நற்செய்தி வாசக மறையுரை (ஏப்ரல் 27)

பாஸ்காக் காலம் முதல் வாரம்
சனிக்கிழமை
மாற்கு 16: 9-15

ஆண்டவரை நம்பு

நிகழ்வு

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த தூதர் (Ambassador) ஒருவர் ஸ்வீடன் நாட்டிற்கு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த புறப்பட்டுச் சென்றார். அவரோடு அவருடைய உதவியாளரும் உடன் சென்றார். பயணத்தின்போது தூதர் மிகவும் இறுக்கமாகவும் பதற்றோடும் இருப்பதை அவருடைய உதவியாளர் பார்த்தார். இருந்தாலும் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தார். இரவுநேரம் வந்தது. இருவரும் ஒரு சத்திரத்தில் தங்கி ஓய்வெடுக்கத் தொடங்கினார்.

நள்ளிரவு நேரம், உதவியாளர் திடீரென்று தூக்கத்திலிருந்து எழுந்தபோது, அவருடைய தலைவர் அதாவது தூதர் தூங்காமல் ஏதோவொன்றைக் குறித்து யோசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனே உதவியாளர் தூதரிடம், “ஐயா! உங்களிடம் ஒருசில கேள்விகளைக் கேட்கவேண்டும். நீங்கள் மனது வைத்தால் கேட்கிறேன்.. இல்லையென்றால் விட்டுவிடுகிறேன்” என்றார். அவரும், “கேள்” என்றார். மறுகணம் உதவியாளர் அவரிடம், “ஐயா! இந்த உலகம் நீங்கள் பிறப்பதற்கு முன்பு நன்றாக இயங்கிக் கொண்டிருந்ததா? இல்லையா?” என்று கேட்டார். “இதிலென்ன சந்தேகம்! நன்றாகத்தான் இயங்கிக்கொண்டிருந்தது” என்றார் தூதர். உதவியாளர் மறுபடியும் அவரிடம், “ஐயா! இந்த உலகம் நீங்கள் இறந்தபின்னும் நன்றாக இயங்குமா? இயங்காதா?” என்று கேட்டார். அதற்குத் தூதர் அவரிடம், “நான் பிறப்பதற்கு முன்பாக இந்த உலகம் எப்படி நன்றாக இயங்கிக்கொண்டிருந்ததோ, அதுபோன்று நான் இறந்தபின்னும் இந்த உலகம் நன்றாக இயங்கும்” என்றார்.

“ஐயா! நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் மிகச் சிறப்பான முறையில் பதிலளித்துள்ளீர்கள்… எப்படி நீங்கள் பிறப்பதற்கு முன்னும் இறந்தபின்னும் உலகம் நன்றாக இயங்கியதோ, இயங்குமோ அதுபோன்று நீங்கள் இந்த உலகத்தில் இருக்கின்றபோதும் அது நன்றாக இயங்கும்தானே! அப்படியானால் எதற்கு நீங்கள், போகுற இடத்தில் என்ன நடக்குமோ என்று கலக்கமுறுகிறீர்கள்? இந்த உலகத்தை இதுவரை நன்றாக இயக்கிய கடவுள்… இனிமேலும் நன்றாக இயக்கக்கூடிய கடவுள்… உங்களை மட்டும் கைவிட்டுவிடுவாரா என்ன? ஆதலால் எல்லாவற்றையும் நன்றாக இயக்குகின்ற கடவுள் உங்களையும் நன்றாக இயக்குவார், வழிநடத்துதத்துவார். என்ற நம்பிக்கையோடு பயணத்தைத் தொடருங்கள். உங்களுக்கு எந்தவொரு ஆபத்தும் வராது” என்றார் உதவியாளர்.

தன்னுடைய உதவியாளர் சொன்ன இந்த நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளை நம்பி, தூதர் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்து, இரண்டு நாடுகளுக்குமிடையே சுமூகமாக உறவை ஏற்படுத்திவிட்டு, மனநிறைவோடு நாடு திரும்பினார்.

மனிதர்கள் இறைவன்மீது நம்பிக்கை வாழ்கின்றபோது அல்லது இறைவனை நம்புகின்றபோது, அந்த நம்பிக்கை அவர்களுக்கு எத்தகைய ஆசியையும் ஆற்றலையும் தருகின்றது என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.

