அருளாளரான கர்தினால் நியூமன் பரிந்துரையால் புதுமை

அருளாளரான கர்தினால் ஜான் ஹென்றி நியூமன், மற்றும் அருளாளரான அருள் சகோதரி மரியம் தெரேசியா சிரமேல் மங்கிடியான் ஆகிய இருவரின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமைகளை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விருவரையும் புனிதராக உயர்த்தும் வழிமுறைகளுக்கு ஒப்புதல் வழங்கினார்.

புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ பெச்சு அவர்கள், பிப்ரவரி 12, இச்செவ்வாய் மாலை திருத்தந்தையைச் சந்தித்து, இரு அருளாளர்களின் பரிந்துரையால் நிகழ்ந்துள்ள புதுமைகளையும், வேறு 6 இறையடியாரின் புண்ணியத்துவ வாழ்வைக் குறித்தும் அளித்த விவரங்களை திருத்தந்தை ஏற்றுக்கொண்டார்.

1801ம் ஆண்டு, இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் பிறந்த ஹென்றி நியூமன் அவர்கள், ஆங்கிலிக்கன் சபையில் குருவாகப் பணியாற்றி, பின்னர் கத்தோலிக்கத் திருமறையைத் தழுவி, அங்கு அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

நியூமன் அவர்களின் அரிய பணிகளைப் பாராட்டும் வகையில், 1879ம் ஆண்டு, திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், அவரை ஒரு கர்தினாலாக உயர்த்தினார். 1890ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி இறையடி சேர்ந்த கர்தினால் நியூமன் அவர்களின் பரிந்துரையால் நிகழ்ந்த ஒரு புதுமையை ஏற்றுக்கொண்ட, முன்னாள் திருத்தந்தை, 16ம் பெனடிக்ட் அவர்கள், 2010ம் ஆண்டு, செப்டம்பர் 19ம் தேதி அவரை அருளாளராக உயர்த்தினார்.

அருளாளர் நியூமன் அவர்களின் பரிந்துரையால் நிகழ்ந்துள்ள மற்றொரு புதுமையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டதால், அருளாளர் நியூமன் அவர்கள் புனிதராக உயர்த்தப்பட தகுதியானவர் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

1876ம் ஆண்டு இந்தியாவின், கேரள மாநிலத்தில், புத்தென்சிரா என்ற ஊரில் பிறந்த மரியம் தெரேசியா அவர்கள், திருக்குடும்ப அருள் சகோதரிகள் துறவு சபையை நிறுவி, 1926ம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

இவரது பரிந்துரையால் நிகழ்ந்த முதல் புதுமை ஏற்றுக்கொள்ளப்பட்டதால், 2000மாம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், இவரை அருளாளராக உயர்த்தினார்.

இவ்விருவருடன், ஈக்குவதோர் நாட்டில் மறைசாட்சியாக உயிர் துறந்த இயேசு சபை அருள்பணியாளரும், இறையடியாருமான Salvatore Vittorio Emilio Moscoso Cárdenas, ஸ்பெயின் நாட்டு இயேசு சபை அருள்பணியாளரும் இறையடியாருமான Emanuele García Nieto ஆகியோரின் புண்ணியம் மிகுந்த பண்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், ஹங்கேரி நாட்டின் கர்தினால் Joseph Mindszenty, இத்தாலியின் மறைமாவட்ட அருள்பணியாளர் Giovanni Battista Zuaboni, நற்செய்தியின் மறைபரப்புப்பணியாளர் அருள் சகோதரிகள் சபையை நிறுவிய அருள் சகோதரி Serafina Formai, கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின் அருள் சகோதரிகள் சபையை உருவாக்கிய அருள் சகோதரி Maria Berenice Duque Hencker ஆகிய இறையடியார்களின் புண்ணியம் மிகுந்த பண்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளன.

Comments are closed.