சாம்பல் புதனுக்குப் பின்வரும் 4-ம் நாள் தியானம்

நமதாண்டவராகிய சேசுகிறீஸ்துநாதர் ஜெத்சேமனி என்னும் தோட்டத்தில் பிரவேசிக்கிறார்.

1-ம் ஆயத்த சிந்தனை. – நமதாண்டவராகிய சேசுகிறீஸ்துநாதர் இராப்போசனத்துக்குப் பின் தமது அப்போஸ்தலர்களுக்குச் செய்யும் மதுரமான பிரசங்கத்தை நீ கேட்பதாகவும், அவர்களோடு ஒலிவேத்தென்னும் தோட்டத்துக்கு நடந்து போகிறதை நீ பார்” கிறதாகவும் ரூபிகரித்துக்கொள்.

2-ம் ஆயத்த சிந்தனை. – நீ தேவ வாக்கியங்களை வாசிக்கும் போதும் கேட்கும்போதும் மிகுந்த கவனத்தோடு வாசிக்கவும் கேட்கவும் சாங்கோபாங்க வழியில் மிகுந்த தைரியத்தோடு நீ அவரை மன்றாடுவாயாக.

தியானம்

சேசுநாதர் சுவாமி இவைகளைத் திருவுளம்பற்றினபின் தம்முடைய சீஷர்களோடு கெதிரோன் என்னும் வெள்ள வாய்க்காலுக்கு அப்பால் இருந்த பூங்காவனத்துக்கு விரைந்து போகிறதைத் தியானிப்பாயாக. ஆ! என் ஆத்துமமே, உனது இரட்சகர் இவ்வளவு வேகத்துடனே எங்கே நடந்துபோகிறாரென்று பார். உலக ஆரம்ப முதல் உலக முடியும் வரைக்கும் மனிதர்கள் தங்கள் பாவ அக்கிரமங்களால் சர்வேசுரனுடைய மகிமைக்கு வருவித்ததும், வருவிப்பதும் ஆகிய சகல நிந்தை அவமானங்களுக்கும் பரிகாரம் செய்யவும், மனிதர் இரட்சணியத்துக்காகப் பாடுபடத் தம்மை ஆயத்தம் செய்யவும் பூங்காவனத்துக்குப் போகிறாரென்று அறியக் கடவாய்.

நீ மெய்யாகவே அவருடைய சீடனாயிருப்பாயாகில் அவரைப் பின்செல்லு. அவர் நமது பாவங்களைத் தமது மேல் சுமந்துகொண்டு அவைகளுக்காக உத்தரிக்கப் போகிறார். இவ்வளவு தாராள குணமும் சிநேகமும் பொருந்திய சேசுக்கிறிஸ்துநாதருடைய திரு இருதயத்துக்கும் உன் இருதயத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கின்றது! “நமது பிதாவின் சித்தத்தை நிறைவேற்றப் போகிறோம். எழுந்து நம்மைப் பின்செல்லுங்கள்” என்று சொல்லும் அவருடைய மதுரமான வாக்கியங்களை உற்றுக் கேள். சர்வேசுரனை விசேஷவிதமாய்ச் சிநேகித்து அவரைப் பின்செல்ல வேண்டுமென்கிற உத்தம் கருத்துடன் சகலத்தையும் துறந்துவிட்டு வந்த நீ, தேவ ஊழியத்தில் இவ்வளவு அசமந்தமும் சோம்பலுமாய் இருப்பதற்குக் காரணமென்ன? உன் நடத்தை சாதாரண கிறீஸ்தவர்களின் நடத்தையைவிட அதிக துயரத்துக்குரியதாயிருக்கிறது.

இன்னமும் உன் சுயமனதை உரிந்துவிடாததே இதற்குக் காரணம். ஆகையால் உன் சுயமனதை ஒரு சத்துருவாக எண்ணி அதை முழுதும் அருவருத்துத் தள்ளி உனது சாங்கோபாங்க மார்க்கத்தில் நேரிடும் கஸ்தி துன்பங்களையும் சிறுமைகளையும் மிகுந்த பொறுமையுடன் அநுபவித்து அவைகளைக் குறித்து மனதில் கஸ்திப்படாமலும் அயலாரிடம் சொல்லி முறையிடாமலும் உன் உத்தம ஆசிரியருடைய திருவடியைப் பின்செல்லுவாயாக.
பின்பு அவர் தம்முடைய சீஷர்களோடு பூங்காவனத்தில் சேர்ந்தபோது அவர்களை நோக்கி “நாம் செபம்பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள்” என்கிறார். சேசுநாதர் செபத்துக்குத் தம்மை எப்படி ஆயத்தம் செய்கிறார் பார்

