ஏழைகளின் ஆன்மீக நலனில் அக்கறை காட்டுங்கள்

உலகில் ஏராளமான ஏழைகள், விசுவாசத்திற்குத் திறந்த மனதுள்ளவர்களாய் இருக்கின்றவேளை, அம்மக்கள் மீது ஆன்மீக கவனம் செலுத்தப்படாமல் இருப்பது, மிக மோசமான பாகுபாடாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர் குழு ஒன்றிடம், இச்சனிக்கிழமை காலையில் கூறினார்.

பிராதோ அருள்பணியாளர் கழகம் எனப்படும் துறவற குழுமத்தின் ஏறத்தாழ முப்பது பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமை காலையில் வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழைகளுக்கு இறைவன் தேவைப்படுகின்றார் மற்றும் அவர்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்களின் தோழமையில் வாழ்வதென்பது, அவர்களின் ஆன்மீக வாழ்வில் முதலில் அக்கறை காட்டுவதாகும் என்றுரைத்த திருத்தந்தை, இத்துறவற குழுமத்தை ஆரம்பித்த, முத்திப்பேறுபெற்ற அருள்பணி Antoine Chevrier அவர்களின் வாழ்வு பற்றி தியானித்து, அவ்வாழ்வைப் பின்பற்றி நடக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இன்றைய நம் காலத்தில், நம்மைச் சுற்றிலும் பலர், பொருளாதாரத்திலும், ஆன்மீகத்திலும் ஏழையாய் இருப்பதை நாம் கண்டு வருகிறோம் எனவும், அவர்கள் பல நேரங்களில், திருஅவை மற்றும் நற்செய்தியைவிட்டு தொலைவில் உள்ளனர் எனவும், இம்மக்களுக்கு மறைப்பணியாற்றுவது, அன்னை திருஅவையின் பெரிய பணி எனவும் கூறியத் திருத்தந்தை, Chevrier அவர்களின் குழுமம், இத்தகைய மக்களுக்குப் பணியாற்றி வருவது குறித்து தான் மகிழ்வதாகத் தெரிவித்தார்.

பிராதோ அருள்பணியாளர் கழகத்தின் பணிகளைப் பாராட்டி ஊக்குவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்க மறக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

பிரான்சின் லியோன் நகரின் தொழிற்சாலைப் பகுதியில், மிகவும் துன்பநிலையில் இருந்த மக்களுக்கு உதவுவதற்கென, அருள்பணி Antoine Chevrier அவர்கள், 1860ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி பிராதோ அருள்பணியாளர் கழகத்தை ஆரம்பித்தார். அந்நகரின், “Le Prado” முன்னாள் நாட்டிய அரங்கத்தை வாங்கி, அதில் தனது கழகத்தை இவர் தொடங்கினார். தற்போது இக்கழகத்தில் பல நாடுகளில், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் மற்றும் மூன்றாம் சபையினர் உறுப்பினர்களாக உள்ளனர்

Comments are closed.