ஏப்ரல் 16 : செவ்வாய்க்கிழமை. நற்செய்தி வாசகம்.
உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்… நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 21-33, 36-38
அக்காலத்தில் தம் சீடர்களுடன் பந்தியமர்ந்த இயேசு உள்ளம் கலங்கியவராய், “உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
யாரைப்பற்றி அவர் இப்படிக் கூறினார் என்று தெரியாமல் சீடர்கள் குழப்பமுற்று ஒருவரை ஒருவர் நோக்கினார்கள். இயேசுவின் சீடருள் ஒருவர் அவர் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்தார். அவர்மேல் இயேசு அன்புகொண்டிருந்தார். சீமோன் பேதுரு அவருக்குச் சைகை காட்டி, “யாரைப்பற்றிக் கூறுகிறார் எனக் கேள்” என்றார்.
இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்த அவர், “ஆண்டவரே அவன் யார்?” என்று கேட்டார்.
இயேசு மறுமொழியாக, “நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்” எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார். அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான்.
இயேசு அவனிடம், “நீ செய்ய இருப்பதை விரைவில் செய்” என்றார். இயேசு ஏன் அவனிடம் இப்படிக் கூறினார் என்பதைப் பந்தியில் அமர்ந்திருந்தோர் யாரும் புரிந்துகொள்ளவில்லை.
பணப்பை யூதாசிடம் இருந்ததால், திருவிழாவுக்குத் தேவையானதை வாங்கவோ ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கவோ இயேசு அவனிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைத்துக்கொண்டனர். யூதாசு அப்பத் துண்டைப் பெற்றுக் கொண்டவுடன் வெளியே போனான். அது இரவு நேரம்.
அவன் வெளியே போனபின் இயேசு, “இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார். கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்” என்றார்.
சீமோன் பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்?” என்று கேட்டார்.
இயேசு மறுமொழியாக, “நான் போகுமிடத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து வர இப்போது உன்னால் இயலாது; பின்னரே என்னைப் பின்தொடர்வாய்” என்றார்.
பேதுரு அவரிடம், “ஆண்டவரே ஏன் இப்போது நான் உம்மைப் பின்தொடர இயலாது? உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்றார்.
இயேசு அவரைப் பார்த்து, “எனக்காக உயிரையும் கொடுப்பாயோ? நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மையசிந்தனை .
தீமைசெய்தவன் திருந்தி நடந்தால் நல்லது நடக்கும்
மறையுரை.
ஒரு பெரிய மடாலயத்தில் சீடர்கள் வட்டமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில், “திருடனாக இருப்பவனுக்கு எப்போதும் கெட்டதுதான் நடக்குமா? இல்லை, நல்லதும் நடக்கும்?” என்ற வாக்குவாதம் வந்தது. அப்பொழுது அவர்களது குரலைக்கேட்டு வந்த குரு, “என்ன பிரச்சினை?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் அந்த வாக்குவாதத்தை கூறினர். உடனே அவர் அவர்களுக்கு உண்மையைப் புரியவைப்பதற்கு, ஒரு கதை கூறத் தொடங்கினார்.
“போர்வீரன் ஒருவன் இருந்தான். அவன் பணத்தாசை பிடித்தவன். ஒருநாள் அவன் தன்னுடைய உயர் அதிகாரியிடமிருந்த பணத்தையெல்லாம் சுருட்டிக்கொண்டு கண்காணாத தொலைதூரத்திற்கு ஓடிப்போனான். ஆனால், அவனிடமிருந்த பணத்தை வேறொருவன் திருடிக்கொண்டு போனதால் வாழ்க்கையையே வெறுத்துப் பிச்சையெடுக்கத் தொடங்கினான். பின்னர் தனது வாழ்நாளில் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக, சில நல்ல காரியங்களை செய்ய முடிவெடுத்தான். அப்பொழுது ஒரு குன்றின்மீது ஓர் ஆபத்தான சாலை இருப்பதும் அதனால் பல பேர் மரணமடைவதும் அவனுக்கு தெரியவந்தது. அதனால் அவன் அந்த மலைவழியாக ஒரு சுரங்கம் வெட்ட எண்ணினான். பகல் நேரங்களில் உணவுக்கு பிச்சை எடுப்பதும் இரவுவேளையில் சுரங்கம் தோண்டுவதையும் வேலையாகச் செய்து வந்தான்.
முப்பது ஆண்டுகள் உருண்டோடின. சுரங்கப்பாதையும் அகலமானது. ஒருநாள் அவன் முன்பு யாருக்குக் கீழ் பணிபுரிந்துவந்தானோ அந்த உயர் அதிகாரியினுடைய மகனின் கண்களில் அகப்பட்டான். தந்தைக்கு துரோகம் செய்தவனை பழிதீர்க்கும் கோபம் அவனது கண்களில் கொளுந்துவிட்டு எரிந்தது. உடனே போர்வீரன் அவனிடம், “உன்னுடைய கோபம் நியாயமானதுதான். ஆனால், இப்பொழுது என்னைக் கொல்லவேண்டாம்… இந்த சுரங்கத்தை வெட்டி முடித்ததும் கொன்றுவிடு” என்று கெஞ்சிக்கேட்டான். அவனும் அதற்குச் சரியென்று சொல்ல, படைவீரன் எஞ்சியிருக்கும் சுரங்க வேலைகளை வேகமாக செய்யத் தொடங்கினான்.
