சிறியோர் நீதி கேட்டு எழுப்பும் அழுகுரலைக் கேட்போமாக

திருஅவையின் உறுப்பினர்களால் உருவான பாலியல் முறைகேடுகள் என்ற காயத்தினால் பாதிக்கப்பட்ட சிறியோர், நீதி கேட்டு எழுப்பும் அழுகுரலைக் கேட்க, நாம் இங்கு கூடியிருக்கிறோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலையில் வழங்கிய ஓர் அறிமுக உரையில் கூறினார்.

திருத்தந்தையின் துவக்க உரை

“திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு” என்ற தலைப்பில், பிப்ரவரி 21, இவ்வியாழன் முதல் 24, இஞ்ஞாயிறு முடிய வத்திக்கானில் நடைபெறும் ஒரு முக்கிய கூட்டத்தின் துவக்க அமர்வு, ஆயர்கள் மாமன்ற அரங்கத்தில், இவ்வியாழன் காலை, 9 மணிக்குத் துவங்கியது.

இந்த அமர்வில் துவக்க உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் காயமாக விளங்கும் பாலியல் முறைகேடுகளைக் குறித்து கலந்துபேச கூடியிருக்கும் முதுபெரும் தந்தையர், கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள், துறவு சபைத் தலைவர்கள் மற்றும் ஏனையப் பொறுப்பாளர்கள் அனைவரும், தூய ஆவியாரின் தூண்டுதலுக்கும், சிறியோரின் குரலுக்கும் செவிமடுக்குமாறு அழைப்பு விடுத்தார்.

ஒளிவு மறைவற்ற, துணிவுள்ள பகிர்வுகள்

நம்பிக்கையுடன் நாம் துவங்கியுள்ள இந்த முயற்சியில், ஒளிவு மறைவு ஏதுமின்றி, துணிவுடன், நடைமுறைக்குத் தகுந்த உறுதியான முறையில் செயல்படவேண்டுமென திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

உலகெங்கிலிருமிருந்து ஆயர் பேரவைகள் அனுப்பிய ஆலோசனைகளில் கூறப்பட்டுள்ள அடிப்படை அளவுகோல்களை தங்கள் வழிகாட்டிகளாகப் பயன்படுத்தி சிந்திக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவரிடமும் விண்ணப்பித்தார்.

தயாரிப்பு முயற்சிகளை மேற்கொண்டவர்களுக்கு நன்றி

இந்த முக்கியமான கூட்டத்தின் தயாரிப்பு முயற்சிகளை மேற்கொண்ட சிறியோரின் பாதுகாப்பு திருப்பீட அவை, விசுவாசக் கோட்பாட்டு பேராயம், மற்றும் இச்சந்திப்பினை ஒருங்கிணைக்கும் குழு அனைத்திற்கும் தன் நன்றியை வெளிப்படுத்தியத் திருத்தந்தை, தூய ஆவியார் மற்றும் அன்னை மரியா ஆகியோரின் துணையை வேண்டி, தன் உரையை நிறைவு செய்தார்.

உலகெங்கிலும் உள்ள 114 ஆயர் பேரவைகளின் தலைவர்கள், இருபால் துறவு சபைகளின் உலகத் தலைவர்கள் 22 பேர், திருப்பீடத்தின் உயர் அதிகாரிகள் 14 பேர், மற்றும் திருத்தந்தையால் சிறப்பான அழைப்பு பெற்றோர் என, 190 பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இந்த முக்கியமான கூட்டம், பிப்ரவரி 24 ஞாயிறன்று காலை திருப்பலியுடன் நிறைவு பெறும்.

Comments are closed.