மே 3 : நற்செய்தி வாசகம்

இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்து கொள்ளவில்லையா?

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 6-14

அக்காலத்தில் இயேசு, தோமாவை நோக்கி: “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டும் இருக்கிறீர்கள்” என்றார்.

அப்போது பிலிப்பு அவரிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார். இயேசு அவரிடம் கூறியது: “பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்.

அப்படியிருக்க, `தந்தையை எங்களுக்குக் காட்டும்’ என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார்.

நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றை விடப் பெரியவற்றையும் செய்வார்.

ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————
மறையுரைச் சிந்தனை (மே 03)

திருத்தூதர்களான தூய பிலிப்பு, யாக்கோபு விழா

இன்று திருச்சபையானது திருத்தூதர்களான தூய பிலிப்பு, யாக்கோபு ஆகியோரின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இவர்களது விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் இவர்கள் வழியாக இறைவன் நமக்குத்தரும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

பிலிப்புவைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்போது, இவர் பெத்சாய்தாவைச் சார்ந்தவர், திருமணமானவர். ஆண்டவர் இயேசு பேதுருவையும், அந்திரேயாவையும் அழைத்த பிறகு, இவரையும் அழைக்கின்றார். இயேசு இவரை அழைத்த உடனே, இவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கின்றார். (யோவான் 1:45). அதோடு மட்டுமல்லாமல், தான் அடைந்த மகிழ்ச்சியை, சந்தோசத்தை நத்தனியேலிடம் எடுத்துச் சொல்கிறார். இந்த நத்தனியேல்தான் இயேசுவை “நீரே இறைமகன், நீரே இஸ்ரேயல் மக்களின் அரசர்’ அழைக்கிறார். இயேசுவைப் பற்றி பிலிப்பு நத்தனியேலிடம் எப்படிச் சொல்லியிருந்தால், அவர் இயேசுவை இறைமகன் என்று அழைத்திருக்கமுடியும் என்று நாம் சிந்தித்துப் பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஒருமுறை கிரேக்க மொழி பேசுபவர் சிலர் இயேசுவைப் பார்க்க முயன்றபோது பிலிப்புதான் அவர்களை இயேசுவிடம் அழைத்து வருகிறார்; அவர்களுக்கு இயேசுவை அறிமுகம் செய்துவைக்கிறார் (யோவான் 12: 20-22). இவ்வாறு மக்களை இயேசுவிடம் அழைத்துவரும் ஒரு சிறப்பான பணியை பிலிப்பு செய்தவராக இருக்கின்றார்.

ஆண்டவர் இயேசு கலிலேயாக் கடலோரம் அப்பங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு முன்பாக பிலிப்பிடம் தான், “இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?” என்று கேட்டார். அதற்கு அவர், “இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறுதுண்டும் கிடைக்காதே” என்கிறார் (யோவான் 6:6-7). மேலும் இயேசு சீடர்களிடம், “நீங்கள் என்னை அறிந்திருந்தால், என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இதுமுதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள்” என்று சொல்கிறபோது பிலிப்புதான் இயேசுவிடம், “ஆண்டவரே! தந்தையை எங்களுக்குக் காட்டும். அதுவே போதும்” என்கிறார். அதற்கு இயேசு, “பிலிப்பே! இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா?, என்னைக் காண்பது தந்தையை காண்பது ஆகும்…” என்கிறார் (யோவான் 14:8-9).

அடுத்து திருத்தூதர்பணிகள் நூலில் பிலிப்பு எத்தியோப்பிய நிதியமைச்சர் ஒருவருக்கு மறைநூலைப் பற்றி தெளிவான விளக்கம் தருகிறார். பிலிப்பு கொடுத்த விளக்கத்தின் பயனாக அவர் மகிழ்வுடன் தன்வழி சென்றதாக விவிலியம் நமக்கு சான்று பகர்கின்றது (திப 8:26-40). திருத்தூதரான தூய பிலிப்பு ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு சைத்திரியா, எரோப்போலி போன்ற பகுதிகளில் நற்செய்தி அறிவித்து வந்தார்.

ஒருமுறை எரோப்போலி என்ற இடத்தில் மக்கள் பாம்பைக் கடவுளை வணங்குவதைப் பார்த்துவிட்டு, அந்த பாம்புப் புற்றுக்கு முன்பாகச் சென்று, ‘பாம்பு சாகட்டும்’ என்று கட்டளையிடுகிறார். உடனே பாம்பு வெளியே வந்து, தன்னுடைய விஷத்தை மனிதர்கள்மீது கக்கிவிட்டு செத்துப்போகிறது. பாம்பின் விஷம்பட்டவர்களை எல்லாம் பிலிப்பு குணப்படுத்துகிறார். அதைப் பார்த்த அங்கே இருந்த ஒருசில மதபோதகர்கள் இவரைக் கல்லால் அடித்துக் கொன்று போட்டனர். இவருடைய உடல் திருத்தூதர்களின் ஆலயத்தில் இன்றும் இருக்கிறது.

