மறையுரைச் சிந்தனை பிப்ரவரி 02)

இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக அர்பணித்த விழா

தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்குச் சொந்தம், எனவே அவர்கள் ஆண்டவருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும் (விப13 : 2) என்பது இஸ்ரயேல் மக்களுக்கு கொடுக்கப்பட்ட சட்டம். அதன் அடிப்படையில் இயேசு கிறிஸ்துவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படுகிறார்.

இயேசுவின் வருகைக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சிமியோன், அவரைக் கைகளில் தாங்கி இயேசுக்கிறிஸ்து எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதை இறைவாக்காக சொல்கிறார். இயேசு எதிர்க்கப்படும் அடையாளமாகவும், பலருடைய வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணமாகவும், புறவினத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளியாகவும் இஸ்ரேலுக்கு பெருமையாகவும் இருப்பார் என்பது அவருடைய வாக்கிலிருந்து வெளிப்படுகிறது.

இவ்விழா நமக்கு கொடுக்கும் அழைப்பு நாம் நமக்கானவர்கள் அல்ல, கடவுளுக்குச் சொந்தமானவர்கள் என்பதே ஆகும். எனவே நாம் நம்முடைய விருப்பம் போல அல்ல, நாம் கடவுளின் விரும்பம் அறிந்து கடவுளுக்கு உகந்தவர்களாக வாழவேண்டும்.
இயேசுகிறிஸ்து கடவுளுடைய திட்டத்தின் படி வாழ்ந்தார். அதற்காக தன்னுடைய உயிரையே கையளித்தார். இன்றைய இரண்டாம் வாசகத்தில் இவ்வாறு படிக்கக்கேட்கிறோம்: “சாவின் மீது ஆற்றல் கொண்டிருந்த அலகையை தன் சாவின்மூலம் வென்றுவிட்டார்.” ஆம் இயேசு நமக்காக உயிர் துறந்து நம்மை மீட்டுக்கொண்டார்.

காட்டில் ஓர் ஆயன் தன்னுடைய ஆடுகளை மேய்துக்கொண்டிருந்தான். அப்போது திடிரென்று எதிர்பட்ட ஒரு புலி ஆடுகள் மீது பாய ஆரம்பித்தது. இதனைச் சற்றும் எதிர்பார்க்காத ஆயன், ஆடுகளை அருகே இருந்த ஆற்றுப்பாலத்தின் வழியாக வேகமாக ஓட்ட ஆரம்பித்தான் ஆனால் அந்த ஆற்றுப்பாலமோ ஒரு மரப்பாலம், மரப்பாலத்தில் ஒட்டை வேறு இருந்தது. எனவே அந்த சிறிய ஓட்டையின் மீது தான் படுத்துக்கொண்டு ஆடுகளை அவன் மீது ஏறி ஓட அனுமதித்தான். ஆடுகள் எல்லாம் வேகமாக ஓடி புலியிடமிருந்து தப்பித்தன. ஆயனோ ஆடுகளின் மிதிபாடுகளால் உருக்குழைந்து கிழே கிடந்தான். ஆடுகளை விரட்டி வந்த புலி உருக்குழைந்து கிடந்த ஆயனை அடித்து இழுந்துச் சென்று சாப்பிட்டது. இப்படியாக ஆயன் தன்னுடைய உயிர் தந்து ஆடுகளைக் காப்பாற்றினான்,

இயேசுகிறிஸ்துவும் நம்மை மீட்க தன் உயிர் தந்தார் (யோவா 10 :10). இந்த நாளில் நாமும் இயேசு கிறிஸ்துவை போன்று பிற வாழ நம்மையே அர்ப்பணிப்போம். நம்முடைய பணிவாழ்வில் வரும் எதிர்ப்புகளை எல்லாம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவைபோன்று துணிவுடன் எதிர்க்கொள்ள ஆற்றல் பெறுவோம். அப்போது நாமும் இயேசுவின் உண்மைச் சீடர்களாக வாழமுடியும்.

Comments are closed.