தவக்காலம் ஐந்தாம் வாரம் (ஏப்ரல் 07)

தீயோர் அழிந்துபோகவேண்டும் என்றல்ல,
மனம்மாறி வாழவேண்டும் என்று விரும்பும் இறைவன்

நிகழ்வு

இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்துகொண்டு செய்யாத தவறுகள் கிடையாது. புலால் உண்டான். வேசைகளின் வீட்டிற்குச் சென்றான். தவிர, தன்னுடைய சகோதருடைய தங்கப் காப்பினைத் திருடி அதன்மூலம் பல தீய பழக்கவழக்கங்களில் ஈடுபட்டான். இப்படிப்பட்ட அந்த இளைஞன் ஒருநாள் தன்னுடைய தவறை உணர்ந்து, திருந்தி நடக்க விரும்பினான். அதற்கு முன்னதாக கடந்த காலத்தில் தான் செய்த குற்றங்களையெல்லாம் தனது தந்தையிடம் எடுத்துக் சொல்லி மன்னிப்புக் கேட்க விரும்பினான். ஆனால், தந்தை என்ன நினைப்பாரோ என்று நினைத்துப் பயந்தான். எனவே, அவன் தான் செய்த குற்றங்களையெல்லாம் ஒரு வெள்ளைக் காகிதத்தில் எழுதி, அதைத் தந்தையிடம் கொடுத்தான்.

அந்த இளைஞனின் தந்தையோ படுக்கையில் முடியாமல் கிடந்தார். தான் கொடுத்த கடிதத்தைப் படித்துப் பார்த்துப் பார்த்துவிட்டு, தந்தை ‘தன்னுடைய தோலை உரித்துத் தொங்கவிடப் போறாரோ அல்லது வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்க்கப்போறாரோ’ என்று பயந்துகொண்டே இருந்தான். தந்தை அவன் கொடுத்த கடிதத்தைப் படித்துப் பார்த்துவிட்டு, கண்ணீரால் அந்தக் கடித்ததை நினைத்தார். பின்னர் அந்தக் கடிதத்தைக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, தன் மகனை அணைத்துகொண்டு, “என் மகனே! எப்பொழுது நீ உன்னுடைய குற்றத்தை உணர்ந்துவிட்டாயோ, அப்பொழுதே நான் உன்னை மனதார மன்னித்துவிட்டேன்… இனிமேலாவது நல்ல மனிதனாக வாழ்” என்றார்.

இப்படி, தான் செய்த தவறுக்குத் தந்தையிடம் மன்னிப்புக் கேட்டு, நல்ல மனிதராக வாழத் தொடங்கியவர்தான், பின்னாளில் நம்முடைய நாட்டிற்காக ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலையை வாங்கித்தந்த காந்தியடிகள் அவர்கள். காந்தியடிகளின்மீது அவருடைய தந்தை காட்டிய பேரன்பு அவரைப் புதிய மனிதராக மாற்றியது. நற்செய்தியியிலோ இயேசு ஒரு பெண்ணிடம் காட்டிய பேரன்பு அவரைப் புதிய பெண்ணாக மாற்றிக்காட்டுகின்றது. இயேசு அப்பெண்ணிடம் கொண்ட அன்பு எத்தகையது, அது அவரை எப்படிப்பட்ட பெண்ணாக மாற்றுகின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

‘பெண்’ அழிந்துபோகவேண்டும் என்று விரும்பிய பரிசேயக்கூட்டம்

நற்செய்தியில் இயேசு எருசலேம் திருகோவிலில் மக்களுக்குப் போதித்துக் கொண்டிருக்கும்பொழுது, அவரிடம் ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு வந்த பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள், “இப்பெண் பரத்தமையில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்துகொள்ளவேண்டும் என்பது மோசேயின் சட்டம். நீர் என்ன சொல்கிறீர்?” என்று கேட்கிறார்கள்.

