ஏப்ரல் 18 : வியாழக்கிழமை. நற்செய்தி வாசகம்.

இயேசு தமக்குரியோர்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-15

பாஸ்கா விழா தொடங்க இருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார். இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச் செய்திருந்தது.

இரவுணவு வேளையில், தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்ததுபோல் அவரிடமே திரும்பச் செல்ல வேண்டும் என்பதையும் அறிந்தவராய், இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.

சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், “ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?” என்று கேட்டார்.

இயேசு மறுமொழியாக, “நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்துகொள்வாய்” என்றார். பேதுரு அவரிடம், “நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்” என்றார்.

இயேசு அவரைப் பார்த்து, “நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை” என்றார்.

அப்போது சீமோன் பேதுரு, “அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்” என்றார்.

இயேசு அவரிடம், “குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மை யாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை” என்றார்.

தம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் `உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை’ என்றார்.

அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: “நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் `போதகர்’ என்றும் `ஆண்டவர்’ என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.

நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பெரிய வியாழன்: ஆண்டவரின் இறுதி இராவுணவுப் பெருநாள்.

மறையுரை 1: ‘இதை என் நினைவாகச் செய்யுங்கள்!’

ஒரு ஊரில் ஒரு தாயும் ஒரு மகனும் இருந்தார்கள். அந்த மகனுக்குத் திடீரென்று வெளிநாட்டில் வேலை கிடைக்க அவன் புறப்பட்டுப் போய்விட்டான். ஒவ்வொரு மாதமும் அவன் தன் தாய்க்கு ஒரு கடிதம் அனுப்புவான். தான் கண்ட இடங்களையும், ரசித்த நிகழ்வுகளையும் புகைப்படமாகவும், கடிதமாகவும் அனுப்புவான். அப்படி அனுப்பும் ஒவ்வொரு முறையும் அக்கடிதத்தோடு தன் சம்பளப்பணத்தில் ஒன்றிரண்டு தாள்களையும் வைத்து அனுப்புவான். இந்தத் தாயும் கடிதம் வந்தவுடன் தான் படித்ததோடு மட்டுமல்லாமல் அதைத் தன்னைச் சுற்றியிருப்பவர்களிடமும் காட்டி மகிழ்வாள். ஐந்து வருடங்கள் வேலை முடித்து வீட்டிற்கு வருகின்றான் மகன். தன் இல்லம் சென்றவுடன் அவனுக்கு அதிர்ச்சி. தான் அனுப்பிய புகைப்படங்கள் அனைத்தையும் தன் இல்லம் முழுவதும் தன் தாய் ஒட்டி வைத்திருக்கக் காண்கிறான். அந்தப் புகைப்படங்களோடு அவன் அனுப்பிய பணக்காகிதங்களையும் அந்தத் தாய் சுவரில் ஒட்டி வைத்திருக்கின்றார். அவன் அம்மாவிடம், ‘இது படம் அல்ல அம்மா. நான் அனுப்பிய பணம்’ என்கிறான். ‘என்னது பணமா? நான் இதுவும் ஏதோ படம் என்றல்லவா நினைத்தேன்’ என்கிறார் தாய். ‘ஆனால் இதைப் பார்க்கும் ஒவ்வொரு பொழுதும் நீ என் உடன் இருப்பது போலவே இருந்தது’ என்று அவனைக் கட்டித் தழுவிக் கண்ணீர் வடிக்கின்றார்.

ஆண்டவரின் இறுதி இராவுணவுப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இன்றைய நாளின் மையமாக இருக்கும் வார்த்தைகள் இவைகள் தாம்: ‘இதை என் நினைவாகச் செய்யுங்கள்!’. பாதம் கழுவுதல், பணிவிடை செய்தல், அப்பம் பிட்குதல், அன்பு செய்தல் என அனைத்திலும் தன் நினைவை நம்மிடம் விட்டுச் சென்றுள்ளார் இயேசு. மனிதர்களை மற்ற உயிர்களிலிருந்து மேன்மைப்படுத்தும் ஒரு கொடை ‘நம் நினைவுகள்!’ நம்மோடு வாழ்ந்த நம் முன்னோர்கள் இன்று நம்மோடு இல்லையென்றாலும் அவர்கள் விட்டுச்சென்ற வீடுகளோ, உறவுகளோ, மதிப்பீடுகளோ இன்றும் அவர்களை நமக்கு நினைவுபடுத்துகின்றன. நினைவுகள் நமக்கு அழியா வாழ்வைத் தருகின்றன. இறப்பு நினைவுகளை அழிக்க முடியாது. அதில் இறப்பு தோற்றுத்தான் போகின்றது. ஆகையால் தான் இயேசு தான் காட்டிக்கொடுக்கப்பட்டு இறப்பதற்கு முன் ‘நினைவாகச் செய்யுங்கள்’ என்று தம் சீடர்களுக்கு நினைவூட்டுகின்றார்.