சேசுநாதர் இந்தப் பயங்கரமான வேலயைத் துவக்குகிறதற்கு முன் தேவ உதவியைக் கேட்கச் சித்தமானார் நாமும் நமதாண்டவருடைய மாதிரிகையைப் பின்பற்றிக் கஸ்தி வருத்தத்தால் சோதிக்கப்படும்போது மனிதருடைய ஆறுதலைத் தேடாமல், ஜெபம் மூலமாய்ச் சர்வேசுரனுடைய திருவடியைப் பின்செல்லுவோமாகில் முன்சொல்லப்பட்ட இக்கட்டு சோதனைகளைப் பொறுமையாய் அநுபவிப்பதற்கான சகாயங்களைச் சர்வேசுரன் நமக்குக் கட்டளையிடுவதுமன்றி, நமது சம்பாவனையையும் அதிகரிக்கச் செய்வார்

ஆண்டவர் இராப்போசனம் செய்த வீட்டிலேயேயிருந்து செபம் செய்யக் கூடுமாயிருந்தும் அவ்விடத்தில் வெகு பராக்குக்கு இடமாயிருக்குமென்று நினைத்து, மனித நடமாட்டமில்லாத இடத்தில் தனித்து ஒதுங்கச் சித்தமானார். நாமும் அவ்விதமே ஜனக் கும்பலான இடங்களை விட்டு தனிமையில் சர்வேசுரனைத் தேடக்கடவோம். இந்தப் பெரும் சோதனை காலத்தில் தமது மிக்க பிரமாணிக்கமான சிநேகிதர்களாகிய அப்போஸ்தலர்களோடு தமது கஸ்தியைச் சொல்லி ஆறுதலடைய மனமில்லாமல் “நாம் செபம் பண்ணுமளவும் இங்கே காத்திருங்கள்” என்கிறார். நாம் செபம் செய்யும் விதம் எப்படிப்பட்டதென்று பார்ப்போம். நாம் வாயால் செபம் செய்த போதிலும் அநேகாநேகம் முறை வீண் கவலைக்கும் உலக சிந்தனைகளுக்கும் இடங்கொடுத்து செபத்தில் நாம் கேட்கும் நன்மைகளை அடையாமல் போகிறோம். நீ செபம் சய ஆரம்பிக்கும் போது செபம் பண்ணுமட்டும் இங்கே காத்திருங்கள் என்று சொன்ன வாக்கியத்தை மனதில் வைத்துக் கொண்டு நமது வியர்த்த கவலை வீண் பராக்குகளைப் பார்த்து “நீங்கள் நான் செபம் செய்யுமட்டும் என்கிட்ட வராமல் இருங்கள்” என்று சொல்லப் பழகுவோமாக -ஆமென்

ஜெபம்

ஆண்டவராகிய சேசுக்கிறிஸ்துவே, உமது கசப்பான திருப்பாடுகளின் நேரத்தில் வியாகுல வாளால் தன் மகா பரிசுத்த ஆத்துமத்தில் ஊடுருவப்பட்ட உமது திருத்தாயாராகிய மகா பரிசுத்த கன்னிமாமரி, உமது கிருபாசனத்திற்கு முன்பாக, இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் எங்களுக்காகப் பரிந்து பேச வரமருளும்படி உம்மை மன்றாடுகிறோம். பிதாவோடும், இஸ்பிரீத்து சாந்துவோடும் சதாகாலமும் ஜீவிக்கிறவரும் இராச்சியபாரம் பண்ணுகிறவருமான உலக இரட்சகருமாகிய உம் வழியாக இந்த வரத்தை மன்றாடிக் கேட்கிறோம். ஆமென்.

பரிசுத்த திருக்குடும்பமே எங்களை புண்ணிய வாழ்வு வாழ வழிநடத்துங்கள்

ஆமென்

சேசு கிறிஸ்துவில் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே தொடர்ந்து இந்த தவக்கால நாட்கள் தியானம் ஒவ்வொரு நாளும் பதிவு செய்யப்படும் இந்த தியானங்களை பக்தியோடு தியானித்து நம் வாழ்வை மாற்றுவோம் – ஆமென்

Comments are closed.