உயிர்த்த ஆண்டவர் இயேசுவை நம்பாத சீடர்கள்

நற்செய்தியில், உயிர்த்த ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு ஓரிருமுறை தோன்றியும் அவர்கள் அவரை நம்பாததால், அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டிக்கின்றார்.

இயேசு தான் இறந்து உயிர்த்தெழுவேன் என்று பலமுறை தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லியிருந்தார். அதை அவர்கள் நம்பவிலை. தான் உயிர்த்தபின்பு மகதலா மரியாவுக்குத் தோன்றினார். மகதலா மரியா சீடர்களிடம் அதைச் சொன்னபோதும் நம்பவில்லை. தொடர்ந்து வயல்வழியே நடந்துசென்ற இரண்டு சீடர்களுக்கு இயேசு தோன்ற (மாற் 16: 13; லூக் 24: 33-35), அவர்கள் அதை மற்ற சீடர்களுக்கு எடுத்துச் சொன்னபோதும் நம்பாமல், கடின உள்ளத்தோடு இருந்தார்கள். இப்படிப்பட்டச் சூழ்நிலையில், சீடர்கள் அனைவரும் கூடியிருக்கையில் இயேசு அவர்களுக்கு முன்பாகத் தோன்றி, அவர்களுடைய நம்பிக்கையின்மைக் கடிந்துகொள்கின்றார்.

இந்நிகழ்ச்சியை மாற்கு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றபோது, சீடர்கள் நம்பிக்கை இல்லாமல் இருந்தததால், இயேசு அவர்களுடைய நம்பிக்கையின்மைக் கடிந்துகொள்கின்றார் என்று பதிவுசெய்கின்றார். இங்கே குறிப்பிடப்படும் நம்பிக்கையின்மை என்பது, இயேசு தன்னுடைய சொந்த ஊருக்குச் சென்று போதித்தபோது, அவர்கள் எப்படி நம்பிக்கையின்றி இருந்தார்களோ (மாற் 6:6) அவர்களைப் போன்று இயேசுவின் சீடர்கள் இருந்தார்கள் என்று மாற்கு நற்செய்தியாளர் பதிவுசெய்கிறார். இயேசுவின் சொந்த ஊர்க்காரர்களாவது இயேசுவைக் குறித்து முழுமையாக அறியாதவர்கள். ஆனால், இயேசுவின் சீடர்கள் அப்படியில்லை. அவர்கள் அவரோடு இருந்தார்கள்; அவர்களோடு உண்டார்கள்; அவரோடு எங்கும் சென்றார்கள். அப்படியிருந்தும் அவர்கள் இயேசு உயிர்த்ததை நம்பாமல் இருந்ததுதான் வியப்பாக இருக்கின்றது.

நற்செய்தியின் தூதுவர்களாக இருக்க அழைப்பு

இயேசு சீடர்களுடைய நம்பிக்கையின்மையைக் கடிந்துகொண்ட பிறகு அவர்களிடம், உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கவேண்டும் என்ற அழைப்பைத் தருகின்றார். என்னதான் சீடர்கள் குறைபாடோடு இருந்தாலும், அவர்களை நம்பி இயேசு மிகப்பெரிய பொறுப்பினை ஒப்படைப்பது என்பது அவர் அவர்கள்மீது வைத்திருக்கும் உறுதியாக நம்பிக்கையை எடுத்துக் காட்டுகின்றது. இதன்மூலம் நாம் இறைவன்மீது நம்பிக்கை வைக்கிறோமோ இல்லையோ, இறைவன் நம்மீது உறுதியாக வைத்திருக்கின்றார் என்பது உறுதியாகின்றது.

சிந்தனை

‘ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்’ (யோவா 20:27) என்று இயேசு தோமாவிடம் கூறுவார். இது தோமாவிற்குக் கொடுக்கப்பட்ட அழைப்பு மட்டும் கிடையாது, நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட அழைப்பு. ஆகவே, நாம் உயிர்த்த ஆண்டவரிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அது மட்டுமல்லாமல், அவர் விடுக்கின்ற அழைப்பான, ‘நற்செய்தியின் சாட்சிகளாக’ விளங்கும் அழைப்பினை ஏற்று, இயேசுவின் நற்செய்தி எல்லாருக்கும் அறிவிப்போம். இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

Comments are closed.