நற்செய்தி வாசக மறையுரை (மார்ச் 04)

பொதுக்காலம் எட்டாம் வாரம்
திங்கட்கிழமை
மாற்கு 10: 17-27

நிலைவாழ்வும் செல்வமும்

நிகழ்வு

இளைஞர் ஒருவர் இருந்தார். அவருக்கு, தன்னுடைய வாழ்வில் பணத்திற்கு என்ன இடம் கொடுக்கவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள நீண்ட நாள் ஆசை.

ஒருநாள் அந்த இளைஞன் அறிஞர் ஒருவரைச் சந்தித்து, “மனித வாழ்வில் பணத்துக்கு என்ன இடம் கொடுக்கவேண்டும்?” என்று கேட்டார். “பணத்துக்கு நீங்கள் இரண்டு இடங்களைக் கொடுக்க வேண்டும். பணம் சம்பாதிக்கும் உத்திகளை அறிய, மூளையில் இடம் கொடுக்க வேண்டும்… மற்றவர்களுக்குப் பணம் கொடுத்து உதவுகிற வேலையை இதயத்திடம் விட்டுவிட வேண்டும். ஈட்டுவது மூளையின் வேலை. கொடுப்பது இதயத்தின் வேலை. அவ்வளவுதான்” என்றார் அந்த அறிஞர்.

எவ்வளவு அற்புதமான வார்த்தைகள் இவை. பல நேரங்களில் மூளையின் வேலையான பணத்தை எப்படி பணத்தைச் சம்பாதிப்பது எப்படி என்பதை நன்கு அறிந்திருக்கின்ற நாம், இதயத்தின் வேலையான பணத்தைப் பிறருக்குக் கொடுத்து உதவுகிற வேலையை வசதியாய் மறந்துபோய்விடுகின்றோம். இத்தகைய சூழ்நிலையில், நாம் ஈட்டிய பணத்தை பிறருக்குக் கொடுத்து உதவுவதன்மூலம் எப்படி நிலைவாழ்வை உரிமையாக்கலாம் என்பதை இறைவார்த்தை எடுத்துச் சொல்கிறது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

நிலைவாழ்வு பெற விரும்பிய செல்வந்தர்

நற்செய்தியில், இயேசு எருசலேம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது அவரை வந்து சந்தித்த (செல்வந்தர்) ஒருவர், “நல்ல போதகரே, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்கின்றார். இங்கு அந்த செல்வந்தர் பேசிய ஒவ்வொருவரு வார்த்தையும் கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. அவர் இயேசுவைப் பார்த்து, “நல்ல போதகரே!” என்கின்றார். யூத இரபிக்கள் யாரும் தங்களை ‘நல்லவர்’ என பிறர் அழைப்பதை விரும்புவதில்லை. கடவுள் ஒருவர்தான் நல்லவர் என்பது அவர்களுடைய எண்ணம். இயேசுவும் தன்னிடம் வந்த செல்வந்தர், அவரை நல்லவர் என்று சொன்னபோது, “கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே” என்கின்றார். இயேசு இப்படிச் சொல்வதால், அவர் கெட்டவர் என்று ஆகிவிடாது… கடவுள் ஒருவரே நல்லவர் என்பதை நிரூபிப்பதற்காக அப்படிச் சொல்கிறார்.

செல்வந்தர் இயேசுவை ‘நல்லவர்’ என்று புகழ்ந்து, அவருடைய கவனத்தை ஈர்க்க நினைத்தார். ஆனால், இயேசவோ அதற்கு மசியாமல், “நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள, உமக்குக் கட்டளைகள் தெரியுமல்ல?” என்கின்றார்.

நல்லவர் போன்று காட்டிக்கொண்ட செல்வந்தர்

இயேசு அந்த செல்வந்தரிடம், “உமக்குக் கட்டளைகள் தெரியுமல்லவா?” என்று சொல்லிவிட்டு, மோசேயின் கட்டளைகளை எடுத்துச் சொன்னபோது, “இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்” என்கின்றார். இவர் இயேசுவிடம் சொன்ன வார்த்தைகள் உன்மைதானா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இவர் செல்வந்தர் என்றும் இவரிடம் ஏராளமான சொத்து இருந்தது என்றும் நற்செய்தி வாசகம் எடுத்துக் கூறுகின்றது. இப்படிப்பட்டவர் மோசேயின் கட்டளைகளுள் ஒன்றான, ‘வஞ்சித்துப் பறிக்காதே’ என்ற கட்டளையை அவருடைய இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளதாகச் சொல்கின்றார். பிறருடைய உடைமையை வஞ்சித்துப் பறிக்காத ஒருவரிடம் எப்படி ஏராளமான சொத்து வந்தது என்று தெரியவில்லை!. ஏராளமான சொத்து வைத்திருக்கின்ற ஒருவர் எப்படி பிறரை வஞ்சித்துப் பறிக்காமல் இருந்திருப்பார்? என்பதுதான் முரணாக இருக்கின்றது. இது மக்கள் பார்வைக்குத் தன்னை நேர்மையாளர் என்றும் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறேன் என்றும் காட்டுக்கொள்வதாக இருக்கின்றது.

தம்மிடம் உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடுக்க யோசித்த செல்வந்தர்

செல்வந்தர் வெளித்தோற்றத்திற்குத்தான் கட்டளைகளைக் கடைபிடிப்பதாகச் சொல்கிறார் என்பதை அறிந்த இயேசு, அவருக்கு இன்னொரு வாய்ப்புத் தருகிறார். அதாவது அவரிடம் உள்ளத்தை விற்று ஏழைகளுக்குத் தரச் சொல்கிறார். ஆனால், அவர் பணத்தின்மீது அளவு கடந்த பற்றிக் கொண்டிருந்ததால், அவரால் அவரிடமிருந்த பணத்தை விற்று ஏழைகளுக்குக் கொடுக்க முடியாதவாறு இருக்கின்றார். இவ்வாறு அவரிடம் இருந்த பணமே, அவர் நிலைவாழ்வைப் பெற மிகப்பெரிய தடையாய் அமைந்துவிடுகின்றது.

தூய பவுல் திமொத்தேயுவுக்கு எழுதியை மடலில் கூறுவார், “பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் காரணம்.” (1திமொ 6:10) இயேசுவிடம் வந்த செல்வந்தவரிடம் இருந்த பொருளாசை, பணத்தாசை அவர் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள மிகப்பெரிய தடையாய் அமைந்துவிடுகின்றது. இந்நிலையில் நாம் யாரின்மீது அல்லது எந்தமீது பற்றுக்கொண்டு வாழ்கின்றோம் என்பது சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒரு கேள்வியாக இருக்கின்றது.

Comments are closed.