மறைக்கல்வியுரை – எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும் – பிரான்சிஸ்

உலகத் தொழிலாளர் தினமும், தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித யோசேப்பின் திருநாளும் நினைவுகூரப்படும் மே ஒன்றாம் தேதி, விடுமுறை நாள் என்பதால், சுற்றுலாப் பயணிகள் கூட்டமும், திருப்பயணிகள் கூட்டமும், உரோம் நகர் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தை நிறைத்திருந்தது. திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரையில் முதலில், புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் 10ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது. ‘கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார்; சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார்; அதிலிருந்து விடுபட வழி செய்வார்’, என்ற பகுதி, பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டபின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறைக்கல்வி உரையைத் துவக்கினார்.

அன்பு சகோதர சகோதரிகளே, ‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே’என இயேசு கற்பித்த செபத்தில் கூறப்பட்டுள்ள வேண்டுதல்களுள், இறுதிக்கு முந்தைய வேண்டுதல் குறித்து இன்று நோக்குவோம். எங்கள் சோதனை வேளையில் எங்களைக் கை விடாதேயும், என நாம் இறைவனை நோக்கி வேண்டும்போது, நமது உரையாடலானது, தீயோனின் மாயக் கவர்ச்சிகளுக்கும் நமது சுதந்திரத்துக்கும் இடையே நிகழும் யுத்தம் குறித்து எழுகிறது. கிரேக்க மூலப்பிரதிகளில் கூறப்பட்டுள்ளதன் சரியான அர்த்தத்தைப் புரிந்துகொள்வது சிரமம் எனினும், ஒரு நாளும் இறைவன் நம் பாதையில் சோதனைகளைத் தந்து, நம்மை அதற்கு உட்படுத்துவதில்லை என உறுதியாகக் கூறலாம். மனக்கலக்கங்களும், சோதனைகளும், மறைபொருளான வகையில் இயேசுவின் வாழ்விலும் இருந்தன. இந்த அனுபவம், அவரை, முழுமையாக நம் சகோதரராகக் காண்பிக்கிறது. தந்தையாம் இறைவனின் விருப்பத்தைக் கைவிடுவதற்குரிய சோதனையை, பாலைவனத்திலும் கெத்சமனித் தோட்டத்திலும் வெற்றிகண்டார் இயேசு. நாமும் சோதனைக்கு உள்ளாகும்போது, நாம் தனியாக இல்லை என்பதை உணர்வோம். இயேசு, ஏற்கனவே, நம் சிலுவையின் சுமையை, தன் தோள்களில் ஏற்றுள்ளது மட்டுமல்ல, அவருடன் இணைந்து அதைச் சுமக்கவும், இறைவனின் நம்பிக்கைக்குரிய அன்பில் நம்மை முழுமையாக ஒப்படைக்கவும், நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் குழுமியிருந்த அனைவருக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்

Comments are closed.