மரண தண்டனையை எதிர்க்கும் 7வது உலக மாநாடு

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகமாகவும், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உறைவிடமாகவும் இருக்கும் பிரஸ்ஸல்ஸ் (Brussels) நகரில், மரண தண்டனையை எதிர்க்கும் 7வது உலக மாநாடு, பிப்ரவரி 26, இச்செவ்வாய் முதல், மார்ச் முதல் தேதி, வெள்ளிக்கிழமை முடிய நடைபெறுகிறது.

“மரண தண்டனை ஒழிப்பு தன்னிலே தெளிவானது என்பதை அனைவருக்கும் உணர்த்த” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காணொளிச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

கண்டங்களையும், கலாச்சாரங்களையும் தாண்டி, அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு, மரண தண்டனையை, மனித குலத்திலிருந்து அகற்றுவது முக்கியம் என்பதை, இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் வலியுறுத்தி வந்துள்ளனர்.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாநாட்டில், 2013ம் ஆண்டு மத்ரித் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களும், 2016ம் ஆண்டு, ஒஸ்லோ நகரில் நடைபெற்ற கூட்டத்தில், மனித உரிமை நிறுவனங்களும், தற்போது நடைபெறும் கூட்டத்தில் வர்த்தக நிறுவனங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன என்று மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

மரண தண்டனையைத் தடைசெய்வது குறித்து, ஐ.நா. அவையில் வாக்கெடுப்பு நிகழ்ந்த வேளையில், இந்த தண்டனையை நிறுத்தி வைப்பதற்கு, உலக நாடுகளில், மூன்றில் இரண்டு பகுதியினர் ஒப்புதல் தெரிவித்தது, இந்த தண்டனை, தன்னிலேயே தவறானது என்பதை உணர்த்துகிறது என்று, இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மரண தண்டனைக்கு எதிரான உலக மாநாடு, கடந்த 18 ஆண்டுகளாக, இந்த தண்டனையை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளைத் தடைசெய்து வந்துள்ளதுபோல், தற்போது, இந்த தண்டனையை, நாடுகளின் சட்டங்களிலிருந்து அகற்றும் முயற்சிகளைத் துவங்கியுள்ளது என்று, இந்த மாநாட்டின் செய்திக் குறிப்பு கூறியுள்ளது.

Comments are closed.