நற்செய்தி வாசக மறையுரை (மார்ச் 21)

தவக்காலம் இரண்டாம் வாரம்
வியாழ்க்கிழமை
லூக்கா 16: 19-31

அடுத்திருப்பவரை அன்பு செய்யாதவர் ஆண்டவரை அடையமுடியாது

நிகழ்வு

போலந்து நாட்டின் மதிப்புமிக்க தியாகியாகவும் தேசபக்தராகவும் கருதப்படுபவர் கோஸ்ஸியஸ்கோ என்பவர். இவர் அந்நாட்டின் ஜெனரலாக இருந்தபோது முக்கியமான ஒரு செய்தியைச் சொல்லிவர, வேறு எந்தக் குதிரையும் இல்லாததால், தனது குதிரையைக் கொடுத்து ஒரு வீரனை அனுப்பி வைத்தார். அந்த வீரன் ஜெனரலின் குதிரையில் சென்று செய்தியைச் சொல்லிவிட்டு வந்தான்.

அவன் குதிரையைவிட்டு இறங்கி அதை கோஸ்ஸியஸ்கோவிடம் ஒப்படைக்கும்போது, “அடுத்த முறை எனக்கு வேறொரு குதிரையைக் கொடுங்கள்” என்றான். அவர் அதற்கான காரணத்தைக் கேட்டபோது அவன், “செல்லும்வழியில், எங்கெல்லாம் ஏழைகள் வீடு இருந்தததோ, அங்கெல்லாம் இக்குதிரை நின்றுவிட்டது; பிச்சைக்காரரர்களைக் கண்டாலும் அப்படியேதான் செய்தது. இதனால் நீங்கள் சொல்லி அனுப்பிய செய்தியை சொல்லிவிட்டு, உடனடியாக என்னால் திரும்பிவர முடியவில்லை” என்றான். அந்தளவுக்கு கோஸ்ஸியஸ்கோ தன் குதிரையை ஏழை எளியவரைக் கண்டு இரங்கும் அளவுக்கு வளர்த்திருந்தார்.

ஏழை எளியவரைக் கண்டு இரங்கவேண்டும் என்று ஒரு குதிரைக்கு இருக்கும் உணர்வு, ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு இல்லாதது மிகவும் வருத்தத்திற்கு உரிய ஒரு காரியம்.

செல்வந்தரும் ஏழை லாசரும்

நற்செய்தி வாசகத்தில் இயேசு, ‘செல்வந்தவரும் ஏழை லாசரும்’ உவமையைக் குறித்துப் பேசுகின்றார். இவ்வுவமையில் வரும் ஏழைக்கு லாசர் என்று பெயர் இருக்க, செல்வந்தருக்குப் பெயர் இல்லாதது கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. ஏழை இலாசர் ஆண்டவர்மீது பற்றுக்கொண்டு வாழ்ந்தார். செல்வந்தவரோ தன் செல்வத்தின் பற்றுக்கொண்டு வாழ்ந்து வந்தார். அதனால்தான் ஏழை லாசருக்கு விண்ணகமும் செல்வந்தருக்குப் பாதாளமும் பரிசாகக் கிடைக்கின்றது.

உவமையில் வரும் செல்வந்தர் விலையுயர்ந்த ஆடை உடுத்தி, நாள்தோறும் விருந்துண்டு வாழ்ந்து வருகின்றார். மறுபக்கமோ ஏழை இலாசர் செல்வந்தரின் மேசையிலிருந்து விழும் சிறிசிறு துண்டுகளால் தன்னுடைய வயிற்றை நிரப்புகின்றார். ஏன் இப்படியொரு ஏற்றத்தாழ்வு என்பதற்கு விவிலிய அறிஞர்கள் சொல்கின்ற விளக்கம் இது: “யூத சமூகத்தில் இருந்த நிலம் படைத்தோர், ஏழு ஏழு ஆண்டுகள் கழித்து வரும் யூபிலி ஆண்டில் – ஐம்பதாம் ஆண்டில் – நிலத்தில் உழவோ, பயிர் செய்யவோ கூடாது. மாறாக அந்நிலத்தை அவர்கள் தங்களுக்குக்கீழ் வேலைபார்த்த கூலியாட்கள், அடிமைகள் போன்றோருடைய பயன்பாட்டிற்கு விட்டுவிடவேண்டும். ஒருவேளை அவர்கள் கடன்பட்டிருந்தால், அவர்களது கடன் அனைத்தையும் நிலம் வைத்திருக்கும் முதலாளிகள் தள்ளுபடி செய்யவேண்டும். இதுதான் வழக்கம் (லேவி 25). ஆனால், யூத சமூகத்தில் இருந்த நிலம் வைத்திருந்தோர் – வசதி படைத்தோர் – யூபிலி ஆண்டை முறையாகக் கடைபிடிக்கவில்லை. இதனால் செல்வர் மேலும் செல்வராகவும் ஏழைகள் மேலும் ஏழைகள் ஆனார்கள்”.