எதை நினைவாகச் செய்யச் சொல்கின்றார்? தான் பெத்லேகேமில் மாடடைக் குடிலில் பிறந்ததையா, தன்னை ஏரோது கொல்லத் தேடியதையா, தன் பெற்றோர்கள் தன்னை ஆலயத்தில் அர்ப்பணித்ததையா, தன் திருமுழுக்கையா, தன் பணிவாழ்வையா, தனக்கு வந்த எதிர்ப்புக்களையோ, தன்னை ஏற்றுக்கொண்டவர்களையா, தனக்கு வழங்கப்பட்ட சிலுவைச்சாவையா, தன் இறப்பையா, தன் உயிர்ப்பையா – எதை நினைவாகச் செய்ய வேண்டும். அனைத்தையுமே.

அன்பில் நினைவு கூறுவோம். இன்று இவ்வுலகம் ஏங்கியிருக்கும் ஒன்று அன்பு. இது கிடைக்காமல் ஏங்குவோர் எத்தனையோ பேர். ஒவ்வொரு ஆன்மாவும் அன்பிற்காக ஏங்குகிறது. அந்த அன்பு பல நேரங்களில் பலருக்குக் கிடைப்பதில்லை. சிலர் கிடைக்கும் போது அதைக் கண்டுகொள்வதில்லை.

சிலர் அதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டியுள்ளது. இயேசுவைப் பொறுத்த வரையில் அன்பு என்றால் ‘அடையாளங்களைத் தாண்டுவது’. இன்று அன்பு செய்ய மிகப் பெரிய தடை அடையாளம்.

சமாரியர், பாவிகள், வரிதண்டுவோர், விபச்சாரர் என அனைத்து அடையாளங்களையும் தாண்டி ஒருவரின் உள்ளியல்பில் இறைவனைக் காணக் கற்றுக்கொடுக்கின்றார் இயேசு. ‘நான் உங்களை அன்பு செய்தது போல’ என்பதன் அர்த்தம் இதுதான். அன்பு செய்ய முக்கியத் தேவை ‘வெறுமையாவது!’. தன்னையே வெறுமையாக்கும் ஒருவரால் தான் மற்றவரை அன்பினால் நிரப்ப முடியும். அன்பில் ஒருவர் மற்றவர் முன் தன்னையே தோலுரி;த்துக் காட்டுகின்றார்.

பணிவாழ்வு. பழைய ஏற்பாட்டில் அரசர்களும், இறைவாக்கினர்களும் திருப்பொழிவு செய்யப்பட்டது போல இன்று அருட்பணியாளர்கள் திருப்பொழிவு செய்யப்படுகிறார்கள். இந்த அருள்பொழிவு பற்றி திருப்பாடல் 45:7-8 இப்படிச் சொல்கிறது: ‘எனவே கடவுள், உம் கடவுள், மகிழ்ச்சித் தைலத்தால் உமக்குத் திருப்பொழிவு செய்து, உம் அரசத் தோழரினும் மேலாய் உம்மை உயர்த்தினார். நறுமணத் துகள், அகிலொடு இலவங்கத்தின் மணம் உம் ஆடையெலாம் கமழும்.’ திருப்பொழிவினால் ஒருவர் மகிழ்ச்சி பெறுகிறார். மாட்சிமை பெறுகிறார். மணம் பெறுகிறார். சகோதரர்கள் ஒன்றிணைந்திருப்பது எவ்வளவு அழகானது என்று வர்ணிக்கும் விவிலியம் ‘அது ஆரோனினின் தலையினிலே ஊற்றப்பெற்ற நறுமணத்தைலம் அவருடைய தாடியினின்று வழிந்தோடி அவர்தம் அங்கியின் விளிம்பை நனைப்பதற்கு ஒப்பாகும்’ (திபா 133:2) என்று சொல்கின்றது.

