நற்செய்தி வாசக மறையுரை (பிப்ரவரி 12)

பொதுக்காலம் ஐந்தாம் வாரம்

செவ்வாய்க்கிழமை

மாற்கு 7: 1-13

குற்றம் காணுதல் என்னும் மனநோய்

நிகழ்வு

அது ஒரு கலைக்கல்லூரி. அக்கல்லூரியில் சிறுவயதிலிருந்தே ஓவியத்தின் மேல் உயிரை வைத்திருந்த ஒரு மாணவன் படித்து வந்தான். ஒருநாள் அவன் ஓவியம் ஒன்றை வரைந்து, கல்லூரி வரவேற்பறையில் பொருத்தமான ஓரிடத்தில் மற்றவர்களின் காட்சிக்கு வைத்தான். கூடவே அந்த ஓவியத்துக்குப் பக்கத்தில் ஒரு குறிப்பையும் எழுதிவைத்தான். “இந்த ஓவியத்தில் நீங்கள் ஏதாவது குறையைக் கண்டுபிடித்தால், அந்த இடத்தில் கறுப்பு நிறத்தில் வட்டமிடவும்” என்பதுதான் அந்தக் குறிப்பு.

அன்று மதியத்திற்குமேல் காட்சிக்குவைத்திருந்த தன்னுடைய ஓவியத்தைப் பார்க்க ஆவலோடு போனான். போனவன் அப்படியே அதிர்ந்துபோனான். காரணம் அவனுடைய ஓவியம் முழுக்க கறுப்பு நிற வட்டங்கள் இருந்தன. இதைக்கண்டு அவன் சோர்ந்து போனான். பின்னர் அவன் அந்த ஓவியத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு சற்று தூரத்திலிருந்த கடற்கரைக்குப் போனான். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கடலையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

அப்பொழுது யாரோ ஒருவர் அவனுடைய தோளைத் தொடுவது போல் இருந்தது. திரும்பிப் பார்த்தவன் பதறியவனாக எழுந்தான். காரணம், அவனுக்கு முன்னால், அவனுடைய பேராசிரியர் நின்றுகொண்டிருந்தார். “என்னப்பா… இங்கு வந்து இப்படித் தனியாக உட்கார்ந்து என்ன செய்துகொண்டிருக்கின்றாய்?” என்று கேட்டார். அந்த மாணவன் கண்கலங்கியவனாக நடந்ததைச் சொன்னான். “இதற்காகவா இவ்வளவு கவலைப்படுகிறாய்… இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை… நான் சொல்வதுபோன்று செய்வாயா?’’ என்றார் பேராசியர். அவனும் தயக்கத்தோடு “சரி’’ என்றான். பேராசிரியர் அந்த யோசனையைச் சொன்னார்.

அன்றிரவே அவன் தன் வீட்டிற்குச் சென்று ஓர் அழகான ஓவியத்தை வரைந்தான். மறுநாள் காலை அதை எடுத்துக்கொண்டு சென்று கல்லூரியின் வரவேற்பறையில் காட்சிக்கு வைத்தான். இந்த முறையும் ஒரு குறிப்பை எழுதிவைத்தான். ஆனால், அந்தப் பேராசிரியர் சொன்னபடி “இந்த ஓவியத்தில் நீங்கள் எதையாவது குற்றம் கண்டுபிடித்தால் அதைச் சரிசெய்யவும்” என்று எழுதி வைத்தான்.

அன்று மதியத்திற்குமேல் தான் வைத்திருந்த ஓவியம் இருந்த இடத்துக்குப் போனான். அவன் ஓவியத்தில் ஒரு திருத்தமும் இல்லை. அவன் எப்படி வைத்துவிட்டுப் போயிருந்தானோ, அப்படியே அது இருந்தது. அதைப் பார்த்துவிட்டு ஆச்சரியம் தாங்க முடியாமல், நேராக அந்தப் பேராசிரியர் இருந்த அறைக்குப் போனான். “ஐயா! நீங்கள் சொன்னபடியே செய்தேன்…. இந்த முறை யாரும் எந்தத் திருத்தமும் செய்யலை’’ என்று விஷயத்தைச் சொன்னான். அவன் சொன்னதைப் பொறுமையாகக் கேட்ட பேராசிரியர், “அது ஒன்றுமில்லை… ஒருவர் செய்யும் வேலையில் மற்றவர் எளிதாகக் குற்றம் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், அதைச் சரி செய்ய ஒருவரும் வரமாட்டார்கள். அதுதான் உன்னுடைய விஷயத்திலும் நடந்தது” என்றார்.

அடுத்தவரிடம் அல்லது அடுத்தவர் செய்யும் செயலில் குற்றம் கண்டுபிடிப்பதற்கு மக்கள் எப்படித் துடியாய் துடிக்கிறார்கள் என்பதை இந்த நிகழ்வானது பதிவுசெய்கின்றது.

மூதாதையர் மரபை மீறியதாக இயேசுவின் சீடர்கள்மீது குற்றம் சுமத்திய பரிசேயக்கூட்டம்

நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் சீடர்கள் கை கழுவாமல் உண்டதைப் பார்த்த பரிசேயர்களும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர்களும் அவர்கள்மீது மூதாதையர் மரபை மீறிவிட்டதாகக் குற்றம் சுமத்துகிறார்கள். கை கழுவாமல் உண்டதை மிகப் பெரிய குற்றம்போல் பார்த்த இந்த பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞர்கள், எதற்காக இப்படிக் குற்றம் காணும் மனிதர்காக இருந்தார்கள் என்று என்று தெரிந்துகொள்வது நல்லது.

இரண்டு காரணங்கள்

இயேசு தன்னுடைய பணிவாழ்வில் பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞர்களின் அதிகாரத்தைத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருந்தார். இதனால் அவர்கள் இயேசுவின்மீதும் அவருடைய சீடர்கள் மீதும் குற்றம் காணத் தொடங்கினார்கள். இதைவிட மிக முக்கியமான காரணம், பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் எப்போதும் மற்றவர்களை விடத் தங்களை ‘விஷேசமானவர்களாகக்’ (Special) காட்டிக்கொள்ள விரும்பினார்கள். அதற்கு அவர்களுக்கு இதுபோன்றே மூதாதையர்களின் மரபுகள் தேவைப்பட்டன. இதுபோன்ற மரபுகளினால் மக்களுக்கு நன்மை எதுவும் விளையவில்லை. ஆனால் அவற்றைக்கொண்டு மக்களை ஒடுக்கினார்கள் (மத் 23:4). அதே மரபுகளைக் கொண்டுதான் நற்செய்தியிலும் அவர்கள் இயேசுவின் சீடர்களை ஒடுக்குகிறார்கள்; தங்களைப் பெரியவர்கள் போன்று காட்டிக்கொள்கிறார்கள். இதைப் பார்த்துவிட்டுத்தான் இயேசு அவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார்.

சிந்தனை

‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்பது அவ்வையின் வாக்கு. நாம் பிறரிடத்தில் குற்றம் மட்டுமே கண்டுகொண்டிருக்கமால், இயேசுவைப் போன்று பெருந்தன்மையோடு நல்லதைப் பார்ப்போம். அதைவிடவும் நல்லதைப் பாராட்டுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.