ஐக்கிய அமீரக திருத்தூதுப் பயணம், மைல்கல்லைப் பதிக்கும் நிகழ்வு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம், அந்நாட்டில் மைல்கல்லைப் பதிக்கும் நிகழ்வு என்று, அந்நாட்டு அமைச்சர், Sultan Ahmed Al Jaber அவர்கள் கூறியுள்ளார்.

பிப்ரவரி 3, இஞ்ஞாயிறு முதல், பிப்ரவரி 5, வருகிற செவ்வாய் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் Ahmed Al Jaber அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அபு தாபிக்கு வருவது, அராபிய வளைகுடாவுக்கு, திருத்தந்தை ஒருவர் மேற்கொள்ளும் முதல் திருத்தூதுப் பயணமாக அமைகின்றது என்றும், ஏற்பு, நல்லிணக்க வாழ்வு, சமுதாயத்தில் எல்லாரையும் இணைத்தல் ஆகிய ஐக்கிய அரபு அமீரகத்தின் நீண்டகால பண்புகளை உறுதிசெய்வதாய், இப்பயணம் அமைந்துள்ளது என்றும், அமைச்சர் Ahmed Al Jaber அவர்கள், கூறியுள்ளார்.

பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழ்கின்ற நாட்டில், பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், எவ்வித இடையூறுமின்றி தங்களின் மத நடவடிக்கைகளை அனுசரிப்பதை திருத்தந்தை காண்பார் எனவும், அந்நாடு முழுவதும் உள்ள, நாற்பதுக்கும் மேற்பட்ட ஆலயங்கள், அனைத்து விசுவாசிகளையும் செபத்திற்கு வரவேற்கின்றன எனவும், அமைச்சரின் அறிக்கை கூறுகின்றது.

அந்நாட்டில் இந்து, சீக்கியம், புத்தம் ஆகிய மதத்தினருக்கும் வழிபாட்டுத்தலங்கள் உள்ளன எனவும், எல்லா மதத்தினரையும் ஏற்கின்ற ஐக்கிய அரபு அமீரகத்தில், 200க்கும் மேற்பட்ட, நாடுகள் மற்றும் இனங்களைச் சார்ந்தோர் உள்ளனர் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.