ஒருகட்டத்தில் உயர் அதிகாரியினுடைய மகனின் கோபம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இதற்குப்பின் அவன் போர்வீரனுடன் சேர்ந்து சுரங்க வேலைகளை துரிதப்படுத்தினான். கடைசியாக சுரங்கப்பாதை முடிந்தது. மக்களும் பாதுக்காப்பாக அந்த சுரங்கத்தில் பயணம் செய்யத் தொடங்கினர். எல்லாம் முடிந்தபின்பு போர்வீரன் உயர் அதிகாரியின் மகனிடம் வந்து, “என்னை கொன்றுவிடு” என்றான். அப்பொழுது உயிர் அதிகாரியின் மகனுடைய கோபத்தினால் சிவந்த கண்கள், கண்ணீரால் சிவக்கத் தொடங்கின. “என் தந்தையை ஏமாற்றிய போர்வீரனுக்கும் மற்ற உயிர்களைக் காப்பாற்ற நினைக்கும் உனக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இடைப்பட்ட நாட்களில் நிறையவே நீ மாறிவிட்டாய்… இப்பொழுது நான் உன்னை கொன்றால் பழியும் பாவமும் என் தோள்களில் விழுந்துவிடும்… அதை என்னால் சுமக்க முடியாது. ஆகவே, தொடர்ந்து மற்றவர்களுக்கு நல்ல காரியங்களை செய்து உன்னுடைய பாவங்களை போக்கிக்கொள்” என்று கூறிவிட்டு கிளம்பினான்.”
இக்கதையைச் சொல்லி முடித்தபின்பு குரு சீடர்களிடம் சொன்னார், “திருடனாக இருந்து, திருந்திய பின் நல்லதே நினைத்தால், நல்லதே நடக்கும்.”
தீமை செய்த ஒருவர் திருந்தி நடக்கத் தொடங்கினால், அவருடைய வாழ்வில் நல்லதே நடக்கும் என்னும் உண்மையை எடுத்துச் சொல்லும் இந்நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.
யூதாஸ் காட்டிக்கொடுக்க இருப்பதையும் பேதுரு மறுதலிக்க இருப்பதையும் முன்னறிவித்த இயேசு
நற்செய்தி வாசகத்தில், இயேசு தன்னுடைய சீடர்களான யூதாஸ் தன்னைக் காட்டிக்கொடுக்க இருப்பதையும் பேதுரு தன்னை மறுதலிக்க இருப்பதையும் முன்னறிவிக்கின்றார். யூதாஸ் தன்னைக் காட்டிக்கொடுக்கவிருக்கின்றார் என்பது இயேசுவுக்குத் தொடக்கத்திலேயே நன்றாகத் தெரிந்திருந்தது (யோவா 6:64). ஆனாலும் இயேசு அவரிடம் மிகவும் பொறுமையாகவும் அன்பாகவும் இருந்து, அவருக்கு உரிய மரியாதை கொடுக்கின்றார் (யோவா 12: 6).
குறிப்பிட்ட காலத்தில் இயேசு சொன்னதுபோன்றே யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுக்கின்றார்; பேதுரு இயேசுவை மறுதலிக்கின்றார். ஒருகட்டத்தில் யூதாஸ் தன்னுடைய தவறை உணர்ந்து வருந்தினாலும் திருந்தி நடக்கவில்லை. ஆனால், பேதுரு தன்னுடைய தவறை உணர்ந்து, திருந்தி நடக்கத் தொடங்கினார். அதனால் அவர் புதியதொரு மனதனாக வாழத் தொடங்கினார். ‘யாரும் அழிந்துபோகவேண்டும் என்பதல்ல, மனமாறவேண்டும் என்பதே இறைவனின் திருவுளம்’ (2 பேதுரு 3:9). இதன்படி பேதுரு நடந்ததால் அவர் கடவுளுக்கு ஏற்றவர் ஆனார். திருந்தி நடக்காததால் யூதாஸ் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆகாமல், தற்கொலை செய்து இறந்துபோனார்.
சிந்தனை.
‘தீயவரோ தாம் செய்த பாவங்கள் அனைத்தையும் விட்டு, மனம் மாறி, என் நியமங்கள் அனைத்தையும் கைக்கொண்டு, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் அவர்கள் வாழ்வது உறுதி, அவர்கள் சாகார்’ (எசே 18: 21) என்பார் எசேக்கியேல் இறைவாக்கினர். ஆகவே, நாம் யூதாசைப் போன்று இல்லாமல், பேதுருவைப் போன்று செய்த தவற்றை உணர்ந்து, ஆண்டவரிடம் திரும்பி வந்து, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Comments are closed.