காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கதறலால் கலங்கியது கிளிநொச்சி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்  கவனத்தை ஈர்க்கும் நோக்குடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் இன்று காலை, பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம்  அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதை வெளிப்படுத்தியும், தமக்கு இன்னமும் நீதி வழங்கப்படாததைக் கண்டித்தும், சிறிலங்காவுக்கு மேலும்  கால அவகாசம் வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும்,  இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.30 மணியளவில், கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றல் மற்றும், ஏ-9 வீதியில் ஒன்று கூடிய, வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள், கணவன், மற்றும் உறவுகளின் படங்களையும், பதாதைகளையும் தாங்கியவாறு, கண்ணீருடன் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

“அரசே பதில் சொல்” ,  “சர்வதேசமே நீதியை வழங்கு” , “ காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே?” , “ இராணுவமே , ஒட்டுக் குழுக்களே பதில் கூறுங்கள்” , “ சர்வதேசமே நீதியை நிலைநாட்டு” , “ எனது அப்பா எங்கே? எனக்கு அப்பா வேண்டும்”, “ நீதி தேவதையே எமக்கு நீதி வேண்டும்” , “  போதும் போதும் இனியும் எம்மை ஏமாற்றாதே”, “ விசாரணைகளை முன்னெடுக்காமல் காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகம் என்ன செய்கிறது?”, “புதைத்தது யார்? புதைக்கப் பட்டது யார்? அரசே பதில் கூறு” போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும், கடும் வெயிலின் மத்தியிலும்  ஏ-9  வீதியில் அமர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதையடுத்து, போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள், பேரணியாகப் புறப்பட்டுச் சென்று, கிளிநொச்சி 155 ஆம் கட்டையில் உள்ள ஐ.நாவின் பணியகத்தில் மனுவொன்றைக் கையளித்தனர்.

இந்தப் போராட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், நாடாளுமன்ற, உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதகுருமார், பொதுமக்கள் என பெருந்தொகையானோர் பங்கேற்றனர்.

Comments are closed.