் செய்வது நம்முடைய கடமையாகும்.

சிந்தனை.

‘என்மீது அன்புகொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைபிடிப்பீர்கள்’ என்பார் இயேசு (யோவா 15:14) நாம் இயேசுவை அன்பு செய்கிறோம் என்பதை, பேதுருவைப் போன்று அவருடைய மந்தையைப் பேணிப் காப்பதன் மூலமாகவும் மந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் வழியாகவும் வெளிப்படுத்துவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

Comments are closed.