மார்ச் 16 : நற்செய்தி வாசகம்

உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 43-48

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: `உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக’, `பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.

ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.

இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்.

ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.

உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிதண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா?

நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?

ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————-
தவக்காலம் முதலாம் வாரம் சனி

மறையுரைச் சிந்தனை

பகைவருக்கு அன்பு

நம்முடைய இந்தியத் திருநாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற சாதுக்களில் ஒருவர் ஏக்நாத் என்பவர். மக்களிடம் அவர் அதிகமான செல்வாக்குப் பெற்றிருந்தார். அவருடைய வளர்ச்சியையும், புகழையும் பிடிக்காத ஒருசிலர் அவரிடம் நிறையக் குறைகள் உண்டு என்பதை நிரூபிப்பதற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். அதற்காக அவர்கள் ஒரு மனிதனை பணம்கொடுத்து ஏற்பாடு செய்து, அவரை சிக்கலில் மாட்டிவிட காத்துக் கொண்டிருந்தார்கள்.
ஏக்நாத் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்த உடன், அருகே ஒடக்கூடிய ஆற்றில் குளிக்கச் செல்வது வழக்கம். அதேபோன்று அன்றும் அவர் ஆற்றுக்குக் குளிக்கச் சென்றார்.

அவர் ஆற்றில் குளித்துவிட்டு, வெளியே வரும்போது அவருடைய எதிரிகள் ஏற்பாடு செய்துவைத்திருந்த மனிதர் சாதுவின் முகத்தில் காறித் துப்பினார். உடனே அவர் மறுபடியும் ஆற்றில்போய் குளித்துவிட்டு கரைக்கு வந்தார். அப்போதும் அந்த மனிதர் அவருடைய முகத்தில் காறி உமிழ்ந்தார். அவர் இப்படி ஆற்றில் குளித்துவிட்டு வருவதும், அந்த மனிதர் அவர்மீது காறி உமிழ்வதும் நடந்துகொண்டே இருந்தது. ஒருமுறை இரண்டுமுறை அல்ல ஏறக்குறைய நூற்று ஏழுமுறை. (நம்புவதற்கு மிகவும் கடினமாக இருக்கிறதா? ஆனால் அதுதான் உண்மை)

சாது நூற்று எட்டாம் முறை ஆற்றில் குளித்துவிட்டு கரையில் ஏறியபோது அம்மனிதர் தன்னுடைய தவறை உணர்ந்து அவருடைய காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். அத்தோடு அவர் கூலிக்காகத்தான் இவ்வாறு செய்தேன் என்று எல்லாவற்றையும் அவரிடம் சொன்னார். அதற்கு அவர், “நீ கூலிக்குதான் என்மீது காறி உமிழ்கிறாய் என்று தெரிந்தால், இன்னும் நீ பலமுறை என்மீது துப்ப அனுமதித்திருப்பேனே” என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்.

“இந்த நாள் என்னுடைய வாழ்வில் ஒரு நன்னாள். ஏனென்றால் இன்றைக்குத் தான் நான் நூற்றுஎட்டு முறை குளித்திருக்கிறேன். இப்படி நான் நூற்று எட்டு முறை குளிப்பதற்குக் காராணமாக இருந்த உனக்குத்தான் நான் நன்றி செலுத்தவேண்டும்” என்று சொல்லி, அவனுடைய தவறை மனதார மன்னித்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தார்.

“உங்கள் பகைவரிடமும் அன்பு கூறுங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்” என்ற ஆண்டவர் இயேசுவின் வார்த்தைக்கு அர்த்தம் தருவதாக இருக்கின்றது இந்த நிகழ்வு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு புதிய ஒரு கட்டளையைத் தருகிறார் அதுதான் பகைவருக்கு அன்பு என்னும் கட்டளை. வழக்கமாக யூதருடைய சட்டம் ‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக; பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ என்றுதான் இருந்தது. ஆனால் ஆண்டவர் இயேசுவோ, “பகைவரிடம் அன்பு செலுத்துங்கள், அவர்களுக்காக ஜெபியுங்கள்” என்னும் புதிய கட்டளையைத் தருகிறார்.

இதனால் பல்வேறு நன்மைகள் விளையும். அதில் முதலாவது வன்முறைகள் குறையும். நமக்குத் தீமை செய்கிறவனுக்கு நாமும் பதிலுக்குத் தீமைசெய்தால் வன்முறையும், கலகமும்தான் பெருகும். அதேநேரத்தில் நமக்கு எதிராகத் தீமை செய்கிறவரை மன்னிக்கிறபோது, அவரை முழுமையாக அன்பு செய்கிறபோது அங்கே அமைதி பெருகும். வெ. இறையன்பு என்ற எழுத்தாளர் கூறுவார், “நாம் அன்பு மயமாக மாறுகிறபோது, நம் எதிரே இருப்பவர்களும் அன்பு மயமாக மாறுவார்கள்; நாம் புன்னகைக்கிறபோது, எதிரே வருபவனும் புன்னகைத்தே தீருவான். அப்போதுதான், உலகம் முழுவதிலும் இருக்கின்ற வன்முறைகள், வன்மங்கள் குறையும்” என்று. ஆகவே நாம், நமக்கு எதிராக தீமை செய்வோரை மன்னித்து, அன்பு செய்யக் கற்றுக்கொள்வோம்.

இரண்டாவது நாம் நமக்கெதிராகத் தீமை செய்வோரை மன்னிகிறபோது விண்ணகத் தந்தையின் மக்களாகின்றோம். காரணம் கடவுள் நல்லோர்மீதும் தீயோர்மீதும் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர்மீதும், நேர்மையற்றோர்மீதும் மழை பொழியச் செய்கிறார்.

ஆகவே விண்ணகத் தந்தையின் அன்புப் பிள்ளைகளாக இருக்கும் நாம் நமக்கெதிராகத் தீமை செய்யும் மக்களை மன்னித்து, அன்பு செய்து வாழ்வும். இவ்வுலகில் பகையும், வெறுப்பும் மறைந்து அன்பு பெருக உழைப்போம். இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.