ஆண்டவரின் அழைப்புக்குப் பதிலளிப்பதில் துணிவு காட்டுங்கள்

கடவுளின் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைப்பதற்கும், அவர் அமைத்துள்ள பாதையில் பின்செல்வதற்கும், மனத்துணிவும், வீரமும் தேவைப்படுகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறையழைத்தல்களுக்காகச் செபிக்கும் உலக நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

‘கடவுளின் வாக்குறுதிகளுக்காக, சவால்களையும் எதிர்கொள்வதற்கு துணிவு கொள்ளுங்கள்’ என்ற தலைப்பில், வருகிற மே 12ம் தேதி சிறப்பிக்கப்படும், 56வது இறையழைத்தல் உலக நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள செய்தி, மார்ச் 09, இச்சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டது.

வாக்குறுதி, சவால் ஆகிய இரு சொற்களை மையப்படுத்தி இச்செய்தியை வழங்கியுள்ள திருத்தந்தை, ஆண்டவரின் அழைப்புக்கு காதுகேளாதவர்போல் இருக்காதீர்கள், மாறாக, அவர் அழைத்தால், அவர்மீது நம்பிக்கை வைத்து பின்செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகிய இரு உடன்பிறப்புகளை, தம் சீடர்களாக இயேசு அழைத்தது பற்றிச் சொல்லும் மாற்கு நற்செய்திப் பகுதியை (மாற்.1,16-20) மையப்படுத்தி தன் சிந்தனைகளை வழங்கியுள்ள திருத்தந்தை, ஆண்டவரின் அழைப்புக்குப் பதிலளிப்பது என்பது, பெரிய சவால்களைச் சந்திப்பதற்கு நம்மையே கையளிப்பதாகும் என்றும், நம் சிறிய படகோடு நம்மைக் கட்டியிருப்பவற்றையும், அறுதியான தெரிவு செய்வதலிருந்து நம்மைத் தடைசெய்பவற்றையும், பின்னுக்குத் தள்ளுவதற்குத் தயாராக இருப்பதாகும் என்றும் கூறியுள்ளார்.

ஒவ்வோர் அழைப்பும், வலைகளைக் கைகளில் வைத்துக்கொண்டு, கரையில் நிற்பதல்ல, மாறாக, இயேசு நமக்கென குறித்து வைத்துள்ள பாதையில் பின்செல்வதாகும் என்று கூறியுள்ள திருத்தந்தை, ஒருவரின் இறையழைப்பு, தனக்காக அல்ல, அது தனது சமுதாயம் மற்றும் கலாச்சாரங்களுக்குப் பணியாற்ற வேண்டியதாகும் என உரைத்துள்ளார்.

ஆண்டவரின் அழைப்பு, நம் சுதந்திரத்தில் அவர் தலையிடுவதாக இல்லை, மேலும், இந்த அழைப்பு நம்மை ஒரு கூண்டுக்குள் வைப்பதோ அல்லது சுமையானதோ அல்ல, மாறாக, இது, கடவுள் நம்மைச் சந்திப்பதற்கு எடுக்கும் அன்பின் முயற்சி என்றும், அவரது பணியில் நம்மை நாம் ஈடுபடுத்த வேண்டும் என்றும், திருத்தந்தையின் செய்தி கூறுதிறது.

நம் வாழ்வுக்கு ஆண்டவர் வைத்துள்ள திட்டத்தைக் கண்டுபிடிப்பதற்கு உதவும்படியாகவும், அவர் நமக்காகத் தேர்ந்தெடுத்துள்ள வாழ்வுப் பாதையில் தொடக்கமுதல் நடப்பதற்கு துணிவைத் தரும்படியாகவும், இந்த உலக நாளில் செபத்தில் இணைந்திருப்போம் என்று, தன் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

09 March 2019, 16:13

Comments are closed.