மார்ச் 7ம் தேதி திருத்தந்தை வழிநடத்தும் மன்னிப்பு வழிபாடு

ஆன்ம ஆய்வையும் மனமாற்றத்தையும் இணைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை வழங்கிய மறையுரையின் தொடர்ச்சியாக, இவ்விரு எண்ணங்களையும் வலியுறுத்தும் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

“ஒவ்வொரு நாளும் ஆன்ம ஆய்வுக்கென சிறிது நேரம் ஒதுக்குவோம். அடுத்த நாள் செய்வோம் என்று தள்ளிப்போடாமல், ஒவ்வொரு நாளின் இறுதியிலும் ஐந்து நிமிடங்கள் செலவழிப்பது, ஆண்டவரை நோக்கி மனம் மாறுவதற்கு உதவும்” என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், மார்ச் 7, வருகிற வியாழனன்று, காலை 9.30 மணிக்கு, புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா பேராலயத்தில், உரோம் மறைமாவட்டத்தின் அருள்பணியாளர்கள் மற்றும் தியாக்கோன்கள் அனைவரோடும் இணைந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு மன்னிப்பு வழிபாட்டை மேற்கொள்வார் என்று இம்மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

திருத்தந்தை முன்னின்று நடத்தும் இந்த மன்னிப்பு வழிபாட்டில் அனைத்து அருள் பணியாளர்கள் மற்றும் தியாக்கோன்கள் கலந்துகொள்ளுமாறு, திருத்தந்தையின் சார்பில் உரோம் ஆயராகப் பணியாற்றும் கர்தினால் ஆஞ்செலோ தே தொனாத்திஸ் (Angelo De Donatis) அவர்கள், மறைமாவட்ட வலைத்தளத்தில் அழைப்பு மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Comments are closed.