நற்செய்தி வாசக மறையுரை (பிப்ரவரி 06) பொதுக்காலம் நான்காம் வாரம் புதன்கிழமை

அவர்களது நம்பிக்கையின்மைக் கண்டு அவர் வியந்தார்

நிகழ்வு

மக்கள் வந்து போகக்கூடிய ஒரு நகரின் முக்கியமான சாலையோரத்தில் நாத்திகர்கள் மாநாடு நடந்துகொண்டிருந்தது. மேடையேறிய இரத்தினம் மிக ஆவேசமாகப் பேசத் தொடங்கினார்.

“நான் வானத்திலிருக்கின்ற சூரியனை நம்புகிறேன். ஏனென்றால், அதை என்னால் பார்க்க முடிகின்றது; தொலைவில் தெரிகின்ற மலையை நம்புகிறேன். ஏனென்றால், என்னால் அதைப் பார்க்கமுடிகின்றது. அருகில் ஓடுகின்ற நதியையும் நம்புகிறேன். ஏனென்றால், அதையும் என்னால் பார்க்க முடிகின்றது. ஆனால், கடவுள் என்ற ஒருவரை நம்பவே மாட்டேன். ஏனென்றால், அவரை என்னால் பார்க்க முடியவில்லை. பார்க்க முடியாத ஒருவரை எப்படி நம்புவது?… உங்களில் யாராவது கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?… அப்படிப் பார்த்திருந்தீர்கள் என்றால், எனக்கு அவரைக் காட்டுங்கள். நான் உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் தருகிறேன்”

இப்படிப் பேசிவிட்டு இரத்தினம் மேடையிலிருந்து கீழே இறங்கினார். அவர் கீழே இறங்கியவுடன், அவருடைய பேச்சை ஓரமாக நின்று கேட்டுக்கொண்டிருந்த பார்வையற்ற ஒருவர், மெதுவாக மேடையேறி, “யாராவது இரத்தினம் என்ற ஒருவரை எனக்குக் காட்ட முடியுமா?” என்றார். எல்லாரையும் அவரை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். கீழே இருந்த இரத்தினமோ, “பார்வையற்ற உனக்கு நான் எப்படித் தெரிவேன்… அதெல்லாம் முடியவே முடியாது” என்றார். இதைத் தொடர்ந்து பேசிய பார்வையற்ற அந்த மனிதர், “நான் பார்வையற்றவன் என்றால், நீங்களும் பார்வையற்றவர்தான், ஆன்மீகப் பாரவையற்றவர். அப்படிப்பட்ட உங்களுக்கு கடவுள் தெரியப் போவதுமில்லை, நீங்கள் அவரை நம்பப் போவதுமில்லை” என்று முடித்தார்

இந்நிகழ்வில் வரும் இரத்தினத்தைப் போன்றுதான் பலர் கடவுளைக் கண்கூடாகக் கண்டால்தான் நம்புவேன் என்று பிதற்றிக்கொண்டிருக்கின்றார்கள். இன்னும் ஒருசிலர் கடவுள் கண்முன்னால் வந்தால்கூட அவரை நம்புவதற்குத் தயாரில்லாதவர்களாக இருக்கின்றார்கள். இன்றைய நற்செய்தி வாசகம் கடவுள்மீது/இயேசுமீது நம்பிக்கை கொள்ளாத மக்களைப் பற்றியும் அவர்கள் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளாமல் இருந்ததால் எத்தகைய இழப்பினைச் சந்தித்தார்கள் என்பதையும் எடுத்துக் கூறுகின்றது. எனவே, அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவை புறக்கணித்த/ அவர்மீது நம்பிக்கை கொள்ளத் தயங்கிய மக்கள்

நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் சொந்த ஊருக்கு வந்து, தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்குகின்றார். அது ஓர் ஓய்வுநாள். அவருடைய போதனையைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்த மக்கள் சிறிதுநேரத்தில், ‘இவர் தச்சர் அல்லவா! ‘இவர் மரியாவின் மகன்தானே’ என்று அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றார்கள். இயேசுவை அவருடைய சொந்த ஊர் மக்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை, அவர்மீது அவர்கள் ஏன் நம்பிக்கை கொள்ளவில்லை என்று தொடர்ந்து பார்ப்போம்.

இயேசுவைக் குறித்து தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்த மக்கள்

இயேசுவை அவருடைய சொந்த ஊர் மக்கள் ஏற்றுக்கொள்ளாததற்கும் அவர்மீது அவர்கள் நம்பிக்கை கொள்ளாததற்கும் மிக முக்கியமான காரணம், இயேசுவைக் குறித்து தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று அவர்கள் நினைத்ததால்தான். ‘Familiarity breeds contempt’ என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்வழக்கு உண்டு. இதனை ‘அறிமுகமானவற்றின் அல்லது அருகாமையில் இருப்பவற்றின் மதிப்பு ஒருபோதும் உணரப்படுவதில்லை’ என்று இன்றைய நற்செய்தியின் சூழலுக்கு ஏற்றவாறு பொருள் எடுத்துக் கொள்ளலாம். ‘இவர் நம்மோடு இருந்தவர், நம்மோடு வளர்ந்தவர், இவருடைய பெற்றோர் நமக்கு அறிமுகமானவர்கள். அப்படிப்பட்ட இவரை நமக்குத் தெரியாதா?’ என்று இயேசுவின் சொந்த ஊர் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவும் அவர்மீது நம்பிக்கை கொள்ளவும் தயங்கினார்கள்.

இயேசுவைக் குறித்து தங்களுக்கு முழுமையாகத் தெரியும் என்று நினைத்த மக்கள், அவர் இறைமகன் என்று அறிந்துகொள்ளாதது மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது.

இயேசுவிடம் வெளிப்பட்ட ஞானத்தை வியப்போடு பார்த்த மக்கள்

இயேசுவை அவருடைய ஊர் மக்கள் ஏற்றுக்கொள்ளாததற்கும் அவர்மீது நம்பிக்கை கொள்ளாததற்கும் இரண்டாவது முக்கியக் காரணம், அவரிடம் வெளிப்பட்ட ஞானமும் அவருடைய கைகளால் ஆன வல்லசெயல்களும்தான். இயேசுவை ஒரு சாதாரண தச்சராகவே பார்த்துப் பழகிய அவருடைய ஊர் மக்கள், அவரிடமிருந்து இப்படியொரு ஞானம் வெளிப்பட்டதைத் தொடர்ந்து அவர்களால் அவரை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இயேசுவின் சொந்த ஊர் மக்களுக்குத் திறந்த மனதில்லை, அதனால்தான் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை, நம்பிக்கை கொள்ளவுமில்லை. இயேசுவும் அவர்களிடத்தில் நம்பிக்கை இல்லாததைக் கண்டு அவர்களிடத்தில் புதுமைகள் செய்யவில்லை.

சிந்தனை

நாசரேத்தைச் சார்ந்த மக்களுக்கு இயேசுவை ஏற்றுக்கொள்ளும் திறந்த மனமோ நம்பிக்கையோ இல்லை. அதனால் அவர்கள் இயேசுவிடமிருந்து ஆசி பெற முடியாமல் போனார்கள். நாம் அவர்களைப் போன்று இல்லாமல், இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்

Comments are closed.