முதலில் பரத்தமை அல்லது விபச்சாரத்தில் பிடிபட்டவர்களுக்கு மோசே என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என்று கூறியிருக்கின்றார் என்று தெரிந்துகொண்டால்தான் பரிசேயர்களின் தீய எண்ணத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும். “அடுத்திருப்பவன் மனைவியோடு உடலுறவு கொள்பவனும் அந்தப் பெண்ணும் கொலை செய்யப்படவேண்டும்” (லேவி 20:10 ; இச 22:22) இதுதான் பரத்தமையில் ஈடுபடுவோருக்கு மோசே கொடுக்கச் சொன்ன தண்டனை. ஆனால், இயேசுவிடம் வருகின்ற பரிசேயக்கூட்டமோ, அந்தப் பெண்ணோடு தவறு செய்த ஆணைவிட்டுவிட்டு, பெண்ணை மட்டும் ‘விலைமகள்’ என்று முத்திரை குத்தி இயேசுவிடம் இழுத்துக்கொண்டு வருகின்றார்கள். இதிலிருந்தே அவர்கள் எவ்வளவு தந்திரமாகச் செயல்படுகின்றார்கள் என்பது புரியும்.

மேலும் பரிசேயக்கூட்டம், விபச்சாரத்தில் ஈடுபட்ட அந்தப் பெண்ணுக்குத் தண்டனை வாங்கித் தந்துவிடவேண்டும் என்று செயல்பட்டதை விடவும், இயேசுவை எப்படியும் சிக்கலில் மாட்டிவிடவேண்டும் என்று மிகத் துரிதமாகச் செயல்பட்டது. அதனால்தால் அவர்கள், “நீர் என்ன சொல்கிறீர்?” என்கின்றார்கள். இயேசு, அப்பெண்ணைக் கல்லால் எறிந்து கொள்ளவேண்டும் என்றால், இயேசு பாவிகளின் நண்பன், அவர் அவர்களை அரவணைக்கின்றவர் என்பது பொய்யாகிவிடும். மறுபக்கம், இயேசு அப்பெண்ணைக் கல்லால் எறிந்து கொள்ளவேண்டும் என்று சொன்னால், மோசேயின் சட்டத்திற்கு எதிராக ஏற்கனவே செயல்பட்டவர் (5: 39-47; 6:32; 7:40) இப்பொழுது மீண்டுமாகச் செயல்படுகின்றார் என்று மக்களை அவருக்கு எதிராகத் திரும்பிமுடியும். இப்படிப்பட்ட நிலையில் இயேசு ஞானத்தோடு செயல்பட்டு, அவர்களின் தந்திரத்தை முறியடிக்கின்றார்.

பெண் வாழவேண்டும் என்று விரும்பிய இயேசு

பரிசேயர்கள் கேட்ட கேள்விக்கு எப்படிப் பதில் சொன்னாலும் பிரச்சினைதான் என்பதை நன்குணர்ந்த இயேசு, அவர்களிடம் எதுவும் பேசாமல் குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருக்கின்றார். இயேசு தரையில் தன் விரலால் எழுதுவது, ஆண்டவராகிய கடவுள் சீனாய் மலையில் தன் விரலால் எழுதிய உடன்படிக்கைப் பலகையை மோசேக்குத் தந்ததையும் (விப 31:18) இறைவாக்கினர் எரேமியா, “உம்மைவிட்டு அகன்றோர் தரையில் எழுதப்பட்டோர் ஆவர்” (எரே 17:13) என்று சொன்னதையும் நினைவுபடுத்துவதாக இருக்கின்றது. இந்த இரண்டு பகுதிகளையும் இணைத்துச் சிந்தித்துப் பார்க்கும்பொழுது, “கட்டளைகளைக் கொடுத்த இறைவனாகிய நான் சொல்கிறேன், பொல்லாத நீங்கள் அப்பெண்ணை எதுவும் செய்யாமல் செய்யாதீர்கள்” என்று இயேசு சொல்வது போன்று இருக்கின்றது. அதனால்தான் அவர், “உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்” என்கின்றார். இயேசு இவ்வாறு சொன்னதைக் கேட்டு, முதியவர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவ்விடத்தை விட்டு நகர்ந்து செல்கின்றார்கள். அப்பொழுது இயேசு அப்பெண்ணிடம், “இனிப் பாவம் செய்யாதீர்” என்று சொல்லி, அப்பெண் புதிய வாழ்வை வாழ வழிவகுக்கின்றார்.

பரிசேயக்கூட்டம் அந்தப் பெண் அழிந்துபோகவேண்டும் என்று விரும்பியபோது, இயேசுவோ அப்பெண் மனம்மாறி வாழவேண்டும் என்று விரும்பியது நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.

