April 28th நற்செய்தி வாசகம்

எட்டு நாள்களுக்குப் பின் இயேசு சீடர்களுக்குத் தோன்றினார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-31

அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள்.

அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லியபின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.

இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.

பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்” என்றார்கள்.

தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்றார். எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள்.

அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார்.

பின்னர் அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்றார். தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!” என்றார்.

இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார். வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.

இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.

ஆண்டவரின் அருள்வாக்கு

இயேசுவே இறைமகன் என நம்பி வாழ்வு பெறுவோம்

நிகழ்வு

சில ஆண்டுகளுக்கு முன்பாக யூகோஸ்லாவியாவில் நீதிபதி ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் தன்னுடைய வீட்டுக்குளியறையில் குளித்துக்கொண்டிருந்தபொழுது மின்சாரம் தாக்கி, மயக்கம் போட்டுக் கீழேவிழுந்தார். உடனே அவருடைய மனைவி அவரை மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு போனார். மருத்துவமனையிலோ அவரைச் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் இறந்துபோய்விட்டதாக அறிவித்தார்கள். இதனால் அந்த நீதிபதியின் மனைவி உட்பட, அவருடைய குடும்பமே துக்கத்தில் ஆழ்ந்தது. நீதிபதி இறந்த செய்தி சிறிதுநேரத்துக்குள் பண்பலைகளிலும் (FM) தொலைக்காட்சிகளிலும் வெளிவரத் தொடங்கி, எல்லாரையும் கவலைக்குள்ளாக்கியது. இதைத் தொடர்ந்து இறந்துபோன அந்த நீதிபதியின் உடலானது, மறுநாள் மின் குமிழில் (Electric Cramotorium) வைத்து எரிக்கப்படுவதற்காகப் பிணவறையில் (Mortuary) வைக்கப்பட்டது.

நள்ளிரவில் திடிரென்று சுயநினைவுக்கு திரும்பிய அந்த நீதிபதி, தான் பெட்டியில் வைக்கப்பட்டு, பிணவறையில் இருப்பதை நினைத்து அதிர்ந்துபோனார். உடனே அவர் வெளியேவந்து, பிணவறையைக் காவல் காத்துக்கொண்டிருந்த காவலாளியிடம், தான் இறக்கவில்லை உயிரோடுதான் இருக்கிறேன் என்று எடுத்துச்சொன்னார். அவரோ தன்னிடம் பேசுவது பேய்தான் என்று நினைத்துக்கொண்டு, அங்கிருந்து அலறியடித்து ஓடினார். இதற்குப் பின்பு அவர் தன்னுடைய மனைவியைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, தான் உயிரோடு இருக்கின்ற செய்தியை அவரிடம் சொன்னார். அவரும் தன்னிடம் பேசுவது பேய்தான் என நினைத்துத் தொடர்பைத் துண்டித்தார். இப்படி அவர் அந்த நள்ளிரவில், நகரில் இருந்த தன்னுடைய நண்பர்கள், தெரிந்தவர்கள் எல்லாருடைய வீட்டுக்கதவைத் தட்டி, தான் இறக்கவில்லை என்பதை அவர்களிடம் எடுத்துச்சொன்னபோதும் அவர்கள் அவர் சொன்னதை நம்பாமல், பேய் என்று நினைத்து, கதவைச் சாத்திவிட்டு உள்ளே சென்றனர்.

இதனால் அவர் பக்கத்து நகரில் இருந்த தன்னுடைய நண்பருக்குத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினார். அவரோ, இவர் இறந்துவிட்டதாக வந்த செய்தியைக் கேள்விப்படாதவர். அவரிடம் நீதிபதி நடந்த எல்லாவற்றையும் சொல்ல, அந்த நண்பர் நீதிபதியின் மனைவி மற்றும் நண்பர்களைத் தொடர்புகொண்டு உண்மையை எடுத்துஹ் சொன்னபின்பு அவர்கள் நீதிபதி இறக்கவில்லை உயிரோடுதான் என்று நம்பினார்கள்.

இந்நிகழ்வு, இயேசு உயிர்த்தெழுந்தபின்பு, தன்னுடைய சீடர்களுக்குத் தோன்றியபொழுது, அவர்கள் ஏதோ ஆவியைக் கண்டதுபோல் திகிலுற்றதை (லூக் 24: 37-39) நினைவூட்டுவதாக இருக்கின்றது. ஓர் ஆவியை கண்டதுபோல் திகிலுற்று இருந்தவர்களிடம் இயேசு, “நானேதான்” என்று சொல்லி, அவர்களிடம் இருந்த அவநம்பிக்கையை விளக்கி நம்பிக்கையை ஏற்படுத்துகின்றார். இப்படி உயிர்த்த இயேசு தன்னுடைய சீடர்களுக்குத் தோன்றிய இந்நிகழ்வு நமக்கு என்னென்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