திருத்தூதரனான தூய பிலிப்பு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி தான் சந்தித்த மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அவர்களை கிறிஸ்துவிடம் கூட்டி வந்ததுதான், நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் பாடமாக இருக்கிறது.

அடுத்ததாக நாம் திருதூதரான தூய யாக்கோபை குறித்து சிந்தித்துப் பார்ப்போம். இவர் சிறிய யாக்கோபு என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அல்பேயு, மரியா ஆகியோரின் மகன். இந்த மரியாதான் சிலுவையின் அடியில் நின்றவர்; இயேசுவின் இறந்த உடலுக்கு நல்லடக்கம் செய்தவர் (மாற்கு 15:40). இவர் ஏன் சின்ன யாக்கோபு என்று அழைக்கப்படுகிறார் என்பது குறித்து ஒருசில அறிஞர் பெருமக்கள் சொல்லும் காரணம், இவர் மற்ற திருத்தூதர்களைவிட உயரம் குறைவாக இருந்திருக்கலாம் அல்லது இவர் செபதேயுவின் மகன் யாக்கோபுவிற்கு பிறகு அழைக்கப்பட்டதால் இப்படி அழைக்கப்படுகிறார் என்றும் கூறுவார்.

இவர் நீதிமான் என்றும் அழைக்கப்படுகிறார். யாக்கோபு திருமுகத்தை இவர்தான் எழுதியிருக்கவேண்டும் என்பது ஒருசில அறிஞர்களின் கருத்து. அதோடு மட்டுமல்லாமல் எருசலேம் திருச்சபையில் மிகப்பெரிய தூணாக இருந்து, நற்செய்திப் பணியாற்றினார் என்றும் சொல்லப்படுகிறது. இப்படியெல்லாம் பணிசெய்த யாக்கோப்பு கி.பி. 62 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார் என்றும் திருச்சபை மரபானது நமக்கு எடுத்துக்கூறுகிறது. இவ்வாறு தூய யாக்கோபு தன்னுடைய வாழ்வால், போதனையால் கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்து வாழ்ந்தார்.

திருத்தூதர்களான தூய பிலிப்பு, யாக்கோபு ஆகியோரைப் பற்றி அறிந்த நாம், இவர்கள் இருவரும் நமக்குத் தரும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம்.

இவர்கள் இருவரும் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உலக மக்களுக்கு அறிவித்தனர். அதற்காகத் தங்களுடைய உயிரையும் பலியாகத் தந்தனர். ஆதலால் இவர்களுடைய விழாவைக் கொண்டாடும் நாம், கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை உலக மக்களுக்கு அறிவிக்க முன்வருவோம். ஆண்டவர் இயேசு உலகைவிட்டுச் செல்லும்போது தன்னுடைய சீடர்களுக்கு சொல்லும் அறிவுரை, “நீங்கள் உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் அறிவியுங்கள்” என்பதுதான் (மாற்கு 16:15). ஆகவே, நாம் ஒவ்வொருவரும் நற்செய்தியின் தூதுவர்களாக வாழ முன்வருவோம்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு வயதான பெண்மணி கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியால் தொடப்பட்டார். அதனால் அந்த வயதான பெண்மணி, தான் எப்படி இயேசுவைப் பற்றிய நற்செய்தியால் தொடப்பட்டாரோ அதுபோன்று மற்ற மக்களும் நற்செய்தியால் தொடப்படவேண்டும் என்று, தனக்கு நற்செய்தியைப் போதித்த மறைபோதகரிடம் தன்னுடைய விவிலியத்தில் யோவான் நற்செய்தி 3 ஆம் அதிகாரம், 16 ஆம் வசனத்தை சிகப்பு மையினால் குறித்து வாங்கிக்கொண்டார். ஏனென்றால் அவருக்கு மூப்பின் காரணமாக சரியாகக் கண் தெரியாது.

அவர் ஒவ்வொருநாளும் தன்னுடைய வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பள்ளிக்கூடத்தின் வாசலுக்கு முன்பாக அமர்ந்துகொண்டு, “விவிலியம் வாசிக்க விருப்பம் உள்ளவர்கள் என்னிடத்தில் வரவும்” என்று அறிவித்தாள். அவளுடைய அறிவிப்பைக் கேட்டு, ஒருசில மாணவர்கள் அவளிடத்தில் வந்தார்கள். அவளும் யோவான் 3:16 பகுதியை வாசிக்கச் சொல்லி, அதற்கு விளக்கமும் கொடுத்துவந்தாள். அவளுடைய இந்த நற்செய்தி அறிவிப்புப்பணி பல வருடங்கள் தொடர்ந்து நடைபெற்றது. கடைசியாக அவள் இறக்கும்போது, அவளால் நற்செய்தி அறிவிக்கப்பட்டு, 24 மாணவர்கள் குருக்களாக மாறி இருந்தார்கள்.

அந்த வயதான பெண்மணி செய்தது சிறிய நற்செய்தி அறிவிப்புப் பணியாக இருக்கலாம். ஆனால் அவரால் 24 மாணவர்கள் குருக்களாக மாறினார்கள் என்றால், அது மிகப்பெரிய ஆச்சரியம்.

Comments are closed.