நாம் பரிசேயர்களைப் போன்றவர்களா? இயேசுவைப் போன்றவர்களா?

விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை பரிசேயக் கூட்டமும் இயேசுவும் இருவேறு விதமான அணுகிறார்கள். அந்தப் பெண் அழிந்துபோக வேண்டும் என்று பரிசேயர்கள் விரும்பியபோது, இயேசு, அப்பெண் வாழ்வேண்டும் என்று விரும்புகின்றார். இந்த இருவரில் நாம் யார் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்

இந்த உலகத்தில் தவறு செய்யாத மனிதர்கள் யாரும் இல்லை. அப்படித் தவறுசெய்தவர்களை இயேசுவைப் போன்று மன்னித்து ஏற்றுக்கொள்கின்றபோதுதான் தவறுசெய்தவர் தன்னுடைய தவற்றை உணர்ந்து திருந்தி நடப்பதற்கான வாய்ப்பிருக்கின்றது. அப்படி இல்லாமல், தவறுசெய்தவர் தண்டக்கப்படவேண்டும் என்ற மனநிலையோடு செயல்பட்டால் இந்த உலகத்தில் யாரும் மிஞ்சமாட்டார்கள் என்பதுதான் உண்மை.

தாமஸ் ஆல்வா எடிசன் பல போராட்டங்களுக்குப் பிறகு மின்விளக்கை கண்டுபிடித்து, அதைத் தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்குக் காட்டுவதற்கும் அதைப் பற்றி விளக்கமளிப்பதற்கும் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாளில், எடிசன் தனது உதவியாளரிடம், கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்திருந்த மின்விளக்கைக் கூட்டம் நடைபெறும் இடத்தில் கொண்டுசென்று வைக்கச் சொன்னார். அவரோ தவறுதலாக அதை உடைத்துவிட, எல்லாரும் அதிர்ந்துபோனார்கள். ஆனால் எடிசன் எந்தவொரு பதற்றமும் அடையாமல், மீண்டுமாக ஆய்வுக்கூட்டத்திற்குச் சென்று, வேக வேகமாக மின்விளக்கைத் தயாரித்து, அதைத் தன் உதவியாளரிடமே கொடுத்து, கூட்டம் நடைபெறவிருந்த இடத்தில் வைக்கச் சொன்னார்.

இதைப் பார்த்துவிட்டு எடிசனின் நண்பர்கள், “கடந்தமுறைதான் அவர் மின்விளக்கை உடைத்தாரே…. மீண்டுமாக எதற்கு அவரிடமே கொடுத்து அனுப்புகிறீர்கள்?” என்று கேட்டதற்கு அவர், “மின்விளக்கு உடைந்து போனால் மீண்டுமாகத் தயாரித்துவிட முடியும், அவருடைய மனது உடைந்துபோனால் எப்படித் தயாரிப்பது?… கடந்தமுறை தெரியாமல் உடைத்தவருக்குத் தெரியும், இந்தமுறை அதை எப்படிக் கொண்டுசெல்லவேண்டும் என்று. அதனால்தான் நான் அவரிடமே மின்விளக்கைக் கொடுத்தனுப்பினேன்” என்றார். எவ்வளவு அருமையான வார்த்தைகள் இவை.

மன்னிக்கும் மனமிருந்தால் இதயநோய் வருவதில்லை என்கிறது அமெரிக்காவின் கலிபோர்னியா பேராசிரியர் பிரிட்டோ லார்சனின் ஆராய்ச்சி முடிவு. ஆகவே, நாம் தவறு செய்தவர்களை இயேசுவைப் போன்று மன்னித்து, நாமும் நம்மால் மன்னிக்கப்பட்டவர்களும் நலம் பெறுவதற்கு வழி வகுப்போம்.

சிந்தனை

‘இறைவன், யாரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனம் மாறவேண்டுமென (அதனால் வாழ்வு பெற) விரும்புகிறார்’ என்பார் தூய பேதுரு (2 பேதுரு 3:9). ஆகவே, தீயவர்கள் மனம் மாறி வாழ்வு பெற நாமும் ஒரு காரணமாக இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்

Comments are closed.