பயத்திலிருந்த சீடர்களுக்கு அபயம் தந்த இயேசு

யூதர்கள், இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றதைப் பார்த்துவிட்டு, எங்கே தங்களையும் அவர்கள் பிடித்துக் கொன்றுவிடுவார்களோ என்று பயந்து, சீடர்கள் தாங்கள் இருந்த அறையின் கதவை மூடிவைத்திருந்தார்கள் (யோவா 20:1) இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசு அவர்களுக்கு முன்பாகத் தோன்றி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்று வாழ்த்துகின்றார். இயேசு உயிர்த்து, தன்னுடைய சீடர்களுக்குத் தோன்றியபோது, தன்மீது அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லை என்றோ, தன்னை விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள் என்றோ அவர்களைத் திட்டவில்லை. மாறாக, ‘அமைதி உரித்தாகுக’ என்ற ஆறுதல் அளிக்கும் வார்த்தைகளைப் பேசுகின்றார். அதுமட்டுமல்லாமல், தூய ஆவியாரை அவர்மேல் ஊதி, தன்னுடைய பணியைச் செய்ய மீண்டுமாக அவர்களை அழைக்கின்றார். இவ்வாறு இயேசு பயந்துகொண்டிருந்த சீடர்களுக்கு அபயம் தந்து – துணிவைத் தந்து – வல்லமையோடு பணியைச் செய்ய வழி வகுக்கின்றார். இந்நிகழ்விற்குப் பிறகு சீடர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டதைக்கொண்டே இயேசு தன் சீடர்களுக்கு தந்த அபயம், துணிவு எத்துணை உயர்ந்தது என்பதை புரிந்துகொள்ளலாம்.

அவநம்பிக்கையோடு இருந்தவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டிய இயேசு

இயேசு உயிர்ந்தெழுந்த செய்தியை இயேசுவின் பெண் சீடர்கள் திருத்தூதர்களிடம் சொன்னபோது, திருத்தூதர்கள் அவர்கள் சொன்னதை நம்பாமல், ஏதோ பிதற்றுகிறார்கள் (லூக் 24: 11) என்று இருந்தார்கள். இப்படி நம்பிக்கை இல்லாமல் இருந்த சீடர்கள் மத்தியில்தான் இயேசு தோன்றி, அவர்கள் அவர்மீது நம்பிக்கைகொள்ளச் செய்கின்றார். மேலும் தோமா சீடர்கள் சொன்னதைக் கேட்டும், அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல் இருந்ததால், இயேசு அவருக்குத் தன்னை வெளிபடுத்தி, “ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்” என்று சொல்ல, அவரும் இயேசுவிடம் நம்பிக்கைகொள்கின்றார். இவ்வாறு அவநம்பிக்கையோடு இருந்த சீடர்களுடைய உள்ளத்தில் நம்பிக்கையை ஊட்டி, அவர்களைப் புதுப்படைப்பாக மாற்றுகின்றார் இயேசு.

இங்கு ஒரு சிறிய தகவல். இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை மற்ற சீடர்கள் தோமாவிடம் எடுத்துச் சொன்னபோது, அவர் அதை நம்பவில்லை. இந்தத் தோமா அல்லது திதிம் என்றால் இரட்டையர்கள் (Twin) என்று அர்த்தம். தோமாவோடு உடன்பிறந்த சகோதரரைக் குறித்த குறிப்புகள் எங்கினும் இல்லை. இது குறித்து ஒருசில விவிலிய அறிஞர்கள் சொல்லும்பொழுது, தோமோவோடு உடன்பிறந்த சகோதர் நீங்களோ, நானோ இருக்கலாம் என்றும் தோமா எப்படி அவநம்பிக்கையோடு இருந்து, இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டாரோ, அதுபோன்று நாம் ஒவ்வொருவரும் இயேசுவிடம் நம்பிக்கைகொண்டு வாழவேண்டும் என்றும் சொல்வார்கள். ஆகவே, இயேசுவின் சீடர்கள் எப்படி அவர்மீது கொண்டுவாழத் தொடங்கினார்களோ அதுபோன்று நாமும் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு வாழ முயற்சிப்போம்.

சாவிலிருந்து வாழ்விற்கு அழைக்கும் இயேசு

இன்றைய நற்செய்தி வாசகம், இயேசு திருத்தூதர்களுக்கு தோன்றி, அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியதோடு நின்றுவிடவில்லை. மாறாக, நாமும் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காக, “இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்கும் நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பட்டுள்ளன” என்ற செய்தியோடு முடிகின்றது. யோவான் நற்செய்தியாளர் தன்னுடைய நற்செய்தி நூலின் வழியாக, இயேசுவை இறைமகன் என ஒவ்வொருவரும் நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற செய்தியைத் திரும்பத் திரும்ப வலியுறுத்திக்கூறுகின்றார்.

ஆகையால், இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் அவர்மீது நம்பிக்கை கொண்டால் வாழ்வு, அவநம்பிக்கை கொண்டால் தாழ்வு என்ற உண்மையை உணர்ந்து, அவர்மீது நம்பிக்கை வைத்து, அதை வாழ்வாக்கி, அவர்தரும் ஆசியைப் பெற முயற்சி செய்வோம்.

சிந்தனை

‘இயேசு ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்’ என்பார் தூய பவுல் (உரோ 10:9). ஆகவே, நாம் இயேசுவே இறைமகன்/ ஆண்டவர் என்று நம்பி, அவருடைய விழுமியங்களை வாழ்வாக்குவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

Comments are closed.