இந்த வழிந்தோடுதலை கற்பனை செய்து பார்த்தாலே மெய்சிலிர்த்து விடுகிறது. இதை இன்னும் ஒரு படி மேலே போய் பார்த்தால் நம் தமிழக மண்ணின் கடவுளர்களுக்கு நீராபிஷேகம், பாலாபிஷேகம், தேனாபிஷேகம் செய்வது போல இவர்களும் அபிஷேகம் கெய்யப்படுகிறார்கள். திருமுழுக்கின் வழியாக நாம் அனைவருமே கிறிஸ்துவின் குருத்துவத்தில் பங்கேற்கிறோம். நாம் அனைவருமே அருள்பொழிவு செய்யப்படுகிறோம். அந்த அருள்பொழிவு நம்மை ஒருவர் மற்றவரின் பாதங்களைக் கழுவ அழைக்கின்றது. பாதம் கழுவுபவர் தன் மேலாடையைக் கழற்ற வேண்டும். மேலாடைதான் ஒருவருக்கு மதிப்பைத் தருவது. தனக்கு மதிப்பு தருவது இது என்று எதை ஒரு அருட்பணியாளர் நினைக்கிறாரோ அதை அவர் இழந்தால்தான் பணி செய்ய முடியும். தான் படித்த படிப்பு, தான் சம்பாதித்த உறவு, தன் பணித்தளம், தன் பணிப் பொறுப்பு என எதெல்லாம் அவருக்கு மதிப்பு தருகின்றதோ அதை அவர் கழற்றிவிட்டு துண்டைக் கட்டிக்கொள்ளத் துணியும்போதுதான் பணிவாழ்வு சாத்தியமாகும்.

குடும்ப உறவில் கணவன், மனைவியும் தங்களுக்குரியவற்றை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பிறருக்குரியவற்றில் அக்கறை செலுத்தும்போது அங்கே பணிவாழ்வு பிறக்கிறது.
நற்கருணை. இயேசுவைப் பொறுத்த வரையில் நற்கருணை ஒரு போராட்டம். ‘நான், எனது, எனக்கு’ என்று இந்த உலகம் எல்லாவற்றிற்கும் லேபிள்கள் போட்டு வைத்திருக்கும் வேளையில் அதற்கு எதிர் சான்றாக ‘இது என் உடல், இது என் இரத்தம்’ எனத் தன்னையே கையளிக்கின்றார்.

உயிர் வளர்ச்சியின் இன்றியமையாததொன்றாகிய உணவை நற்கருணையின் கருப்பொருளாக்குகின்றார் இயேசு. ஆனால் இன்று நற்கருணையின் பொருள் வெறும் ஆலயத்திற்குள் அடங்கிவிட்டது. ஒவ்வொரு முறை நாம் அருந்தும் உணவும் நற்கருணையே. தன்னையை வாழ்நாள் முழுவதும் மற்றவர்களுக்காக உடைத்த இயேசு நற்கருணையில் அதை நிறைவு செய்கின்றார்.

மறையுரை 2: பாதம் கழுவி பலியாகும் அன்பு!

இயேசு தம் சீடர்களின் பாதம் கழுவும் நிகழ்வை அவரின் பிறப்போடு ஒப்பிடுகின்றார் ஷீன். இயேசு (கடவுளின் மகன்), பந்தியிலிருந்து (விண்ணகத்திலிருந்து) எழுந்து, தம் மேலுடையைக் (இறை இயல்பை) கழற்றி வைத்து விட்டு ஒரு துண்டை (மனித இயல்பை) எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார் (மாட்டுக்கொட்டிலில் பிறந்தார்). பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் (அவரது இரத்தம்) எடுத்துச் சீடர்களுடைய (நம்முடைய) பாதங்களை (பாவங்களை) கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் (மனித இயல்பால்) துடைக்கத் தொடங்கினார். அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் (இறந்து உயிர்த்தபின்) இயேசு தம் மேலுடையை (இறைஇயல்பை) அணிந்து கொண்டு மீண்டும் பந்தியில் (தன் வானகத்தந்தையிடம்) அமர்ந்தார் (திரும்பிச் சென்றார்) (காண் யோவா 13:4-5,12).

