இயேசு சந்தித்த சோதனைகள் குறித்து மூவேளை செப உரை

மிகப்பெரும் வெற்றியைத் தருபவைகளாக உலகம் நம்முன் வைக்கும் கருத்துக்களே, இஞ்ஞாயிறு நற்செய்தியில் இயேசு சந்தித்ததாகக் கூறப்பட்டுள்ள மூன்று சோதனைகள் என்று இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 10ம் தேதி சிறப்பிக்கப்பட்ட தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரையில், 40 நாள்கள் உண்ணா நோன்பிருந்த இயேசுவிடம் தோன்றிய சாத்தான், கல்லை அப்பமாக மாற்றச் சொல்லி முன்வைத்த சோதனை, நம் பேராசையுடன் தொடர்புடையது என்று சுட்டிக்காட்டினார்.

கடவுளின் துணை இன்றியும், கடவுளுக்கு எதிராகச் சென்றும், நாம் வாழ்வில் நிறைவைக் காணமுடியும் என்று பல வேளைகளில் நம்மை நம்பவைக்க சாத்தான் எடுக்கும் முயற்சிகளையே இந்தச் சோதனை குறித்துக் காட்டுகிறது என்று எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சக்தியும், புகழ்ச்சியும் மிகுந்த மெசியாவாக மாறுவதற்கு, இயேசுவுக்கு முன்வைக்கப்பட்ட சோதனை, பணம், வெற்றி, மற்றும், அதிகாரம் என்ற பொய் தெய்வங்கள் முன் தலை வணங்குவதை குறிக்கின்றது என்றும் கூறிய திருத்தந்தை, இத்தகைய பொருளற்ற மகிழ்வுகள் கரைந்துபோகும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இயேசுவின் மூன்றாவது சோதனை குறித்து பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளை நம் சுய இலாபத்திற்காகப் பயன்படுத்த முனையும் இச்சோதனைக்கு இயேசு வழங்கிய பதில் வழியே, கடவுளின் முன் தாழ்ச்சியோடும், மன உறுதியோடும் செயல்படுவது, நம் வாழ்விற்கு சிறந்ததொரு பாடமாக உள்ளது என்று கூறினார்.

சாத்தான் இயேசுவின் முன் வைத்த இம்மூன்று சோதனைகளும், வெற்றியையும், மகிழ்வையும் வாக்களிக்கும் மாயைகள் மட்டுமல்ல, அவை நம்மை இறைவனிடமிருந்து பிரிக்கக்கூடியவை என்றும் வலியுறுத்திக்கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.