மார்ச் 23 : நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-3, 11-32

அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர்.

அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, `அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்’ என்றார்.

அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலைநாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார்.

பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார்.

அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. அவர் அறிவு தெளிந்தவராய், `என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்’ என்று சொல்லிக்கொண்டார்.

உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், `அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்’ என்றார்.

தந்தை தம் பணியாளரை நோக்கி, `முதல் தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும் காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்துகொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.

அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, `இதெல்லாம் என்ன?’ என்று வினவினார்.

அதற்கு ஊழியர் அவரிடம், `உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்’ என்றார். அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.

அதற்கு அவர் தந்தையிடம், `பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை.

ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துக்களையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!’ என்றார்.

அதற்குத் தந்தை, `மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————-
தவக்காலம் 02ஆம் வாரம் சனி

மறையுரைச் சிந்தனை

தவறை உணர்ந்து, மனம்மாறும் காலமிது

ஆங்கில அகராதியை முதல்முறையாக வடிவமைத்தவர் சாமுவேல் ஜான்சன் என்பவர். அவர் ஆங்கில அகராதியை வடிவமைத்ததோடு மட்டுமல்லாமல், ஆங்கில இலக்கியத்தில் மிகப்பெரிய சாதனைகளையும் நிகழ்த்தியவர். அவரது சாதனைகளைப் பாராட்டுவதற்காக பாராட்டுக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அக்கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டார்கள்.
கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் எல்லாரும் சாமுவேல் ஜான்சனை வாயார வாழ்த்திப் பேசினார்கள். அப்போது திடிரென்று கூட்டத்திலிருந்து எழுந்த ஒரு பெண்மணி சாமுவேல் ஜான்சனிடம், “பெரும் மதிப்பிற்குரிய சாமுவேல் ஜான்சன் அவர்களே! நீங்கள் ஆங்கில இலக்கியத்திற்குச் செய்த சேவைக்காக உங்களை மனதாரப் பாராட்டுகிறேன், ஆனால் அதேவேளையில் உங்களுடைய படைப்பில் ஒரு தவறு இருக்கிறது” என்றார்.

அதைக்கேட்ட கூட்டம் ஒருநிமிடம் அமைதியானது. அப்போது சாமுவேல் ஜான்சன் அப்பெண்மணியிடம், “என்னுடைய படைப்பில் தவறு இருப்பதாகச் சொல்கிறீர்களே, அதனைத் தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா? என்று கேட்டார். அதற்கு அப்பெண்மணி “ஆம்” என்று சொல்லிவிட்டு அதனை நிரூபித்துக் காட்டார்.

உடனே சாமுவேல் ஜான்சன், “அம்மா! இந்தத் தவறு என்னுடைய அறியாமையில் நிகழ்ந்தது. இதை நான் திருத்திக்கொள்கிறேன். அதேவேளையில் இந்தத் தவறுக்காக நான் மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன்” என்றார். சாமுவேல் ஜான்சன் தன்னுடைய தவறை தெரிந்துகொண்டபோது, அதைப் பெருந்தன்மையோடு திருத்திக்கொள்ள முன்வருகிறார். இப்படிப்பட்ட குணமானது உண்மையிலே பாராட்டுக்குரியது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் தன்னுடைய தவறை உணர்ந்து தந்தையிடம் திரும்பி வந்த ஊதாரி மைந்தனுடைய உவமையை நாம் வாசிக்கக் கேட்கின்றோம். இவ்வுவமை தந்தையின்/தந்தைக் கடவுளின் அளவுக் கடந்த இரக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறது என்பதை நாம் அறிவோம். அதே வேளையில் நாம் ஒவ்வொருவரும் மனம்மாறி கடவுளிடம் திரும்பி வரவேண்டும் என்ற செய்தியையையும் இவ்வுவமை நமக்குச் சுட்டிகாட்டுகிறது என்பதை மறக்கமுடியாது.

ஊதாரி மகன்/ இளைய மகன் தன்னுடைய தந்தையிடமிருந்து சொத்தை எல்லாம் பிரித்துக்கொண்டு, தொலைநாட்டுக்குச் சென்று, தாறுமாறான வாழ்க்கை வாழ்கிறான். ஒருகட்டத்தில் தன்னுடைய தவறை உணர்ந்து, தந்தையிடம் திரும்பி வந்து மன்னிப்புக் கேட்கிறான். அப்போது தந்தையானவர் அவனை மனதார மன்னித்து ஏற்றுக்கொள்கிறார்.

“வீழ்வது பலவீனம், வீழ்ந்து கிடப்பதுதான் மதியீனம்” என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப ஊதாரி மகன் பாவத்தில் விழுகிறான். ஆனால் அவன் அப்படியே பாவத்தில் விழுந்துகிடைக்கவில்லை. மாறாக தன்னுடைய தவறை உணர்ந்து, தந்தையிடம் திரும்பி வந்து, மன்னிப்புக் கேட்கிறான், புது மனிதனாக வாழ்கிறான். ஆகவே மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் பாவத்தில் வீழ்வது பலவீனமாக இருந்தாலும், அதில் அப்படியே விழுந்து கிடக்காமால், மீண்டுமாக எழுந்து வரவேண்டும் என்பதுதான் இந்த உவமையானது நமக்குக் கற்றுத் தரும் பாடமாக இருக்கிறது.

யோவேல் புத்தகம் அதிகாரம் 2:12 ல் வாசிக்கின்றோம், “இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, என்னிடம் திரும்பி வாருங்கள் என்கிறார் ஆண்டவர்” என்று.

எனவே இந்த தவக்காலத்தில் நாம் நமது தவற்றை உணர்ந்து, ஊதாரி மகனைப் போன்று தந்தையிடம்/ தந்தைக் கடவுளிடம் திரும்பி வருவோம். அதன் வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைப் பெறுவோம்.

Comments are closed.