மேலும், ‘சமூகத்தில் உள்ள ஏழைகளைப் பராமரிக்கவேண்டும் (நீமொ 14:21), அப்படிப் பராமரிப்பவர் இன்பம் துய்ப்பர்’ என்று இறைவன் இஸ்ரயேல் மக்களுக்குத் தொடர்ந்து நினைவுவூட்டிக் கொண்டே இருந்தார். அதையும் யூத சமூகத்தில் இருந்த செல்வம் படைத்தோர் வசதியாக மறந்து போனார்கள். அதனால்தான் யூத சமூகத்தில் ஒருசாரார் வளமையாக வாழ்ந்ததற்கும் இன்னொரு சாரார் பட்டினியில் வாடியதும் காரணமாகும். நாம் வாழும் இந்த சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல.

பணத்தாசை/பொருளாசையோ எல்லாத் தீமைகளுக்கு ஆணிவேர்

உவமையில் வரும் செல்வந்தர் கடவுள் கொடுத்த கட்டளையை மறந்து, ஏன் கடவுளையே மறந்து பணத்திற்கும் பொருளுக்கும் அடிமையாகி வாழ்ந்ததால் இறந்தபிறகு பாதாளத்திற்குச் செல்கின்றார், ஏழை இலாசரோ ஆண்டவர்மீது மட்டும் பற்றுக் கொண்டு வாழ்ந்தால் அவர் ஆபிரகாமின் மடியில் இளைப்பாறுகின்றார். ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். செல்வந்தர், அவர் பணம் படைத்தவராக இருந்தார் என்பதற்காக பாதாளம் செல்லவில்லை. மாறாக, அவர் கடவுள்மீது நம்பிக்கை வைக்காமல், செல்வத்தின்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்ததனால் பாதாளம் செல்கின்றார். ஏழை இலாசர் ஏழையாக இருந்தார் என்பதற்காக விண்ணகம் செல்லவில்லை, மாறாக அவர் கடவுள்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்ததனால் விண்ணகம் செல்கின்றார். அதனால் ஒருவருடைய வாழ்வும் தாழ்வும் அவர் கடவுள்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையைப் பொறுத்து அமைகின்றது என்று உறுதியாகச் சொல்லலாம்.

சிந்தனை

‘காசு கண்ணை மறைத்தது’ என்று சொல்வார்கள் அல்லவா… அந்த நிலைதான் உவமையில் வரும் செல்வந்தருக்கு ஏற்பட்டது. தன்னிடமிருந்த செல்வந்தைக் கொண்டு, தன் வீட்டு வாயிலில் இருந்த ஏழைக்கு அவர் உதவியிருக்கலாம், குறைந்தது அவர் இலாசர்மீது இரக்கம் கொண்டிருக்கலாம். ஆனால், அவர் இரக்கம் கொள்ளவில்லை. அதனால்தான் அவருக்கு அப்படியொரு முடிவு ஏற்பட்டது.

ஆகவே, நம்மிடம் இருக்கும் வளங்களை, வசதி வாய்ப்புகளைக் கொண்டு நம்மோடு வாழும் ஏழை எளியவருக்கு உதவிசெய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

Comments are closed.