பிப்ரவரி 26 : நற்செய்தி வாசகம்

ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால், அவர் அனைவரிலும் கடையராக இருக்கட்டும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 30-37

அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் மலையை விட்டுப் புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள்.

அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஏனெனில், “மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்” என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார்.

அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள். அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள்.

அவர்கள் வீட்டில் இருந்தபொழுது இயேசு, “வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார்.

அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக்கொண்டு வந்தார்கள்.

அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்றார்.

பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, “இத்தகைய சிறு பிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

Comments are closed.