பாதம் கழுவுதல் என்றால் இறங்கி வருதல் என்று பொருள். நாம் நம் உறவுகளில் ஒருவர் மற்றவருக்காக இன்று இறங்கி வருகிறோமா?

யூத மரபில் பாதம் கழுவுதலுக்கு மூன்று அர்த்தங்கள் இருந்தன: 1) தனிநபர் தூய்மை, 2) விருந்தோம்பலின் அடையாளம், 3) எருசலேம் ஆலயச் சடங்கு முறை. இயேசு தம் சீடர்களின் பாதம் கழுவிய நிகழ்வு இந்த மூன்றையும் தாண்டுகின்றது.

விருந்து பின்புலமாக இருந்தாலும் இயேசு இதன் வழியாக ஒரு புதிய சீடத்துவத்தைத் தன் சீடர்களுக்குக் கற்பிக்கின்றார். பாதம் கழுவுதலையும் அப்பம் பிட்குதலையும் ஒன்றென ஆக்குகின்றார். மற்ற நற்செய்திகளில் தன் இறுதி இராவுணவில் அப்பம், இரசம் கொண்டு நற்கருணையை நிறுவும் இயேசு யோவான் நற்செய்தியில் தண்ணீரையும், துண்டையும் கொண்டு நற்கருணையை ஏற்படுத்துகின்றார். பணிசெய்தலே நற்கருணை. பாதம் கழுவுதலே நற்கருணை என அருட்சாதனம் குறித்த புதிய போதனையை வைக்கின்றார் இயேசு. நம் வாழ்வில் நாம் ஒவ்வொரு முறை மற்றவர்களுக்குச் செய்யும் பிறரன்புப் பணிகளும் அருளடையாளங்களே!

இயேசு ஏற்படுத்துகின்ற குருத்துவம் இந்த நிகழ்விலிருந்துதான் ஊற்றெடுக்கின்றது. ‘நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே, ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் எ ன ; ற h ல ; ந Pங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக ; கடமைப்பட்டிருக்கிறீர்கள்” என்று தன் முன்மாதிரியைப் பின்பற்ற சீடர்களை அழைக்கின்றார் இயேசு.

நாம் குருக்களை போதகர் எனவும், ஆயர்களை ஆண்டவர் எனவும் அழைக்கிறோம். அப்படி அழைக்கப்படுபவர்கள் ஒருவர் மற்றவரின் பாதங்களைக் கழுவக் கடைமைப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பல நேரங்களில் பாதம் கழுவுதல் வெறும் பெரிய வியாழன் சடங்காக மாறி குருத்துவம் பீடத்தோடு அந்நியப்பட்டு நிற்பது கண்கூடு.

யோவான் நற்செய்தியில் நற்செய்தி பற்றிய நிகழ்வு இயேசுவின் அப்பம் பலுகச் செய்தலோடு (யோவான் 6) இணைந்துள்ளது. தன்னை வானினின்று இறங்கி வந்த உணவாக மக்களுக்கு முன்வைக்கின்ற இயேசு தான் மன்னாவிலிருந்து எப்படி மாறுபட்டவன் என்பதை வாழ்வு என்ற வார்த்தை வழியாக விளக்குகின்றார். இயேசுவின் உணவு அவர் தருகின்ற கொடை.

இயேசுவின் சீடர்களின் வேலை அப்பங்களை பகிர்ந்து கொடுப்பதும், எஞ்சியைவைகளைக் கூடைகளில் சேர்ப்பதும்தான். ‘நீ சாப்பிடலாம். நீ சாப்பிடக் கூடாது” என்று யாரையும் ஒதுக்கி வைக்க அவர்களுக்கு உரிமையில்லை. குருத்துவம் மக்களையும், இறைவனையும் இணைக்கும் ஒரு இணைப்புக் கோடுதான். ஆகையால் இறைவனை மக்களிடம் கொண்டு வருவதும், மக்களை இறைவனிடம் ஒப்புரவாக்குவதும் பணிக்குருத்துவத்தின் இலக்கு. அதற்கு அருளடையாளங்கள் குறிப்பாக நற்கருணை ஒரு வாயில். இயேசு விரும்பும் சீடத்துவம் பல நேரங்களில் பக்தி என்று மாறிவிட்டதும் எதார்த்தம். நற்கருணை நம்மை பக்தர்களாக அல்ல, சீடர்களாக மாற்ற வேண்டும்.

Comments are closed.