அபு தாபி திருத்தூதுப் பயணம், நம்பிக்கையின் அடையாளம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரேபிய தீபகற்பத்தில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது, நம்பிக்கையின் அடையாளமாக அமைந்துள்ளது என்றும், இஸ்லாமிய-கிறிஸ்தவ கலந்துரையாடலை ஊக்குவிப்பதற்கு உதவும் என்றும், நற்செய்தி அறிவிப்பு பேராயத் தலைவர் கர்தினால் பெர்னான்டோ ஃபிலோனி அவர்கள் தெரிவித்தார்.

திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணம் குறித்து பீதேஸ் செய்திக்குப் பேட்டியளித்த கர்தினால் ஃபிலோனி அவர்கள், அப்பகுதியிலுள்ள கிறிஸ்தவ சமூதாயங்களின் வாழ்வுமுறை, தலத்திருஅவையின் பணிகள், அந்நாட்டின் பல்வேறு சூழல்கள் உட்பட பல கேள்விகளுக்குப் பதில் சொல்லியுள்ளார்.

2019ம் ஆண்டை, சகிப்புத்தன்மை ஆண்டாகச் சிறப்பிக்கும் ஐக்கிய அரபு அமீரகம், அரேபிய தீபகற்பம் முழுவதற்கும் எடுத்துக்காட்டாகவும், சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பதாகவும் விளங்க முடியும் என்று கர்தினால் பிலோனி அவர்கள் தெரிவித்தார்.

ஒருவருக்கொருவர் போரிடாமல், மற்றவரை மதித்து, ஒருவர் ஒருவருடன் சகிப்புத்தன்மையைக் கொண்டிருப்பது, குடிமக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு முதல் படி எனவும், அனைவரின் அனைத்து அடிப்படை உரிமைகளும் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்பட வேண்டியது, சகிப்புத்தன்மையின் இறுதி இலக்கு எனவும், கர்தினால் பிலோனி அவர்கள் கூறினார்.

பிலிப்பீன்ஸ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், மற்றும் ஏனைய நாடுகளைச் சார்ந்த எட்டு இலட்சம் கத்தோலிக்கர் உள்ளனர் என்றும், இவர்கள், இலத்தீன், மலபார், மலங்கரா மற்றும், கிரேக்க-கத்தோலிக்க வழிபாட்டுமுறைகளைச் சார்ந்தோர் என்றும் கர்தினால் தெரிவித்தார்

Comments are closed.