தவக்காலம் 4ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

தவக்காலத்தின் 4ம் ஞாயிறை, Laetare Sunday – அதாவது, ‘மகிழும் ஞாயிறு’ என்று கொண்டாடுகிறோம். நாம் வாழ்வில் மகிழ்வடைய பல நூறு காரணங்கள் இருக்கும். அவற்றில் இரு காரணங்களை இன்றைய வாசகங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

வாழ்வில் இதுவரை நாம் பெறாத ஒன்றைப் பெறும்போது மகிழ்வடைகிறோம். அதேவண்ணம், அல்லது, அதைவிடக் கூடுதலாக, வாழ்வில் நாம் இழந்ததை மீண்டும் பெறும்போது மகிழ்வடைகிறோம். நாம் அனுபவித்துள்ள இவ்விரு சூழல்களையும் இன்றைய வாசகங்கள் நினைவுறுத்துகின்றன.

கானான் நாட்டை அடைந்த இஸ்ரயேல் மக்கள் அனைவருமே எகிப்தில் அடிமைகளாகப் பிறந்தவர்கள். எனவே, அவர்களில் யாரும் அதுவரை சுதந்திரமாக தாங்களே பயிரிட்டு, தயாரித்த உணவை உண்ட அனுபவம் துளியும் இல்லாதவர்கள். அவர்கள் வாழ்வில் அதுவரைப் பெற்றிராத ஓர் அனுபவத்தை முதல் முறையாகப் பெற்றதால் உண்டான மகிழ்வை யோசுவா நூலிலிருந்து எடுக்கப்பட்ட வாசகம் தெளிவுபடுத்துகிறது. இழந்த ஒன்றை மீண்டும் பெறும்போது உண்டாகும் மகிழ்வை நற்செய்தியில் கூறப்பட்டுள்ள உவமை விளக்குகிறது. இயேசு கூறிய அத்தனை உவமைகளிலும், அதிகப் புகழ்பெற்ற உவமை, ‘காணாமற்போன மகன்’ உவமை.

மிகவும் புகழ்பெற்ற உவமைகளுக்கே உரிய ஓர் ஆபத்து, ‘காணாமற்போன மகன்’ உவமைக்கும் உள்ளது. அதாவது, இந்த உவமை நம் அனைவருக்கும் ஏறத்தாழ மனப்பாடமாகத் தெரிந்த உவமையாக மாறிவிட்டது. எவ்வளவு தூரம் நமக்குத் தெரியும் என்றால், இந்தக் கதையை யாராவது வாசிக்கவோ, சொல்லவோ துவங்கியதும், இக்கதையின் முடிவை நாம் மனதுக்குள் சொல்லி முடித்துவிடுவோம். எனவே, இவ்வுவமை வாசிக்கப்படும் வேளையில் நாம் பொறுமை இழந்து, தவிப்போம்; அல்லது, தெரிந்த முடிவு என்பதால், வேறு விடயங்களில் நம் மனதை அலைபாய விடுவோம்.

இந்த உவமையோ, அல்லது, வேறு விவிலியப் பகுதிகளோ நம் வழிபாடுகளில் வாசிக்கப்படும் வேளையில் மற்றுமோர் ஆபத்தும் உருவாகிறது. அதாவது, இந்த உவமையில் கூறப்படும் நிகழ்வுகள், வேறு யாருக்கோ, எங்கோ நடக்கும் நிகழ்வுகளாக எண்ணி, நாம் பார்வையாளர்களாக மாறும் ஆபத்து உருவாகிறது.

இந்த நம் மனநிலையை, ஓர் உருவகமாகக் கூறவேண்டுமெனில், நம் வீட்டின் சன்னலருகே அமர்ந்து, அந்த சன்னல் கண்ணாடி வழியே, வெளியில் நடப்பனவற்றைப் பார்க்கும் பார்வையாளருடைய மனநிலையில் நாம் இந்த உவமையைக் கேட்கும் ஆபத்து உள்ளது. இன்று, இவ்வுவமையை, ஒரு சன்னல் கண்ணாடியாகப் பயன்படுத்தி, மற்றவர்கள் வாழ்வைப் பார்க்க முயல்வதற்குப் பதில், இதை முகம் பார்க்கும் கண்ணாடியாகப் பயன்படுத்தி, நம் வாழ்வைக் காண முயல்வோம்.

‘காணாமற்போன மகன்’ உவமை என்ற இந்தக் கண்ணாடியின் வழியே, நம்மையேக் காணும்போது, இவ்வுவமையில் கூறப்பட்டுள்ள மூன்று கதாப்பாத்திரங்களாக நாம் வெவ்வேறு நேரங்களில் வாழ்ந்திருக்கிறோம் என்பதை உணர்கிறோம்.

தன்னிலை இழந்து, தந்தையைவிட்டு விலகிச்சென்ற இளைய மகனாக நாம் இருந்த வேளைகள் பல உண்டு. அதேவண்ணம், தன்னை மட்டுமே நல்லவனாக, உயர்ந்தவனாக எண்ணி, தன் உடன்பிறந்த சகோதரனையும் ஏற்க மறுத்த மூத்த மகனாக நாம் வாழ்ந்த நேரங்களும் உண்டு. தவக்காலத்தில், இவ்விரு நிலைகளையும் களைந்து வாழும் வரத்தை, நமக்காகக் காத்திருக்கும் தந்தையிடம் இறைஞ்சுவோம்.

