நற்செய்தி வாசக மறையுரை (மார்ச் 27)

தவக்காலம் மூன்றாம் வாரம்
புதன்கிழமை
மத்தேயு 5: 17-19

அழிப்பதற்கு அல்ல, நிறைவேற்றவே

நிகழ்வு

வட்ட மேசை மாநாடு முடிந்து காந்தியடிகள் இந்தியாவிற்குத் திரும்பியிருந்த சமயம். அப்பொழுது அவரைச் சந்தித்தார் இர்வின் பிரபு. அவர் காந்தியிடம், “மகாத்மா, சக மனிதனாக நான் உம்மிடம் கேட்கின்றேன்… உங்களது நாட்டின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எந்த வகையில் நான் உதவலாம்?” என்று கேட்டார். உடனே காந்தியடிகள் தன் அறையில் இருந்த விவிலியத்தை எடுத்து, மத்தேயு நற்செய்தியின் ஐந்தாம் அதிகாரத்தை வைத்துக்கொண்டு, “இர்வின் பிரபு, எங்களது நாடும் உங்களது நாடும் ஏன் உலகமே பிரச்சினையின்றி வாழ இயேசு மலைப்பொழிவில் சொன்னதை நாம் கடைபிடித்தாலே போதும். எல்லாப் பிரச்சினைகளும் ஓய்ந்து அமைதி கிடைத்துவிடும்” என்று பதில் சொன்னார்.

இறைவார்த்தை/ இயேசுவின் வார்த்தை வல்லமை நிறைந்த வார்த்தை. விண்ணும் மண்ணும் அழிந்துபோகுமுன் நிறைவேறக்கூடக்கூடிய வார்த்தை. அவ்வார்த்தைகளை நாம் வாசிப்பது மட்டுமல்லாமல், வாழ்வாக்கினோம் எனில் விண்ணுலகில் பெரியவர் ஆவோம் என்பது உறுதி.

இறைவாக்குகளையும் திருச்சட்டத்தையும் நிறைவேற்ற வந்த இயேசு

இயேசு தன்னுடைய பணியை மக்களுக்குச் செய்தபோது, பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் அவர்மீது அடிக்கடி வைத்த குற்றச்சாற்று, ‘இவர் சட்டத்தை மீறுகிறார்’ என்பதாகும் (மத் 3:2). பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் சொல்வது போன்று இயேசு திருச்சட்டத்தை மீறினாரா? என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில், சட்டங்கள் என்று அவர்கள் சொன்னது ஆண்டவருடைய திருச்சட்டமல்ல, மனிதக் கட்டளைகளும் மரபுகளும்தான் (மாற் 7: 7-8). இவற்றை அவர்கள் கோட்பாடுகளாகக் கற்பித்து வந்தார்கள். இவை அறிவுக்கு ஒவ்வாதவையாகவும் சாதாரண மக்களுக்கு மிகப்பெரிய சுமையாகவும் இருந்தன (மத் 23:4) அதனால்தான் இயேசு அவற்றை மீறுகின்றார்; அவற்றுக்கு எதிராகத் தன்னுடைய கண்டனத்தைப் பதிவுசெய்கின்றார். ஆனால், அவர் திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ மீறாமல் கடைப்பிடித்து வந்தார். “காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தன் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்” (கலா 4:4-5) என்று தூய பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலில் கூறுகின்ற வார்த்தைகளில் இதை வாசித்து அறியலாம்.

இன்னும் சொல்லப்போனால், இயேசு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் திருச்சட்டத்திற்கும் இறைவாக்குக்கும் ஏற்பவே வாழ்ந்துவந்தார். அதனால்தான் தந்தையாம் கடவுள், “இவரே என்னுடைய அன்பார்ந்த மைந்தர். இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” (மத் 3:17, 17:5) என்கின்றார். ஆதலால், இயேசு திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ அழிக்க வந்தார் என எண்ணாமல், அவற்றை நிறைவேற்ற வந்தார் என்ற தெளிவினைப் பெற்றுக்கொண்டு, நாமும் அவற்றை நிறைவேற்றுபவர்களாக இருக்கவேண்டும்.

திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் ஏன் நிறைவேற்றவேண்டும்?

இயேசு, தன்னுடைய வாழ்வு முழுவதும் திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் நிறைவேற்றினார் என்றும் அவர் வழியில் நடக்கின்ற நாம் ஒவ்வொருவரும் அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றும் சிந்தித்துப் பார்த்தோம். இப்போது நமக்குள் ஒரு கேள்வி எழலாம். “நாம் ஏன் திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் நிறைவேற்றவேண்டும்?” என்பதுதான் அந்தக் கேள்வி

திருச்சட்டத்தை ஒவ்வொருவரும் நிறைவேற்றுவதற்கு மிக காரணம், அது மனிதருக்கு நிறைவையும் புத்துயிரையும் அளிக்கின்றது (திபா 19:7) அது மட்டுமல்லாமல் அது மனிதருக்கு இன்பம் தரக்கூடியதாக இருக்கின்றது. (திபா 119:92) ஆகவே, இத்தகைய திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் ஒவ்வொருவரும் இயேசுவைப் போன்று நிறைவேற்றி வாழ்வது தேவையான ஒன்று.

திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து வாழ்வோர் விண்ணரசில் பெரியவர்

நற்செய்தி வாசகத்தில் இயேசு எல்லாவற்றையும் சொல்லிவிட்டுச் சொல்லக்கூடிய வார்த்தைகள்தான், “இவையனைத்தையும் கடைபிடித்துக் கற்பிக்கின்றவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்” என்பதாகும். திருச்சட்டமும் இறைவாக்கும் மகிழ்ச்சியையும் புத்துயிரையும் அளிக்கின்றது என்றால், அவற்றைக் கேட்பதோடோ அல்லது அவற்றைக் கற்பிப்பதோடோ நின்றுவிடக்கூடாது. மாறாக, அவற்றைக் கடைப்பிடித்துக் கற்பிக்கவேண்டும். அப்பொழுதுதான் ஒருவர் விண்ணரசில் பெரியவர் ஆகமுடியும். ஆகவே, நாம் திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் கடைப்பிடித்து வாழ முயற்சி செய்வோம். அதன்வழியாக இறைவன் தரும் மேலான ஆசியைப் பெற்றுக்கொள்வோம்.

சிந்தனை

‘உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக’ என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவுபெறுகிறது’ என்பார் தூய பவுல் (கலா 5:1). ஆகவே, திருச்சட்டத்தின் நிறைவாகிய இறை மனித அன்பை நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்

Comments are closed.