1942இல், இலங்கையில் ‘முதலாவது’ ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்!

இலங்கைமீது அந்த முதலாவது ‘ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்’, இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது, யப்பானால் நிகழ்த்தப்பட்டது. பலத்த படை இழப்புக்களும், உயிரிழப்புக்களுமான அந்த வான் தாக்குதல், 1942 ஏப்ரல் 5, ஈஸ்டர் ஞாயிறு தினம் நிகழ்ந்தது.

சிங்கப்பூர் வீழ்ச்சியுற்று, கடல் பலத்தையும் பிரிட்டன் பெருமளவில் இழந்த நிலையில், இலங்கையில் நிலைகொண்டிருந்த பிரிட்டனின் கிழக்கிந்திய படையணி சோர்வுநிலையிலிருந்தது. அத்தருணத்தில், இலங்கையின் தென்புறமாக, 200 மைல் தொலைவில் நகர்ந்த யப்பானிய விமானந் தாங்கிக் கப்பல்களிலிருந்து புறப்பட்ட சுமார் நூறு போர் விமானங்களின் தாக்குதல், கொழும்பில் அந்த ஈஸ்டர் ஞாயிறு தினம் காலை 7.30 மணிக்கு ஆரம்பித்தது.

நான்கு மாதங்களுக்கு முன்னர், 1941 டிசம்பர் 7 ஞாயிற்றுக் கிழமை, ஹாவாய் தீவின் ‘முத்து துறைமுக’ (Pearl Harbour) தாக்குதலில் அமெரிக்காவுக்கு பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியிருந்த அதே விமானப் படையணித் தலைவரின் வழிநடத்தலில், இக் கொழும்பு தாக்குதல் நடைபெற்றது.

இப்போது போலவே, அப்போதும் தாக்குதல் குறித்து கிழக்கிந்திய படையணிக்கு முதல்நாளில் தகவல் கிடைத்தது. எனினும், பெருமளவு படைகள் மாலைதீவிலேயே நிலைகொண்டிருந்தன. கப்பல் தளங்களிலும் விமான தளங்களிலும் இலக்குவைக்கப்பட்ட இத் தாக்குதல்களில், பிரிட்டிஷ் படையணிகளின் விமான எதிர்ப்புத் தாக்குதல்களும் நிகழ்ந்தன.

தாக்குதல் ஆரம்பித்த வேளையில் பொரளை, புனித லூக் தேவாலயத்தில் ஈஸ்டர் ஆராதனை நடைபெற்றுக்கொண்டிருந்தது. உள்ளூரவர்களும் இராணுவ உத்தியோகத்தர்களுமாக தேவாலயம் நிரம்பியிருந்தது.

கொலன்னாவை எண்ணெய்க் குதங்கள் என்று, தப்பாக இலக்கு வைத்ததில், அங்கொடை மனநோயாளர் மருத்துவ நிலையம் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.

அரைமணிநேரம் நீடித்த யப்பானிய விமான குண்டுவீச்சில் யப்பானிய விமானங்கள் சில கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் சுட்டு வீழ்த்தப்பட்டன.

நான்கு தினங்களின் பின்னர் திருகோணமலை துறைமுகமும் யப்பானிய விமானங்களின் தாக்குதலுக்குள்ளானது. சீனன்குடா விமான தளத்துக்கு அருகாக, எண்ணெய்த் தாங்கிகள்மீது, ஒரு தற்கொலைத் தாக்குதலாகவே யப்பானிய விமானமொன்று மூன்று விமானிகளுடன் மோதி எரிந்தது. எழுநூறு பேர் வரையில் உயிரிழந்தனர். ஏழு தினங்கள்வரை தீ எரிந்துகொண்டிருந்தது.

‘இலங்கையையும் அதன் கடற்படைத் தளங்களையும் நோக்கி, யப்பானிய படையணி முன்னேற ஆரம்பித்தமை, யுத்தத்தின் ஆபத்தான ஒரு தருணமும், எனக்கு வெகுவாக எச்சரிக்கையூட்டிய ஒன்றுமாகும்’ என்று, பிரிட்டிஷ் பிரதமர் வின்சன்ற் சேர்ச்சில் இவ்வேளையில் தெரிவித்தார்.

பொதுநல நாடுகளில் யுத்த முயற்சிகளைத் தகர்ப்பதும், கிழக்கிந்திய படையணியை ஆசிய பிராந்திய கடற்பரப்பிலிருந்து வெளியேறவைப்பதும் யப்பானின் நோக்கமாகவிருந்தது. இலங்கையில் அப்போது, அதற்கு ஆதரவான ஒரு போக்கும் ஒரு தரப்பில் இருந்தது. பிரிட்டன் மீதான ஓர் அதிருப்தி பரவ ஆரம்பித்திருந்தது.

இலங்கை அரசாங்கத்தில் அங்கம்வகித்த இளம் உறுப்பினர்களான ஜே. ஆர். ஜயவர்த்தனவும் டட்லி சேனநாயக்கவும் பிரிட்டிஷாரை வெளியேற்றுவதற்கான கூட்டு முயற்சிகளில், அப்போது யப்பானுடன் பேச்சுக்களை நடாத்தினார்கள்.

யுத்தம் முடிந்த பின்னர், உலக நாடுகளுடன் யப்பானை மீள இணைத்துக்கொள்ளும் ‘சன்பிரான்சிஸ்கோ உடன்படிக்கை’யில் ஜே. ஆர். ஜயவர்தன மிக முக்கிய பங்காற்றினார்.

சன்பிரான்சிஸ்கோவில், 1951 செப்ரெம்பர் 8ஆம் தேதி அந்த உடன்படிக்கை கைச்சாத்தானபோது, இலங்கையின் நிதி அமைச்சராகவிருந்த அவர், ‘அன்புதான் உலக மகா சக்தி’ என்ற புத்தரின் போதனையைச் சாற்றி எடுத்த நடவடிக்கைகளும், ஆற்றிய உரையும் பிரசித்தமானது.

இரு நாடுகளுக்குமிடையே ஜே. ஆர். மூலமான இந்த நட்பின் அடையாளமே, ஜே. ஆர். ஜயவர்தன ஜனாதிபதியாகவிருந்தபோது, 1982 பெப்ரவரி 15ஆம் தேதி, யப்பானிய மக்களால் இலங்கை மக்களுக்கு அளிக்கப்பட்ட ‘ரூபவாஹினி’ தொலைக்காட்சி சேவை.

ஜயவர்த்தனபுரவில் அமைந்த புதிய பாராளுமன்ற கட்டடமும் இத்தகைய ஒரு வெளிப்பாடானதேதான்.

Comments are closed.