நற்செய்தி வாசக மறையுரை (பிப்ரவரி 09)

பொதுக்காலம் நான்காம் வாரம்

சனிக்கிழமை

மாற்கு 6: 30-34

சற்று ஓய்வெடுங்கள்

நிகழ்வு

கிரேக்க நாட்டிலுள்ள ஏதென்ஸ் நகரில் பிறந்தவர் ஈசாப். இவர் மிகச் சிறந்த கதை சொல்லியும்கூட.

ஒரு சமயம் இவர் தெருவில் இருந்த சிறுவர்களோடு கோலிக்குன்டு விளையாடிக்கொண்டிருந்தார். இதை அந்த வழியாகப் வந்த, அவருக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் பார்த்துவிட்டு அவரைத் தனியாகக் கூப்பிட்டு, “ஈசாப்! நீங்கள் எவ்வளவு பெரிய ஆள்… அப்படிப்பட்ட நீங்கள் இந்த சிறுவர்களோடு இப்படிக் கோலிக்குண்டு விளையாண்டு கொண்டிருக்கின்றீர்களே! இது உங்களுக்கு நன்றாக இருக்கின்றதா?” என்றார்.

அவர் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட ஈசாப், அருகில் கிடந்த வில்லை எடுத்து, “இந்த வில் இருக்கின்றதே, இதை இதிலுள்ள நாணை – கயிற்றைத் – தளர்வாக வைக்காமல் இறுக்கமாக வைத்தால் என்னாகும்?… விரைவிலே இது பயன்படுத்த முடியாமல் போய்விடும்தானே… அதுபோன்றுதான் நாமும். எப்போதும் வேலை வேலை என்று இறுக்கமாக இருந்தால் வாழ்க்கை சுவாரஷ்யமில்லாமல் போய்விடும். வாழ்க்கை மிகவும் சந்தோசமாகமாகவும் சுவாரஷ்யமாவும் இருக்கவேண்டும் என்றால், அவ்வப்போது நாம் நம்முடைய உடலுக்கு ஓய்வுகொடுத்து, உள்ளத்தை இலகுவாக வைத்திருக்கும் இதுபோன்றே காரியங்களில் ஈடுபடவேண்டும்” என்றார்.

எப்போதும் வேலை வேலை என்று இருக்காமல், அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொண்டு, செயல்பட்டால் பணியை இன்னும் சிறப்பாகச் செய்யலாம். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களை ஓய்வெடுக்கச் சொல்கின்றார். இயேசு தன்னுடைய சீடர்களிடம் இவ்வாறு சொன்னதன் நோக்கம் என்ன?, இதன் பின்னணி என்ன? என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

சற்று ஓய்வெடுங்கள்

பணித்தளங்களுக்குச் சென்ற சீடர்கள் இயேசுவிடம் திரும்பி வருகின்றார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்து, தாங்கள் செய்ததையும் கற்பித்தவற்றையும் எடுத்துச் சொல்கிறார்கள். அப்பொழுது அவர் அவர்களிடம், “நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்” என்கின்றார். பணிசெய்து களைப்புற்றிருந்த சீடர்களிடம் மேலும் பணிகளை ஏவாமல், அவர்களை ஓய்வெடுக்கச் சொன்னது இயேசுவின் பரிவுள்ளத்தை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. பொறுப்பில் உள்ளவர்கள் தங்களுக்குக் கீழ் பணிசெய்யும் பணியாளர்களை அடிமைகளைப் போன்று நடத்தாமல், அவர்கள் இயேசு தன்னுடைய சீடர்களிடத்தில் நடந்துகொண்டதுபோல் நடந்தால் சிறப்பாக இருக்கும்.

இயேசு தன்னுடைய சீடர்களிடம் ஓய்வெடுக்கச் சொன்னதற்குக் காரணம், எதிர்காலத்தில் அவர்கள் தங்களுடைய பணிகளை இன்னும் சிறப்பாகச் செய்திடலாம் என்பதற்குத்தான். இதைவிட இன்னொரு காரணமும் இருக்கின்றது. அது என்னவென்று தொடர்ந்து பார்ப்போம்.

அந்நேரத்தில் நிலவிய சமூக, அரசியல் சூழ்நிலை

இயேசு தன்னுடைய சீடர்களை ஓய்வெடுக்கச் சொன்னதற்கான இன்னொரு காரணம், அப்பொழுது நிலவிய சமூக மற்றும் அரசியல் சூழ்நிலை. இந்நிகழ்வுவுக்கு முன்பாக ஏரோது மன்னன் திருமுழுக்கு யோவானை தலைவெட்டிக் கொன்றுபோட்டிருந்தான். இன்னொரு பக்கம் இயேசு செய்துவந்த பணிகளைப் பார்த்து பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் அவர்மீது கோபத்தில் இருந்தார்கள். இத்தகைய சூழ்நிலையில்தான் தன்னுடைய சீடர்கள் பொதுவெளியில் இருந்துகொண்டு மக்களுக்குப் பணிசெய்வது நல்லது இல்லை என உணர்ந்து இயேசு அவர்களை பாலைநிலத்தில் உள்ள தனிமையான இடத்திற்குச் சென்று, சற்று ஓய்வெடுக்கச் சொல்கின்றார்.

சரி, பாலைநிலத்திற்கு ஓய்வெடுக்கச் சென்ற சீடர்களும் அவர்களோடு சென்ற இயேசுவும் அங்கு ஓய்வெடுத்தர்களா? இல்லையா? என்று தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

பொறுமையாக நடந்துகொண்ட இயேசு

இயேசுவும் அவருடைய சீடர்களும் தனிமையான ஓர் இடத்திற்குப் போகின்றார்கள் என்பதை அறிந்த மக்கள் அவர்களைப் பின்தொடர்ந்து வருகின்றார்கள். இதைப் பார்த்துவிட்டு, ‘ஓய்வெடுக்க வந்த இடத்திலுமாக இப்படி…’ என்று இயேசு மக்கள்மீது சினம்கொள்ளவோ, அங்கிருந்து அவர்களை விரட்டிவிட இல்லை. மாறாக, அவர்கள் ஆயனில்லாத ஆடுகளைப் போன்று இருப்பதைக் கண்டு, இயேசு அவர்கள்மீது பரிவுகொண்டு அவர்களுக்குப் பலவற்றைக் கற்பிக்கின்றார். இதையெல்லாம் பார்க்கின்றபோது இயேசு எப்போதும் மக்கள் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது. ‘எப்போதும் மக்கள் பணியில். இருந்தாலும் வசதிக்காக…’ என்று இயேசு மக்கள் பணிசெய்ய ஒருகுறிப்பிட்ட காலத்தை ஒதுக்காகாமல், எல்லாப் பொழுதையும் இறையாட்சிப் பணிக்காக அர்பணித்துக் கொண்டது நமக்கு வியப்பாக இருக்கின்றது. இயேசுவின் வழியில் நடக்கும் ஒவ்வொருவரும் இந்த உண்மையை உள்வாங்கிக் கொண்டு செயல்படுவது நல்லது.

சிந்தனை

ஒரு குருவாக இருந்து இயேசு தன் சீடர்களிடம் கரிசனையோடு நடந்துகொண்டதும் இறைமகனாக இருந்து மக்களிடம் பரிவு கொண்டதும் அவர் வழி நடக்கின்ற நமக்கு மிகப்பெரிய பாடமாக இருக்கின்றது. ஆகவே, இயேசுவைப் போன்று நம்மைச் சுற்றி இருபவர்களிடம் பரிவோடும் கரிசனையோடும் நடந்துகொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.