‘காணாமற்போன மகன்’ உவமை என்ற கண்ணாடிவழியே நமக்குக் காட்டப்படும் தந்தையை இன்னும் சிறிது ஆழமாகப் புரிந்துகொள்ள முயல்வோம். இந்த உவமை, பொதுவாக, ‘ஊதாரி மகன்’ உவமை என்று அழைக்கப்படுகிறது. இந்த உவமையை, ‘ஊதாரி மகன்’ உவமை என்று சொல்வதற்குப் பதில், ‘ஊதாரித் தந்தை’ உவமை என்று சொல்வதே பொருத்தமாகத் தெரிகிறது. பின்விளைவுகளைப்பற்றி சிந்திக்காமல், வருங்காலத்திற்குச் சேமித்து வைப்பதைப்பற்றி யோசிக்காமல், வீண் செலவு செய்யும் ஒருவரைத்தான் ஊதாரி என்று கூறுகிறோம்.

தனக்கு கிடைத்த சொத்தை, தாறுமாறாய் செலவு செய்த இளையமகன், ஊதாரிதான். அதேபோல், வயது முதிர்ந்த காலத்தில், தன் பாதுகாப்பிற்கென எதையும் வைத்துக்கொள்ளாமல், ‘தன் சொத்தைப் பகிர்ந்தளித்த’ (லூக்கா 15:12) தந்தையும் ஊதாரிதானே! திரும்பி வந்த மகனை எவ்வித நிபந்தனையுமின்றி ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல்,  தலைகால் புரியாமல் அவன் மீது அன்பு காட்டும் தந்தை ஒரு ஊதாரி தானே! மனம் திருந்தி வந்த மகன், மன்னிப்புக் கேட்பதற்கு முயற்சி செய்தபோது, அதற்கு சிறிதும் இடமளிக்காமல், ஒரு விழாவைத் துவக்கிவைத்த தந்தையை, ‘ஊதாரி தந்தை’ என்று அழைக்காமல், வேறு எவ்விதம் அழைப்பது?

‘காணாமற்போன மகன்’ உவமையை இன்றையச் சூழலில் பொருத்திப் பார்க்கும்போது, நெருடலான பலப் பிரச்சனைகள் நெஞ்சைச் சுடுகின்றன. இப்பிரச்சனைகளில் ஒன்றை வெளிச்சம்போட்டு காட்ட ஒரு சிறுகதை நமக்கு உதவியாக இருக்கும். இலக்கியத்தில் நொபெல் பரிசு வென்ற அமெரிக்க எழுத்தாளர் Ernest Hemingway அவர்கள் எழுதிய ‘The Capital of the World’ என்ற சிறுகதையில், இடம்பெறும் ஒரு நிகழ்வு இது:

ஸ்பெயின் நாட்டில் வாழ்ந்த தந்தை ஒருவருக்கும், ‘பாக்கோ’ (Paco) என்ற அவரது ‘டீன் ஏஜ்’ மகனுக்கும் இடையே உறவு முறிந்தது. வீட்டைவிட்டு வெளியேறிய  பாக்கோவைத்  தேடி அலைந்தார், தந்தை. இறுதியில், அவர் ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மத்ரித் சென்று தேடினார். பல நாட்கள் தேடியபின், ஒருநாள் செய்தித்தாளில் விளம்பரம் ஒன்று வெளியிட்டார்: “Paco, meet me at the Hotel Montana. Noon Tuesday. All is forgiven. Papa” “பாக்கோ, மொன்டானா ஹோட்டலில் என்னைச் சந்திக்க வா. உனக்காக நான் செவ்வாய் மதியம் அங்கு காத்திருப்பேன். அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிட்டன. இப்படிக்கு, அப்பா” என்ற வார்த்தைகள், அவ்விளம்பரத்தில் காணப்பட்டன. செவ்வாய் மதியம் மொன்டானா ஹோட்டலுக்குச் சென்ற அப்பாவுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. 800க்கும் அதிகமான இளையோர் ஹோட்டலுக்கு முன் திரண்டிருந்ததால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த, காவல்துறை வரவழைக்கப்பட்டது.

‘பாக்கோ’ (Paco) என்பது, ஸ்பெயின் நாட்டில் பலரும் பயன்படுத்தும் ஒரு செல்லப்பெயர். அங்கு வந்திருந்த அனைவருமே ‘பாக்கோ’ என்ற பெயர் கொண்டவர்கள். அதைவிட அதிகமாக மனதை நெருடும் உண்மை, அவர்கள் அனைவருமே பெற்றோருடன் ஏற்பட்ட மோதலில் வீட்டைவிட்டு வெளியேறியவர்கள். அவர்கள் அனைவரும் தங்கள் தந்தையை எதிர்பார்த்து, அங்கு காத்திருந்தனர் என்று, எழுத்தாளர் Hemingway அவர்கள் தன் சிறுகதையை முடித்துள்ளார்.

இக்கதைக்கு பெரிய விளக்கங்கள் தேவையில்லை. இன்றும், நமது குடும்பங்களில் நிகழும் உறவுப் பிரச்சனைகளால் நகரங்களில் தொலைந்துபோகும் எத்தனையோ இளையோரைக் குறித்து நாம் நன்கு அறிவோம். குடும்பங்களில் ஏற்படும் உறவு முறிவுகளால், வீட்டில் இருந்தவண்ணம், மற்றவர்களிடமிருந்து உள்ளத்தால் அதிகம் விலகி, அல்லது, வீட்டைவிட்டு வெளியேறி, காணாமற்போகும் மகன், மகள், பெற்றோர், கணவன், மனைவி, வயதான தாத்தா, பாட்டி என்று… இந்தப் பட்டியல் மிக நீளமானது. தவக்காலம், ஒப்புரவின் காலம். இந்த உறவு முறிவுகளைக் குணமாக்க தகுந்ததொரு காலம்.

Comments are closed.