இறந்த மூன்றாம்நாள் இயேசு உயிர்த்தெழுந்ததுதான் கிறிஸ்துவ வாழ்வின் அடித்தளம்!

நாளை ஈஸ்டர். இயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாள். உலகெங்கிலும் இருக்கும் கிறிஸ்துவர்கள் இந்த நாளைச் சிறப்பு ஆராதனைகளோடு கொண்டாடுவர். தவக்காலத்தில் அவர்கள் அனுபவித்த அனைத்து சிரமங்களும் இந்த நாளின் உதயத்தில் தொலைந்து, நம்பிக்கையூட்டும் ஒரு புதிய நாளாக ஈஸ்டர் பிறக்கும். சிலுவையில் அறையப்பட்டதிலிருந்து மூன்றாம் நாள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தார். மரணத்தின் மீது தனது வெற்றியை அவர் நிறுவிய தினம் அது.

இயேசு

இது குறித்து தூயபவுல், கொரிந்தியருக்கு எழுதிய சுவிசேஷத்தில், “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நாங்கள் அறிவித்த நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்” (1 கொரி 15: 14) என்கிறார். பவுலின் இந்த வார்த்தைகளின் உண்மையான பொருள்தான் என்ன? ‘இயேசுவின் உயிர்ப்புதான் கிறிஸ்துவ வாழ்வின் அடித்தளம்’ என்பதை அல்லவா அவை உரக்கச் சொல்கின்றன. இயேசு, தான் சொன்னபடியே (மாற் 8:31; மத் 17:22; லூக் 9:22; யோவா 2:19) உயிர்த்தெழுந்தார். மேலும் இயேசு, தன்னுடைய உயிர்ப்பின்மூலம், தான் இறைமகன் என்பதையும் (திப 2: 32-36; உரோ 1:4), கடவுள் தனக்குக் கொடுத்த, மனிதர்களைக் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக்கும் பணியைச் (உரோ 4: 24-25) செவ்வனே செய்து, நிறைவுசெய்துவிட்டேன் என்பதையும் அல்லவா நிரூபித்துக் காட்டுகிறார்.

ஈஸ்டர்

இயேசுவின் உயிர்ப்பு, நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையைத் தருகின்றது என்றால் அது மிகையாகாது. `இறுதிநாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் (லாசரும்) உயிர்த்தெழுவான்’ என்று சொன்ன மார்த்தாவுக்குப் பதிலளிக்கும் இயேசு, `உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்’ என்பார் (யோவா 11: 24-25). இயேசு கூறும் இந்த வார்த்தைகள், யார் யாரெல்லாம் அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்கின்றார்களோ அவர்கள், இறந்தபின்னும் வாழ்வார்கள் என்பதை எடுத்துச் சொல்கின்றது. தூய பவுலும் இதைத்தான், ‘அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்’ (2திமொ 2:11) என்று கூறுகிறார். ஆகவே, இயேசுவைப் போன்று நாமும் ஒரு நாள் உயிர்த்தெழ அவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்வது தேவையான ஒன்று.

ஒரு தந்தையும், அவருடைய சிறு வயது மகனும் ஒரு கிராமச் சாலையின் வழியாக, நான்கு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது தேன்குளவி ஒன்று சிறுவனுக்கு முன்பாக அங்கும் இங்கும் பறந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்து பயந்துபோன மகன் தன் தந்தையிடம், அதை அங்கிருந்து விரட்டும்படி சொன்னான். தந்தையோ அந்தத் தேன்குளவியைப் பிடித்து வெளியே எறிந்தார். அப்படியும் மகனுக்குத் தேன்குளவியைப் பற்றிய பயம் போகவில்லை. எனவே, அவன் தன் தந்தையிடம், `அப்பா! அந்தத் தேன்குளவி தன்னிடம் இருக்கும் கொடுக்கால் என்னைக் கொட்டினால், வலியில் உயிர்போய்விடும்’ என்றான். அதற்குத் தந்தை அவனிடம், `அந்தத் தேன்குளவி இனிமேல் உன்னைக் கொட்டுவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில், அது என்னை ஏற்கெனவே கொட்டிவிட்டது’ என்று தன்னுடைய கையில் இருந்த அதன் கொடுக்கைக் காட்டினார்.

ஈஸ்டர்

எப்படி அந்தத் தந்தை தன் மகனைக் தேன்குளவி கொட்டிவிடக் கூடாது என்பதற்காகத் தன்மேல் குளவியின் கொட்டினை வாக்கிக் கொண்டாரோ, அதுபோன்று இந்த மனித குலத்தின்மீது பாவம்/சாவு வெற்றிகொள்ளக் கூடாது என்பதற்காக இயேசு தன்மீது சாவை ஏற்றுக்கொண்டு, கடைசியில் அதை வெற்றி கொண்டார். அதனால்தான் தூய பவுல், `சாவே உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கோ?’ என்று கேட்கிறார் (1 கொரி 15: 55). அப்படியென்றால் பாவம் அழிக்கப்பட்டு (உரோ 6: 10-11) நாம் அனைவரும் புதுப்பிறப்பாக மாறியிருக்கிறோம் என்பது உண்மையாகிறது. எனவே, புதுப்பிறப்பாக மாறியிருக்கும் நாம், மீண்டும் பழைய பாவ வாழ்க்கை வாழாமல், புதிய இயல்புகளான (கலா 5:22) அன்பு, பரிவு, பொறுமை, நம்பிக்கை போன்றவற்றை அணிந்துகொண்டு வாழ வேண்டும். அப்போதுதான் இயேசு இறந்து, உயிர்த்ததற்கு அர்த்தமிருக்கும். அப்படியில்லாமல், நாம் பழைய பாவ வாழ்க்கையை வாழ்ந்தால், இயேசுவின் உயிர்ப்பு எந்தவிதத்திலும் அர்த்தம் பெறாது.

உயிர்த்தெழுதல்

‘நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால், மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்’ என்பார் தூய பவுல் (கொலோ 3:1). ஆகவே, இயேசுவின் உயிர்ப்புக்கு அர்த்தம் சேர்க்கும் வகையில், மேலுலகு சார்ந்த காரியங்களான அன்பு, இரக்கம், மன்னிப்பு போன்றவற்றை ஒருவர் மற்றவரிடம் காட்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.