திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்து

வத்திக்கானில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தங்கியிருக்கும் Mater Ecclesiae துறவு இல்லத்திற்கு, ஏப்ரல் 15, இத்திங்கள் மாலையில் சென்று, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு, பிறந்தநாள் மற்றும் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அறிவித்த, திருப்பீட செய்தி தொடர்பகத்தின் இடைக்கால இயக்குனர் அலெஸ்ஸாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள், தனது 92வது பிறந்தநாளைக் கொண்டாடும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு நல்வாழ்த்துச் சொல்லி, அவர்கள் மீது, தனக்கிருக்கும் சிறந்த பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, இச்சந்திப்பு அமைந்திருந்தது என்று தெரிவித்தார்.

1927ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி ஜெர்மனியின் Markt என்ற ஊரில் பிறந்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தனது 78வது பிறந்தநாளுக்கு மூன்று நாள்களுக்குப் பின்னர், 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி, 265வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   இவர், தனது 85வது வயதில், 2013ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதியன்று, தனது தலைமைப் பணியிலிருந்து விலகுவதாக அறிவித்து, உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அதே ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி வரை, பாப்பிறை தலைமைப் பணியை வகித்தார், திருத்தந்தை 16ம் பெனடிக்ட். அவர் பதவி விலகியபோது, திருஅவையை, ஏழு ஆண்டுகள், 315 நாள்கள் வழிநடத்தியிருந்தார்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஏப்ரல் 16, இச்செவ்வாயன்று, தனது 92வது பிறந்தநாளைச் சிறப்பித்தார்

Comments are closed.